2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு கொழும்பு காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில் தமிழர்கள் – சிங்களர்கள் இணைந்து நினைவேந்தல் நிகழ்வு நடத்தி வருகிறார்கள்.
கடந்த காலங்களில் இத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும் என்பது மட்டுமல்ல.
இதற்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பதுமட்டுமல்ல. வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் – சிங்களர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை நடத்துகிறார்கள்.
அது நடக்கும் இடமும் மிக முக்கியமானது. தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள இந்த காலிமுகத் திடல் பகுதியில் கடந்த காலங்களில் ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி செயலகம் அருகிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்கிறது.
இந்த நிகழ்வை செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக செய்த ஃபேஸ்புக் நேரலையைக் காண இங்கே சொடுக்கலாம்.
தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, இனம் கடந்து மக்கள் அந்த நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். ஸ்தூபி அருகே நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
காலிமுகத் திடலில்
இதனிடையே முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடந்த இடத்தில் மக்கள் நினைவேந்தல் நடத்த கூடியிருக்கிறார்கள்.
வழக்கமாக இந்த நிகழ்வை தடுப்பதுபோல இந்த முறை ராணுவத்தினர் இந்த நிகழ்வைத் தடுக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் நடக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வை பிபிசி தமிழ் செய்தியாளர் எம்.மணிகண்டன் ஃபேஸ்புக் நேரலையாக வழங்குகிறார்.
பின்னணி
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதியை தனி நாடாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆயுதப் போராட்டம் நடத்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் – ராணுவத்துக்கும் இடையிலான இறுதிப் போர் கடைசி கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 17-18 தேதிகளில் நடந்தது.
சிறு பகுதியில் பல்லாயிரக் கணக்கான தமிழர்களும், விடுதலைப் புலிகளும் சிக்கிக்கொண்டனர்.
இவர்களை சுற்றி வளைத்த இலங்கை ராணுவம் கொடூரமான தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானவர்களை, சரணடைந்தவர்களை கொன்றதாக குற்றம்சாட்டுக்கு உள்ளானது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது குடும்பத்தினர் இந்த இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக அரசாங்கத் தரப்பில் உறுதி செய்யப்பட்டது.
இந்த இடத்தில் தமிழர் தரப்பில் நினைவுச் சின்னம் அமைக்கவும், அஞ்சலி செலுத்தவும் தமிழர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அரசாங்கமும், ராணுவமும் எதிர்த்து வந்தன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுவரும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (தற்போது பதவி விலகியிருக்கும்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழர்கள் – சிங்களர்கள் – முஸ்லிம்கள், மதம், மொழி கடந்து இணைந்து போராடி வருகிறார்கள்.
தலைநகர் கொழும்புவில் ஜனாதிபதி செயலகம் அருகே உள்ள காலிமுகத்திடலில் நடக்கும் இந்தப் போராட்டத்திடலில் இன்று 2022, மே 18-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு தமிழர் – சிங்களர் உள்ளிட்டோர் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.