அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காவிட்டால், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் நாளாந்தம் ஏழரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடாஹேவா, இன்று (11) தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத்துக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் பகல் வேளையில் 5 மணி நேரமும், இரவில் இரண்டரை மணி நேரமுமாக ஏழரை மணி நேரமாக மின்வெட்டு நீடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலை எண்ணெய் உட்பட எரிபொருள் கிடைக்காததன் காரணமாக அனைத்து அனல் மின் நிலையங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் நேற்று முன்தினம் (10) முதல் உலை எண்ணெய் தீர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எரிபொருளை வழங்குமாறு கோரிய போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஒருமாதமாக நாளொன்றுக்கு 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்றும் குறிப்பிட்ட நேரத்துக்கே மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply