நண்பனும் இல்லை எதிரியும் இல்லை…நிரந்தர நலன்களே அரசியல் என்பது உலக அரசியல் தத்துவம்.

இதில் குட்டித்தீவான இலங்கை மட்டும் என்ன விதிவிலக்கா? 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி நன்றாகத்தான் ஆரம்பத்தை கண்டது.

 

ரணிலும் மைத்ரியும்  இலங்கை அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி  நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருந்தது.

ஏனென்றால்  மஹிந்தவின் இரண்டாவது ஜனாதிபதி ஆட்சி காலகட்டம் பல விமர்சனங்களை எதிர்நோக்கியிருந்தது.

யுத்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறை ஜனாதிபதியான அவரும் அவரது சகோதரர்களும் குடும்பத்தினரும் ஏகபோக வாழ்க்கையையும் எவரும் எதிர்த்து குரல் எழுப்ப முடியாவண்ணம் அதிகார போக்குடன் கூடிய ஒரு சர்வாதிகார ஆட்சி முறையை முன்னெடுத்திருந்தனர்.

நல்லாட்சியில் இணைந்த மைத்ரி மற்றும் ரணில் இருவர் மீதும் அது வரை எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் இருந்திருக்கவில்லையென்ற ஒரே காரணமே வாக்காளர்களை அந்த பக்கம் திரும்ப வைத்தது. மக்கள் தூய்மையான  ஆட்சி ஒன்றை எதிர்ப்பார்த்திருந்தனர்.

அதற்குக் காரணம், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பிறகும் கூட நாடு பொருளாதார ரீதியில் எழுச்சி பெறாத அதே வேளை இனங்களுக்கிடையிலான  முறுகல்கள் நீறு பூத்த நெருப்பாக இருந்தன.

ஜே.ஆரின் திறந்த பொருளாதார கொள்கையில் ஊறி வளர்ந்த ரணில் விக்ரமசிங்க சிறந்த அரசியல் ராஜதந்திரியாக விளங்கியமையால் ஆட்சியை பொறுப்பேற்றவுடன் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் அதிகாரங்களை அதிகரித்து, நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்தரப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

ஆனால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத  பலகீனமான ஜனாதிபதியாகவே இருந்தார் மைத்ரிபால.

சில நேரங்களில் 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்காவிட்டாலும் கூட, மைத்ரிக்கு தனது அதிகாரங்கள் என்னவென்பது இறுதி வரை தெரியாமல் தான் இருந்திருக்கும்.

ரணிலின் பொருளாதார கொள்கைகளை மட்டுமின்றி அரசியல் சாணக்கியங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் மைத்ரிக்கு இருந்திருக்கவில்லை.

அவரது இந்த பலகீனங்களை எதிர்த்தரப்பிலிருந்த மஹிந்த அணியினர்  வெகு விரைவாக அறிந்து கொண்டனர்.

நல்லாட்சி மூன்று வருடங்களை அண்மித்திருந்த போது  மைத்ரி- / ரணில் முரண் வெளிப்படையானது. பிரதமர் என்னிடம் ஒன்றுமே கூறுவதில்லை என சிறுபிள்ளை போல அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார் மைத்ரி.

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் பலவீனமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இவரே என்பதை நாட்டு மக்களே உணர்ந்து கொண்ட தருணம் அது. அப்படியிக்கும் போது கண்களில் எண்ணெய் விட்டு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் மஹிந்த அணியினரைப் பற்றி கூற வேண்டுமா? உடனடியாக தமது கட்டுப்பாட்டுக்குள் மைத்ரியை கொண்டு வந்தனர். திரை மறைவில் பல திட்டங்கள் அரங்கேறின.

2018 ஒக்டோபர் மாதம்,  அரசியலமைப்பு பற்றிய அறிவு, மற்றும் அரசியல் தீர்க்கதரிசனமற்ற  மைத்ரிபால சிறிசேன,  மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார்.

பாராளுமன்றை கலைத்தார். இதை சவாலுக்குட்படுத்தினார்  ரணில். அவரது சட்ட நுணுக்கங்கள், அரசியல் முதிர்ச்சிக்கு முன்பாக மஹிந்த அணியினரும் மைத்ரிபாலவும்  தோற்றுப் போயினர்.

தனி ஒரு மனிதராக உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பெற்று மீண்டும் பிரதமரானார் ரணில். அத்தருணத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதே மஹிந்த அணியினரின் நோக்கமாக இருந்ததே ஒழிய புத்திசாலித்தனம் இருக்கவில்லை.

எந்த வித அரசியல்  மற்றும் நிர்வாக அறிவும் இல்லாதவராகவே ஜனாதிபதி மைத்ரிபால விளங்கினார்.  ஆகவே  மைத்ரி தெரிவு செய்த  பிரதமரான மஹிந்தவால் 52 நாட்கள் மட்டுமே பெயருக்கு பிரதமராக இருக்க முடிந்தது.

எனினும் மைத்ரி அன்று செய்த தவறின் தொடர்ச்சியாகத்தான்  பொதுஜன பெரமுன  பின்பு ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் அது எதிர்ப்பார்த்த பெறுபேறுகளைத் தரவில்லை என்பதை  இரண்டு வருடங்களுக்குள் நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டனர்.

அதன் விளைவே இன்று வாக்களித்த மக்களே அரசாங்கத்துக்கு எதிராக வீதியிலிறங்கி உள்ளனர்.

ஆனால் இப்போது வரலாறு திரும்பியுள்ளது. நல்லாட்சி காலத்தில் எவ்வாறு தனி மனிதராக அனைவரையும்  எதிர்கொண்டு நீதியை நிலைநாட்டினாரோ அதே பலத்துடன் பாராளுமன்றில் தனி ஒரு மனிதராக சாணக்கிய காய்களை நகர்த்தியுள்ளார் ரணில்.

நல்லாட்சி காலத்தில் எந்த ராஜபக்சக்கள் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என கங்கணம் கட்டி திட்டம் தீட்டினார்களோ அதே ராஜபக்சக்கள் தான் இன்று  தம்மை பாதுகாக்கவும் நாட்டின் எதிர்காலத்துக்காகவும் வேறு வழியின்றி ரணிலை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

இரண்டு தெரிவுகளுக்கும்  எவ்வளவு வித்தியாசங்கள்…! மைத்ரி அன்று மஹிந்தவை பிரதமராக்கியவுடன் நாடே கொதித்து போனது.

நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை. இறுதியில் ஜனாநாயக மீறல் ,அரசியலமைப்பு மீறல் என தீர்ப்பு கிடைத்தது.

ஆனால் இப்போது கோட்டாபய ராஜபக்ச  ரணிலை பிரதமராக்கியவுடன் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உட்பட பல நாடுகள் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன.

இது ரணில் என்ற தேர்ந்த அரசியல்வாதியின் கொள்கைகள் மற்றும் அனுபவங்களின்பால்,  குறித்த நாடுகள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவுள்ளன என்றால் மிகையாகாது.

அதே வேளை ராஜபக்சகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் வேறு எந்த தெரிவுகளும் இல்லையென்பதையும் இது உறுதியாக காட்டி நிற்கின்றது.

சிவலிங்கம் சிவகுமாரன்-

Share.
Leave A Reply