இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், நித்தியானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு, மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், நித்தியானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு, மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார்.
நித்யானந்தா என்றால் சர்ச்சை… சர்ச்சை என்றால் நித்யானந்தா என்கிற அளவுக்கு சர்ச்சைக்கு சொந்தக்காரராக இருந்த நித்யானந்தா, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சிறுமி கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். இதைத் தொடர்ந்து, நித்யானந்தா மீது பாலியல் புகார்கள் உட்பட அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தன.
நித்யானந்தா எங்கே போனார் என்று போலீஸ் தேடிக்கொண்டிருந்தபோது, அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி, தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த தீவு கைலாசா தீவு என்று கூறப்பட்ட நிலையில், அதை நித்யானந்தா கைலாசா நாடு என்று அறிவித்தார்.
நித்யானந்தா கைலாசா தீவில் இருந்தபடியே, தினமும் சமூக வலைதளங்கள் வழியாக சொற்பொழிவாற்றி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், நித்யானந்தா நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அவர் சொற்பொழிவாற்றுவதாக பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள், அவருடைய ஆதரவாளர்களால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டவை என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்யானந்தா இறந்துவிட்டாரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், நித்யானந்தா நேரில் தோன்றி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், நித்யானந்தா முன்பைப் போல இல்லை. உடல் மெலிந்து காணப்படுகிறார். அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்பது தெரிகிறது.
நித்யானந்தா அந்த வீடியோவில், “27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை.
பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை.
உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என் உடம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை.
மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களைக்கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை.
ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நித்யானந்தா, மே 11-ம் தேதியை எழுதி ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்ற குறிப்பு எழுடி வெளியிட்டிருக்கிறார். இதனால், நித்யானந்தாவுக்கு என்ன ஆனது, அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.