கடந்த வாரம் இலங்கை சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடுதான். எரிபொருள் தட்டப்பாட்டை, தனியார் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட வசதிக்குறைவுதான் என்று, குறுகிய பார்வையில் அணுகிவிடக்கூடாது.

எரிபொருள் தட்டுப்பாடு என்பது, மிகப்பெரிய அடிப்படை வசதி சார்ந்த ஒரு பிரச்சினை. மனித சமூகத்தின் வளர்ச்சியில், விரைவுப் பிரயாணம் என்பது மிக முக்கிய அம்சம்.

மனிதனானவன் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு விரைவில் பயணிக்க முடியும் என்பது, மனித சமூகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சியின் அடிப்படையாக உருவாகிவிட்டது.

இன்றைய காலகட்டத்தில், நகரமயமாக்கலின் பின்னர் பயணம் என்பது, எமது வாழ்வியலின் அடிப்படை. அது ஸ்தம்பிக்கும் போது, எல்லாமே ஸ்தம்பித்து விடுகிறது.

வேலைக்கு போக முடியாது; பாடசாலைக்குப் போக முடியாது; அவசரத்துக்கு வைத்தியசாலைக்குப் போவது கூட, சிம்மசொப்பனமானதொரு சவாலாக மாறிவிட்டது.

பலருக்கு வேலையே, போக்குவரத்து சேவையை வழங்குவதுதான். அவர்களுக்கு வேலையே இல்லாது போய்விட்டது.

பொருட்கள் ஓரிடத்திலிருந்து, இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவதையும் எரிபொருள் தட்டுப்பாடு பாதிக்கிறது. இதனால் உணவு, மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

பொருட்களை வாங்கக் காசில்லை என்று ஏங்கும் ஒரு பகுதி மக்கள், காசிருந்தாலும் வாங்க பொருள் இல்லையென்று தவிக்கும் இன்னொரு பகுதி மக்கள் என, இல்லாமையின் கொடுமையை இலங்கையர்கள் நித்தம் நித்தம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கத்துடன், புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, உலக நாடுகளிடமும் சர்வதேச அமைப்புகளிடமும் உதவி கோரும் நடவடிக்கைகளை துரித கதியில் முன்னெடுத்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இந்தியா மீது, இலங்கையருக்கு ஆயிரம் விமர்சனங்கள், கசப்புணர்வுகள், கோபதாபங்கள் இருந்தாலும், ஒரு நல்ல சகோதரனைப் போல, இந்தியா நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

‘அர்த்த சாஸ்திரம்’ படைத்த கௌடில்யன், ‘நோய், துரதிர்ஷ்டம், பஞ்சம், படையெடுப்பு போன்றவற்றின் போது உனக்கு உதவி செய்பவனே, உன் உண்மையான சகோதரன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சாணக்கிய நீதிக்கேற்ப இந்தியா, ஒரு நல்ல சகோதரனாக இலங்கைக்கு, இந்தத் துரதிர்ஷ்ட சந்தர்ப்பத்தில் கைகொடுத்திருக்கிறது.

தற்போது தமிழ்நாடு, இரண்டு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய அத்தியாவசிய உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

பெரும்பான்மையின இலங்கையர்களால், இதுவரை காலமும் வெறுப்போடு பார்க்கப்பட்ட தமிழகம், இலங்கை வாழ் தமிழர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கைக்கும் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது.

இலங்கை மீதான இந்தியாவின் அக்கறைக்கு, இந்திய நலனே காரணம் எனச் சிலர் இன்றும் கற்பிதங்களை முன்வைக்கலாம். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

இந்தியாவின் சர்வதேசக் கொள்கை மீது, குறிப்பாக அயல்நாடுகள் மீதான கொள்கை மீது விமர்சனங்கள் உண்டு.

சர்வதேச அரசியல் என்பது, எப்போதும் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலைப் பொறுத்தவரையில், பொதுநலம் என்பது கூட, சுயநலத்தின் பாற்பட்டதே!

ஆனால், சுயநலத்தை அடைந்துகொள்வதற்குப் பல வழிகள் உள்ள போது, பொதுநலன்மிக்க வழியைத் தேர்ந்தெடுப்பது என்பது பாராட்டுக்குரியது.

இலங்கையின் நண்பன் எனச் சிலாகித்துக் கொண்டிருந்த, வட்டிக்கு கடன் தரும் நாடு(கள்), இன்று பெரியளவில் உதவிகள் செய்யாது இருக்கும் நிலையில், இந்தியா, இலங்கைக்கு செய்வது காலத்தால் செய்த உதவி ஆகும். ஆதலில், அது ஞாலத்தில் சாலப் பெரியது.

இந்தியாவின் உதவி இல்லாவிட்டால், இன்று எரிபொருள் ஒரு துளியும் கிடைக்காத, அதனால் பாதி நாளுக்கும் மேல் மின்சாரம் இல்லாத, அதனால் பொருட்தட்டுப்பாடு நிறைந்த, பஞ்ச நிலையின் உச்சத்தைத் தொடும் நாடாக, இலங்கை மாறியிருக்கும். நிற்க!

ரணில், மாயக்காரனோ மந்திரவாதியோ அல்ல. பழுத்த அரசியல் – நிர்வாக அனுபவம், நிறைந்த அரசியல் – பொருளியல் புரிதல், சர்வதேச நாடுகளுடனான உயர்ந்த உறவு ஆகியவற்றைக் கொண்ட ஓர் அரசியல்வாதி.

உயிருக்காகப் போராடிக் கொண்டி ருக்கும் ‘இலங்கை’ எனும் நோயாளிக்கு, இன்று, உயிர் பிழைப்பு வைத்தியம் செய்ய வந்திருக்கும் வைத்தியரே ரணில்!

இலங்கையை ராஜபக்‌ஷ எனும் வைரஸ் பீடித்திரு க்கிறது. பல வருடங்களாகப் பீடித்திருந்த அந்த வைரஸ் முழுமையாக நீங்கினால் தான், இலங்கைக்கு மீட்சி.

இலங்கையை மீட்பதற்கு அந்த வைரஸ் நீங்க வேண்டும்; அதுவரை உயிர் பிழைப்பு வைத்தியம் கூட செய்யமாட்டோம் என, தம்மை கொள்கைவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், வாய்ப்பிழைப்பு அரசியலை நடந்திக் கொண்டிருக்கும் போது, “கோட்டா போகாவிட்டால், நாம் அவசர நிலையில் கூட ஆட்சியைப் பொறுப்பேற்ற மாட்டோம்” என ‘கொள்கைவாத’ எதிர்க்கட்சிகள் கைவரித்த போது, உயிருக்காகப் போராடும் இலங்கையைக் காப்பாற்றுவதற்கு ரணில் முன்வந்திருக்கிறார்.

ரணில் மீது 1001 விமர்சனங்கள் இருக்கின்றன. ரணில் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என இன்றும் நம்புகிறேன்.

ஆனால், இன்றைய நிலைக்கு ரணில் போன்றதொரு ‘தந்திரி’ அவசியம். இது, அரசியல் செய்வதற்கான நேரமில்லை.

உங்கள் வீட்டில், பாலுக்கு அழும் குழந்தை, மருந்து கிடைக்காது தவிக்கும் நோயாளி, போதிய வருமானம் ஈட்ட முடியாது, வேளை உணவுக்கு என்ன செய்வது என ஸ்தம்பித்து நிற்கும் குடும்ப உறுப்பினர்கள், மின்வெட்டால் தவிக்கும் குடும்பம் இருந்தால், அப்போது உங்களுக்கு ‘கொள்கைவாத’ வாய்ப்பிழைப்பு அரசியலை விட, இன்றைய நிலையில் உயிர்பிழைப்பை முன்னுரிமைப்படுத்த வேண்டியதன் அவசியம் புரியலாம்.

அது புரியாவிட்டால், நீங்கள் சலுகைபெற்ற (privileged) சமூக நிலையிலிருந்து வருகிறீர்கள் என்று அர்த்தம்; அல்லாவிட்டால், ‘நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்ற கண்மூடித்தனமான பிடிவாதக்காரர் என்று அர்த்தம்.

ராஜபக்‌ஷர்கள் போக வேண்டும் என்பதில் துளியும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ராஜபக்‌ஷர்களை அனுப்ப அடுத்த தேர்தலுண்டு. அந்தத் தேர்தல் வரை, இலங்கையர்கள் உயிர்பிழைத்திருக்க வேண்டாமா?

இங்கு, “ராஜபக்‌ஷர்கள் போனால்தான், நாம் ஆட்சியைப் பிடிப்போம்” என்று வியாக்கியானம் பேசும் எவரும், சட்ட ரீதியாக ராஜபக்‌ஷர்களை போகவைப்பதை தாம், எப்படிச் செய்யப்போகிறோம் என்று சொல்லவேயில்லை.

ஏனென்றால், பாராளுமன்றத்தில் இன்று கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட ராஜபக்‌ஷ தரப்பை, சட்ட ரீதியாக வௌியேற்றுவது என்பது, அடுத்த தேர்தல் வரை சாத்தியமில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.

அப்படியானால் சட்டத்துக்குப் புறம்பான புரட்சி மூலம், அடித்துக்கலைக்கலாமே என்று சிலர் யோசிக்கலாம்.

நீங்கள் நல்லது செய்வதாக எண்ணிக்கொண்டு, காடையர் ஆட்சிக்கு ஆதரவு தந்தால், நாளை அந்தக் காடையர் ஆட்சியே சாதாரணமாகிவிட முடியும்.

உங்களுடைய தேவைக்காக சட்டத்தை மீறுவதை நீங்கள் நியாயப்படுத்தினால், நாளை இன்னொருவர் அவருடைய தேவைக்காக சட்டத்தை மீறுவதை அவர் நியாயப்படுத்துவார். சட்டத்தின் ஆட்சி என்பது கேலிக்கூத்தாகிவிடும்.

ராஜபக்‌ஷர்களைக் கலைக்க வேண்டுமானால், அடுத்த தேர்தலில் இலங்கையர்கள் ஒன்றிணைந்து, ராஜபக்‌ஷர்களை நிராகரிக்க வேண்டும். அதுதான் சாத்தியப்பாடனது; அதுதான் ஜனநாயகம். அதுவரை இலங்கையர்கள் பிழைக்க வேண்டும்.

இலங்கையர்களை உயிர்பிழைத்து இருக்க வைப்பதற்கு, பிரதமர் ரணில் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்கான ஆதரவு, அனைவராலும் வழங்கப்பட வேண்டும்.

எதிர்க்கட்சியின் கண்மூடித்தனமான நிலைப்பாட்டால், இன்று திறமையற்றதோர் அமைச்சரவையுடன் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார்.

ஒருவேளை ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்தன உள்ளிட்டோர் மனம் மாறினால், தமது கட்சியை விட, இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்தினால் இலங்கையர்கள், அவர்களுக்கு நன்றிக் கடனுடையவர்களாவார்கள். அதனை அவர்கள் செய்வார்களா என்பதுதான், இன்றிருக்கும் முக்கிய கேள்வி.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிடம் பாராளுமன்ற பெரும்பான்மையுள்ள போது, தனியாளாக ஆட்சியை ஏற்றிருக்கும் ரணில், பல தர்மசங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். பிரதி சபாநாயகர் தெரிவில் நடந்தது அதுதான்!

ஆனால், ரணிலால் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இலங்கையைப் பிழைக்க வைக்க முடியுமென்றால், அதுவே ரணிலின் அரசியல் பயணத்தின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும்.

வீராவேசப் பேச்சுகளால் இன்று இலங்கையைக் காப்பாற்ற முடியாது. அதுதான் உண்மை!

-என்.கே. அஷோக்பரன்

Share.
Leave A Reply