கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி.

இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது.

யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கட்டடநிர்மாணத் துறையினர் அனுமதிப்பதில்லை.எனினும் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய எல்லா கட்டடங்களை விடவும் உயரமான ஒரு கட்டடமாக கலாச்சார மையம் கட்டியெழுப்பப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழர்களின் தாயகத்தில் உள்ள மிக உயரமான கட்டடம் அது. அதன் அசாதாரண உயரத்தை வைத்து, இந்தியா அதன் மேற் தளத்திலிருந்து வடபகுதியை கண்காணிக்கப் போகிறது என்றெல்லாம் கதைகள் பரவின. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல மாதங்களுக்கு ஆட்புழக்கமில்லாத ஒரு பொதுக் கட்டடமாக அது காணப்படுகிறது.

அக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின் அதை இந்தியப் பிரதமர் மோடி வந்து திறந்து வைப்பார் என்றும் திறப்பு விழா கோலாகலமாக ஒழுங்கமைக்கப்படும் என்றும் அதில் இசையமைப்பாளர் ரகுமானின் இசை நிகழ்ச்சியிருக்கும் என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் கடந்த திங்கட்கிழமை அமைதியாகவும் அழைக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை விருந்தினர்களின் முன்னிலையிலும் மெய்நிகர் நிகழ்வு ஒன்றில் கலாச்சார மையம் திறந்து வைக்கப்பட்டது.

திறப்புவிழா soft opening என்று அழைக்கப்பட்டது.மெய்நிகர் வைபவம் என்பதால் அது அவ்வாறு அழைக்கப்பட்டது என்று ஒரு விளக்கம் உண்டு.

ஆனால் திறப்பு விழாவை வைத்துக் கூறுவதென்றால் அது ஒரு பகுதியளவான திறப்புத்தான்.விழாவிற்கு வருகை தந்தவர்கள் கலாச்சார மையத்தின் கலையரங்கத்துக்குள் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

கலாச்சார மண்டபத்தின் ஏனைய பகுதிகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.மேலும் கலாச்சார மையத் திறப்பு விழா நடந்து கையோடு அது மீண்டும் மூடப்பட்டுவிட்டது. அது பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்படவில்லை.

எல்லாவற்றையும் விட முக்கியமாக கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில் இருக்கும் என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. கலாச்சார மையம் மாநகரசபை எல்லைக்குள் வருகிறது.

ஆனால் மாநகர சபையிடம் அவ்வாறான பிரம்மாண்டமான ஒரு மையத்தை நிர்வகிப்பதற்கு போதுமான நிதி இல்லை.

யாழ் மாநகர சபையின் வருமானம் அதற்குப் போதாது.எனவே அதை மத்திய கலாச்சார அமைச்சு அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரக்கூடிய நிலைமைகளே அதிகமாக தென்பட்டன.

மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டதும் அவர் கலாச்சார மையத்தை மாநகர சபை பொறுப்பேற்கும் என்று தெரிவித்தார்.

அதற்கு வேண்டிய நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார். இந்தியா அதற்குரிய நிதியை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்க முன் வந்ததாக ஒரு தகவல் உண்டு.

இதுதொடர்பாக கொழும்பில் நடந்த சந்திப்புக்களில் ஒன்றின் போது கலாச்சார அமைச்சின் பிரதானி ஒருவர் மாநகர முதல்வரிடம் “நீங்கள் இந்தியாவை நம்பக்கூடாது அரசாங்கத்தைத்தான் நம்ப வேண்டும்” என்ற தொனிப்பட அறிவுறுத்தியிருக்கிறார்.

அவர் அவ்வாறு கூறும்பொழுது கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதுவரும் அங்கிருந்திருக்கிறார்.

எனினும் யாழ் மாநகர சபை தன் கொள்ளளவை மீறி கலாச்சார மையத்தை பொறுப்பேற்க தயாராக காணப்படுகிறது.

ஆனால் இன்று வரையிலும் அவ்வாறு கலாச்சார மையத்தை இயக்குவதற்கு தேவையான நிர்வாக கட்டமைப்புக்கள் எவையும் உருவாக்கப்படவில்லை.அக்கட்டமைப்புகளுக்கு பொறுப்பாக ஒரு நிர்வாக சேவை அதிகாரியும் ஒரு கியூறேற்றரும் (curator) -எடுத்தாளுநரும்- நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

இடையில் மாநகரசபை கலாச்சார மையத்தை நிர்வகிக்கத் தேவையான உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன.

எனினும் உரிய நிர்வாகக் கட்டமைப்புக்கள் எவையும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் கலாச்சார மையம் திறக்கப்பட்டிருக்கிறது.

கலாச்சார மையத்தை அரசாங்கம் மத்திய கலாச்சார அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்தியா அதை தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது.

இப்போது கிடைக்கும் செய்திகளின்படி சிலசமயம் கலாச்சார மையத்தின் நிர்வாகம் ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற மையங்கள் உள்ளூர் மக்களின் பங்களிப்போடு நிர்வகிக்கப்படும் போதுதான் அவை மெய்யான பொருளில் பண்பாட்டு மையங்களாக திகழும் என்பதே உலக அனுபவம் ஆகும்.

ஆனால் கலாச்சார மையத்தை யார் நிர்வகிப்பது என்பது தொடர்பில் பொருத்தமான இறுதி முடிவுகள் எடுக்கப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் மேற்கண்டவாறு ஒரு மென் திறந்துவைப்பு நடந்திருக்கிறது.

ஒரு பிரம்மாண்டமான முழு அளவிலான திறப்புவிழா வரும் நொவம்பர் மாதமளவில் ஒழுங்கு செய்யப்படும் என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது சொஃப்ற் ஓப்னிங் எனப்படுவது பிரயோகத்தில் முழு அளவிலான திறந்துவைப்பு அல்ல என்றும் பொருள்.

இந்த மாதம் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தபோது அவர் கலாச்சார மண்டபத்தையும் திறந்து வைப்பார் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.மாறாக அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த இந்திய வெளியுறவு அமைச்சரும் இலங்கையின் பிரதமரும் இணைந்து மெய்நிகர் நிகழ்வு ஒன்றின்மூலம் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்திருக்கிறார்கள்.

திறக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக கலாச்சார மையம் திறக்கப்பட்டிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பிரதமர் மோடி வந்து அதை முழுமையாகத் திறந்து வைப்பார் என்றால் ஏன் அவசரப்பட்டு பகுதியளவு திறந்துவைக்க வேண்டும்?பிரதமர் மோடி வரும்வரையிலும் பொறுத்திருக்கலாம்தானே?

கடந்த சில மாதங்களாக இந்திய இலங்கை அரசாங்கத்துக்கு அதிக தொகை பணத்தை கடனாக கொடுத்து வருகிறது.

அந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவின் பிடி பலமடைந்து வர வேண்டும்.

அவ்வாறு இந்தியாவின் பிடி இலங்கைதீவில் பலமடைந்து வந்தால் இந்தியாவின் நிதி உதவியோடு உருவாக்கப்படும் இணைப்புத் திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கலாச்சார மண்டபத்தை முழுமையாக திறப்பது, பலாலி விமான நிலையத்தை இரண்டாம் கட்டத்திற்கு விரிவுபடுத்தி விஸ்தரித்து திறந்துவிடுவது, மூன்றாவதாக காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு ஒரு பயணிகள் போக்குவரத்து படகை ஓடவிடுவது போன்ற இணைப்புத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள்வரையிலும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டதாக செய்திகள் கிடைக்கவில்லை.

ஆனால் அதேசமயம் கலாச்சார மையம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் கொழும்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

அவற்றுள் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் நிறுவப்பட இருக்கும் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டம், இந்தியா தனது தென் கடலோர கண்காணிப்பை ஒப்பீட்டளவில் அதிகளவு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யும் ஓர் உடன்படிக்கை (MRCC)என்பனவும் அடங்கும்.

அதாவது இந்தியா கடனைக் கொடுத்து தனக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்கிறது.எனினும்,கலாச்சார மையத்தை மக்கள் பாவனைக்கு திறந்து விடுவது மேலும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது கலாச்சார மையம் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் போக்குவரத்துச் சேவை, மன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மற்றொரு பயணிகள் படகுச் சேவை போன்ற தமிழ் மக்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இணைப்புகளை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் இழுபட்டு இழுபட்டு நகர்கின்றன.

கலாச்சார மையம் கட்டப்பட்டு பல மாதங்களின் பின்னர் முழுமையாக திறக்கப்படாமலிருப்பது,பலாலி விமான நிலையத்தின் இப்போதுள்ள நிலைமையோடு ஒப்பிடத் தக்கது.

அவ்விமான நிலையம் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தின் கடைசி பகுதியில் அவசர அவசரமாக திறக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலும் ராஜபக்சக்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதை முன்னுணர்ந்து ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் அவசர அவசரமாக அதை திறந்தார்.

திறக்கப்பட்ட பொழுது அந்த விமான நிலையத்தில் கொள்ளளவின்படி சிறிய விமானங்கள்தான் அங்கே வந்து போகக்கூடியதாக இருந்தது.சுமார் 70 பயணிகளை ஏற்றி இறக்கக்கூடிய விமானங்கள் மட்டும்தான் அங்கே வந்து போகலாம்.

பயணிகள் ஒவ்வொருவரும் இருபது கிலோ நிறை கொண்ட பொதிகளைத்தான் எடுத்து வரலாம். இதனால் விமான நிலையத்தை அடுத்த கட்டத்துக்கு விஸ்தரிக்க வேண்டிய தேவை இருந்தது.

இந்தியா அதற்கு நிதி உதவி வழங்குவதாகவும் கூறியது. ஆனால் அதற்கிடையே பெருந்தொற்றுநோய் பரவியது.

அதனால் விமான நிலையம் மூடப்பட்டது. அதன்பின் விமான நிலையத்தை திறக்கப் போவதாக அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி கூறியிருக்கிறார்கள்.

சிலசமயம் ஊடகங்களில் விமான நிலையம் மீளத்திறக்கப்படும் திகதியும் அறிவிக்கப்படுவது உண்டு. உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி விமான நிலையம் திறக்கப்படும் என்று ஒரு செய்தி வந்தது.

ஆனால் இன்றுவரையிலும் அந்த விமான நிலையம் மீளத் திறக்கப்படவில்லை.

அண்மையில்கூட யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அமைச்சர் பீரிஸ் அந்த விமான நிலையத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும் அது திறக்கப்படவில்லை. அவசரமாக திறக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படாமல் அது மூடப்பட்டுவிட்டது.

யாழ் கலாச்சார மண்டபம் திறக்கப்பட்ட விதமும் அது யாருடைய நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது என்பது தொடர்பாக காணப்படும் குழப்பமும் தவிர்க்க முடியாதபடி பலாலி விமான நிலையத்தை ஞாபகப்படுத்துகின்றன.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு அது யாழ்ப்பாணத்தின் மிக உயரமான,ஆனால் ஆளரவமற்ற ஒரு பொதுக்கட்டடமாக இருக்கப்போகிறது?

-நிலாந்தன்-

Share.
Leave A Reply