இலங்கையில் முன்னொரு போதும் இல்லாத வகையில், அரசாங்கத்துக்கு எதிரான உணர்ச்சி அலை பரவியுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியைக் கவிழ்க்கவோ, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் குழம்பிப் போயிருக்கின்றன.

அரச எதிர்ப்பு அலை தீவிரமாகப் பரவியுள்ள சந்தர்ப்பங்களை எதிர்க்கட்சிகள் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்வது தான் இயல்பு.

ஆனால், தற்போதைய நிலையைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சிகள் எந்தளவுக்கு இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒன்றிணைந்திருக்கின்றன என்ற கேள்வி இருக்கிறது.

இந்தச் சூழலில், ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு கேட்கப்படுகிறது. அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரப்படுகிறது.

ஆனாலும், அதற்குப் பின்னர் நிலைமையை சமாளிப்பது எவ்வாறு என்ற தெளிவான திட்டமோ, இலக்கோ யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ராஜபக்ஷவினர் தங்களைச் சுதாகரித்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

மக்களின் அழுத்தங்களையும், போராட்டங்களையும் அவர்கள் இந்தளவுக்கு எதிர்பார்க்காவிட்டாலும், இதனைச் சந்தர்ப்பமாக வைத்துக் கொண்டு, தங்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நாட்டின் நிலவரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரண்டு நாள் விவாதத்தின் பின்னர், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரப் போவதாக அறிவித்தது.

அத்துடன் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைக்கப் போவதாகவும் அறிவித்தது.

இதற்காக உறுப்பினர்களின் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கைகள தொடங்கப்பட்டு பல நாட்களாகி விட்டது.

இன்னும் எத்தனை பேர் அதில் ஒப்பமிட்டுள்ளனர் என்ற விபரம், இந்தப் பத்தி எழுதப்படும் வரை தெரியப்படுத்தப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே பல நாட்கள் கழித்து தான் அதில் ஒப்பமிட்டார். அந்தளவுக்கு இருக்கிறது இதன் வேகம்.

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையும் கொண்டு வரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என்று ஜே.வி.பி. கூறியிருக்கிறது.

அதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் ஆதரவளிக்கத் தயார் என முன்னர் கூறியிருந்தார்.

ஆனால், இந்த விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், பேரம் பேச வேண்டும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை, குற்றப் பிரேரணை என்பனவற்றைக் கொண்டு வருவதாயின், அதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

அதற்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயாதீன அணியாகச் செயற்படும் தரப்புகளின் ஆதரவைப் பெற வேண்டும்.

ஆனால் அவர்கள், ஜனாதிபதியைப் பதவி நீக்கும் பிரேணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குழப்பமான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணையும், குற்றப் பிரேரணையும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தநிலையில், ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பதிலாக, இந்தச் சந்தரப்ப்பத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளலாம், என்றொரு கருத்தும் வலுவடைந்திருக்கிறது.

இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியே புதியதொரு அரசியலமைப்பு திருத்த யோசனையை முன்வைக்கவும் தீர்மானித்திருக்கிறது.

தற்போதைய கட்டத்தில், தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு 10 பில்லியன் ரூபா தேவைப்படும் என்றும், 3 மாத கால அவகாசம் தேவை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், நிமால் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு அடுத்து என்ன என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லை.

இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டால், புதிய ஆட்சியைத் தொடருவதற்கான ஆதரவும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இவ்வாறான நிலையில் தான், குழப்பதான தெரிவுகளையும், தேர்வுகளையும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாற்று அரசாங்கத்தை அமைப்பது,  என்று எதிர்க்கட்சிகள் குழப்பிக் கொண்டிருக்க, மீண்டும் புதிய கோப்பையில் பழைய கள்ளை கொண்டு வந்து, மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக காண்பிக்க அரசாங்கம் முனைகிறது.

இந்த அரசியல் குழப்பநிலைக்கு தெளிவான தீர்மானம் எடுக்கும் தலைமைத்துவங்கள் இல்லாமை, முக்கியமான ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

அரசாங்கத்தைப் பதவியில் இருந்து நீக்குவதற்குத் தேவையான ஆதரவைத் திரட்டுதல், ஒரு புறமும், அரசாங்கத்தைப் பதவி நீக்கிய பின்னர், நாட்டை நிர்வகிப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பது இன்னொரு புறமுமாக இரண்டு பிரதான சவால்கள் உள்ளன.

இந்த சவால்களுக்கு மத்தியில், இப்போதைக்கு சாதிக்க கூடிய ஒரு முக்கியமான விடயமாக இருப்பது, 20 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழித்து, மீண்டும் 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதாகும்.

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலுள்ளவர்களின் ஆதரவு உள்ளது.

அத்துடன், 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த ஆளும்கட்சியினரும், தாங்கள் தவறு செய்து விட்டதாக உணருகின்றனர்.

இவ்வாறான நிலையில், நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கவும், இதுபோன்ற குழப்பமான சூழல்களை தவிர்க்கவும், மீண்டும் 19 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கான வழிகளை இலகுவாக அடையலாம்.

அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை.

தற்போதைய நிலையில், அரசாங்கம் பலவீனமடைந்திருக்கிறது. ஆனால் பாராளுமன்றத்துக்குள் பலமாக இருக்கிறது.

பாராளுமனறத்துக்கு வெளியே காணப்படும் பலவீன நிலையை சமாளித்து சரிக்கட்டுவதற்கு அரசாங்கத்துக்கு  ஒரு தற்காலிக இடைவெளி தேவை.

அதனை எதிர்க்கட்சிகள் கொடுக்க முன்வந்தால், அதற்குப் பதிலாக அரசாங்கம் சில விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கக் கூடும்.

ஏனென்றால், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பின்றி நாட்டை நடத்த முடியாது. சர்வதேச உதவிகளை பெறுவதற்கு அது அவசியம்.

இந்தநிலையில், அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் இணங்க கூடும். செய்த தவறை திருத்திக் கொண்டு விட்டோம் என்று, அடுத்த முறை மக்களின் ஆணையைக் கோருவதற்கும் அது அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது தான் எதிர்க்கட்சிகளின் முதன்மையான இலக்காக தெரிகிறது.

அதற்கு முன்னதாக நம்பிக்கையில்லா பிரேரணை, குற்றப் பிரேரணை என்று இறங்கினால், அது குட்டையைக் குழப்பி விடும்.

எதிர்க்கட்சிகள் இப்போது எதற்கு முக்கியத்தும் அளிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே அரசாங்கம் தன்னைச் சுதாகரித்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கிட்டும்.

அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக கிளம்புகின்ற முயற்சியானது, பிரிந்து போன பங்காளிகளை அரசாங்கத்துடன் சேர்த்து வைக்கும் காரியத்துடன் முடிந்து போனாலும் ஆச்சரியமில்லை.

-கார் வண்ணன்-
Share.
Leave A Reply