கொழும்புவின் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் நேற்று நடந்த வன்முறையை அடுத்து, பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அளித்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்ஷ ஏற்றிருக்கிறார்.

அடுத்து இலங்கை அரசியலில் என்னென்ன நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்று மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா, பிபிசி தமிழுக்காக கொழும்பிலிருந்து பணியாற்றும் செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத்திடம் பகிர்ந்து கொண்டார்.

  • ஜனாதிபதி உடனடியாக ஒரு புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவையை நியமிக்க வேண்டும். ஆனால் மக்களிடையே நிலவும் குழப்பத்தினால் யாரும் பதவியேற்க விரும்ப மாட்டார்கள்.
  • அமைச்சரவை நியமிக்கப்படாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
  • ஜனாதிபதி பதவி விலகினால், பிரதமர் ஜனாதிபதி பதவியை ஏற்கவேண்டும். ஆனால் இப்போது பிரதமரும் இல்லை.
  • இத்தகைய சூழ்நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும்.
  • அதுவும் சாத்தியப்படவில்லையெனில் நாடாளுமன்றம் ஒன்றுகூடி ஒருவரை ஏகமனதாக ஜனாதிபதியாக பதவி ஏற்கவேண்டும்.
  • இவை எதுவும் நடக்கவில்லையெனில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
  • ஆனால் தேர்தல் நடத்த அரசாங்கத்தின் கையில் பணம் இல்லை; 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே இருப்பதாக கூறுப்படுகிறது. இதனால் இப்போதைக்கு தேர்தல் நடத்தும் சாத்தியமும் இல்லை.
இலங்கை

பட மூலாதாரம், Getty Images

  • இப்போதிருக்கும் அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஜனதிபதிக்கு முழு அதிகாரம் வழங்குகிறது. இது கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு பதவியேற்ற போது கொண்டுவரப்பட்டது. இதை விடுத்து மீண்டும் பிரதமர் தலமையிலான நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் 19வது திருத்தத்தைக் கொண்டுவரலாம்.
  • 19வது திருத்தத்திலும் சில அதிகாரங்கள் மட்டும் தான் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படுள்ளது. இதையும் விடுத்து, புதிதாக 21வது திருத்தத்தைக் கொண்டு வரலாம். இது முழு அதிகாரத்தையும் நாடளுமன்றத்திற்கு வழங்கலாம்.
  • இவை எவையுமே சாத்தியப்படவில்லையெனில், ஒரு பெரிய முன்னெடுப்பாக, இலங்கை அரசியலைமைப்பிற்கு வெளியே சென்று ஒரு தீர்வைக் காணலாம் — பொதுமக்களின் கருத்தைக் கேட்டு, அதன்படி ஒரு முடிவை எடுக்கலாம்.
Share.
Leave A Reply