காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது.

ராகுல் காந்தி நேபாளில் உள்ள கிளப்பில் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நிற்பது போன்றும், அவரைச் சுற்றி பலர் மது அருந்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துவரும் வேளையில், ராகுல் காந்தியின் இத்தகைய வீடியோ அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது.

பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ராகுலை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாரதிய ஜனதா கட்சியின் ஐ.டி விங் தலைவர் அமித் மல்வியா ட்விட்டரில், “காங்கிரஸ் கட்சி மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கும்போது, அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இரவு விருந்தில் பங்கேற்றிருக்கிறார்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா, “ராகுல் ராகுல் காந்தி நேபாளில் உள்ள தனது நண்பரின் திருமண விழாவிற்காக சென்றிருந்தார்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் திருமண விழாவில் பங்கேற்பது நமது கலாசாரம் மற்றும் பண்பாடு. இது ஒரு குற்றம் கிடையாது.

இனி நண்பர்களின் திருமண விழாவில் பங்கேற்பதுகூட குற்றம் என பா.ஜ.க அறிவிக்கக் கூடும் போல. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்தநாள் கொண்டாடவும், கேக் வெட்டவும் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்றது போல் ராகுல் காந்தி அழைக்கப்படாத விருந்தாளியாக செல்லவில்லை” என்று விளக்கமளித்திருக்கிறார்.

Share.
Leave A Reply