எரிபொருள் கிடைக்காத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் சிசு உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதனை தியத்தலாவை மரண விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹல்தும்முல்ல சொரகுனே ரதகந்துர என்ற இடத்திலேயே இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி பிறந்த குறித்த சிசுவும் தாயும் சிறந்த நலத்துடன் இருந்தமையினால் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், போதியளவு பால் குடிக்காததால் குறித்த சிசுவுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பெற்றோர் முயற்சித்தனர்.

தந்தை முச்சக்கரவண்டியை வாடகைக்கு பிடிப்பதற்காக தேடிய போதிலும், எரிபொருள் பற்றாக்குறையால் முச்சக்கரவண்டியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதன் காரணமாக குழந்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தந்தை விசாரணையில் சாட்சியம் அளித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்று தந்தையிடம் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

Share.
Leave A Reply