உத்தராகண்டில் திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின்பும் தங்களுக்கு பேரக்குழந்தை பெற்றுத் தராததால், ரூ.5 கோடி இழப்பீடு கோரி தன்னுடைய ஒரே மகன் மற்றும் மருமகள் மீது பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் சஞ்சீவ் (61) – சாதனா பிரசாத் (57). தங்கள் மகனை வளர்ப்பதற்காகவும், அவர் பைலட் ஆவதற்கான பயிற்சி பெறுவதற்காகவும், அவரின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்காகவும் தங்களின் சேமிப்பை செலவழித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஓராண்டுக்குள் பேரக்குழந்தை பிறக்காவிட்டால், ரூ.5 கோடி இழப்பீட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி அவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.

அவர்களுடைய மகனும் மருமகளும் இதுகுறித்து கருத்து தெரிவித்ததாக தெரியவில்லை.

வழக்கத்திற்கு மாறான இந்த மனுவை “மனரீதியான துன்புறுத்தல்” என்பதன் அடிப்படையில் தொடுத்துள்ளனர்.

தன் மகன் ஷ்ரேய் சாகருக்காக (35) அனைத்து சேமிப்புகளையும் செலவழித்துள்ளதாக கூறும் பிரசாத், 2006 ஆம் ஆண்டில் அவரின் பைலட் பயிற்சிக்காக, சுமார் ரூ.5 கோடி செலவழித்ததாக கூறினார்.

2007ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய அவர்களுடைய மகன் வேலையை இழந்ததாகவும், அதனால் தாங்கள் தான் அவரை பொருளாதார ரீதியாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆதரித்துவந்ததாகவும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஷ்ரேய் சாகருக்கு விமானியாக வேலை கிடைத்துள்ளது. தங்களுடைய ஓய்வுகாலத்தில் “தாங்கள் விளையாட பேரக்குழந்தை” பெற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டில் சுபாங்கி சின்ஹா (31) என்பவருடன் தன் மகனுக்கு திருமணம் செய்துவைத்ததாக அவர்கள் கூறுகின்றனர்.


ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பு, சுமார் ரூ.61 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஆடம்பர கார் மற்றும் வெளிநாட்டில் தேனிலவு ஆகியவற்றுக்காக தாங்கள் செலவு செய்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

“என் மகனுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவர்கள் இன்னும் குழந்தை குறித்துத் திட்டமிடவில்லை” என பிரசாத் தெரிவித்தார். “எங்களின் நேரத்தை செலவழிக்க பேரக்குழந்தை இருந்தால், எங்களின் வலியை தாங்கிக்கொள்வோம்” என அவர் கூறினார்.

பெற்றோரின் வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா ‘தி நேஷனல்’ ஊடகத்திடம் கூறுகையில், “மனரீதியாக கொடுமையை அனுபவித்ததாலேயே” அவர்கள் இழப்பீடு கோருகின்றனர் என தெரிவித்தார்.

“ஒவ்வொரு பெற்றோருக்கும் தாங்கள் தாத்தா – பாட்டி ஆக வேண்டும் என்பது கனவு. தாத்தா – பாட்டி ஆக வேண்டும் என்பதற்காக அவர்கள் பல ஆண்டுகளாக காத்துக் கிடப்பார்கள்” என அவர் தெரிவித்தார்.

ஹரித்வார் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள இந்த வழக்கு, வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply