ரொபட் அன்டனி
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியவுடன் என்னை அழைத்து தனது அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும்படி கூறினார்.
அவருக்கு என் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. அதனை பொறுப்புடன் கூற விரும்புகிறேன். ஆனால் அதனை நான் நட்பு ரீதியாக மறுத்தேன்.
ரணில் எனக்கு புதியவர் அல்ல. 20 வருடங்களாக நான் அவருடன் செயற்பட்டிருக்கின்றேன்.
அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ரணிலுக்கு நாங்கள் இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்திருக்கிறோம்.
இதனை நான் தெளிவாக சஜித் பிரேமதாசவிடமும் தெரிவித்திருக்கிறேன் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
செவ்வியின் விபரும் வருமாறு,
கேள்வி: ரணிலின் அரசாங்கத்தில் தமிழ் முற் போக்கு கூட்டணி பங்கேற்குமா? என்பது பலரின் கேள்வி. நீங்கள் இல்லை என்று கூறிவிட்டீர்கள். காரணம் என்ன? நீங்கள் அதில் பங்கேற்று நாட்டை மீட்டெடுக்கலாம் அல்லவா?
பதில் : அதுவும் ஒரு நல்ல யோசனைதான். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியவுடன் என்னை அழைத்து தனது அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும்படி கூறினார். அவருக்கு என் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. அதனை பொறுப்புடன் கூற விரும்புகிறேன்.
ஆனால் அதனை நான் நட்பு ரீதியாக மறுத்தேன். ரணில் எனக்கு புதியவர் அல்ல. 20 வருடங்களாக நான் அவருடன் செயற்பட்டிருக்கின்றேன்.
அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் இன்றைய கட்டத்தில் இந்த அரசாங்கத்தின் தலைவர் அதிகாரபூர்வமாக கோட்டாபய ராஜபக் ஷ ஆவார்.
அதனால் எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனால் ரணிலுக்கு நாங்கள் இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்திருக்கிறோம்.
இதனை நான் தெளிவாக சஜித் பிரேமதாசவிடமும் தெரிவித்திருக்கிறேன். ரணிலுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறேன்.
கேள்வி : உங்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் யாராவது அரசுக்கு செல்லும் சாத்தியம் உள்ளதா? அவ்வாறான ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவின அல்லவா?
பதில் : தகவல்கள் வரும். அவ்வளவுதான். பேசப்படுகின்றவர்களாக நாங்கள் இருக்கின்றோம். தூங்குமூஞ்சிகளாக இல்லை. ஆனால் நாங்கள் எந்த முடிவாக இருந்தாலும் கட்சியாகவே எடுப்போம்.
கேள்வி : எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை பொறுப்பேற்றிருக்கலாம் என்று கருதினீர்களா?
பதில் : அப்படியான ஒரு கருத்து பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஜனாதிபதிக்கு 4 நிபந்தனைகளை சஜித் முன்வைத்தார்.
ஆரம்பத்தில் முன்வைத்த நிபந்தனைகள் மலினப்படுத்தி மீண்டும் முன்வைக்கப்பட்டது. அனுரகுமார திஸாநாயக்கவும் நிபந்தனை முன்வைத்தார்.
ரணில் நிபந்தனை முன்வைக்கவில்லை. ஒருவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர்கள் நிபந்தனை முன்வைத்திருக்கலாம். ஒரு மாற்று வழியை கண்டுபிடித்து கொடுங்கள் என்று ரணிலிடம் கூறியிருக்கலாம். ஆனால் எமது நிபந்தனைகளை கோட்டபாய ராஜபக்்ஷ ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக நாங்கள் எதிரணியில் இருக்கின்றோம்.
கேள்வி : எனினும் எதிரணியின் இரண்டு உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளனரே ?
பதில் : சேர் பெய்ல் என்று சொன்னவர் சென்றிருக்கின்றார். பரவாயில்லை. சேரை திருத்துவதற்கு அவர் சென்றிருக்கலாம்.
கேள்வி : ஆனால் ஹரின், மனுஷ நாணயக்கார போன்றோர் ஒரு கட்சியில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய அரசியல் கதாபாத்திரங்கள் அல்லவா ?
பதில் : ஆமாம், அது அப்படித்தான். அவர்களது வரலாறு அப்படித்தான் இருக்கிறது. ஆனால் தனிநபர்களை நம்பி நாங்கள் அரசியல் செய்ய முடியாது.
எமது தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தி அல்ல. அதில் ஒரு கூட்டணி கட்சி மட்டுமே. சஜித் பிரேமதாச எனது தலைவர் அல்ல. கூட்டணி தலைவர். அவ்வளவுதான். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி : அண்மையில் ரணிலுடனான சந்திப்பு எவ்வாறு அமைந்தது?
பதில் : நானும் சுமந்திரனும் ஹக்கீமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டோம். அப்போது கட்சிகளிலிருந்து யாரையும் பிரித்து எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
ஹரின், மனுஷ தொடர்பாகவும் பேசப்பட்டது. உங்கள் அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஒத்துழைப்பு வழங்குகிறோம். ஆனால் ஹரின் ஆரம்பத்திலிருந்தே சஜித்துடன் முரண்பட்டுக் கொண்டிருப்பதாக ரணில் என்னிடம் கூறினார்.
கேள்வி : நீங்கள் தீர்மானம் எடுக்கும் போது நெகிழ்வுப் போக்குகளுக்கு இடமில்லையா? எப்பவுமே இறுக்கமாகவே இருப்பீர்களா ?
பதில் : இல்லை. கொள்கை அரசியல், நடை முறை அரசியல் இரண்டுக்கும் நடுவில் நடுநிலையாகவே நான் பயணிக்கிறேன்.
என்னை சரியாக கூர்ந்து பார்த்தால் உங்களுக்கு அது புரியும். மறந்துவிட வேண்டாம். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்த சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம்.
கேள்வி : தற்போதைய இந்த நெருக்கடி குறித்து உங்களின் மதிப்பீடு என்ன?
பதில் : இன்று இலங்கை 52 பில்லியன் டொலர் கடன் நெருக்கடியில் இருக்கின்றது. கடன் வாங்குவது தப்பான விடயமல்ல.
அரசாங்கம் அல்லது நிறுவனம் கடன் வாங்கும். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் என அனைத்து நாடுகளும் கடன் வாங்கியுள்ளன.
ஆனால் அந்தக் கடனை வாங்கி என்ன செய்கிறோம் என்பதே இங்கு முக்கியம். இலாபம் வராத முட்டாள்தனமான முதலீடுகள் செய்யப்பட்டமையே இன்று எமக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது.
எனவே கடன்களை செலுத்த வேண்டும். அடுத்ததாக தற்போது உடனடி அவசர தேவைகளுக்கு எம்மிடம் டொலர் இல்லை. அத்துடன் கடனை மீளச் செலுத்துவதற்கு டொலர் இல்லை.
தற்போது நாம் கடன் கட்ட முடியாது என்று அறிவித்திருக்கின்றோம். இதனை முதலில் செய்திருக்க வேண்டும். அவகாசம் தரும்படி கேட்டிருக்கலாம். அதனை செய்யவில்லை. அடாவடித்தனமாக இருந்துவிட்டனர். அதற்கு நாம் தற்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி :விரைவில் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டுமா?
பதில் : நிச்சயமாக பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். காரணம் புதிய மக்கள் ஆணை பெறப்படவேண்டும். தேர்தலின் மூலமாக வரப்படுகின்ற அரசாங்கமே ஸ்திரமான அரசாங்கமாக இருக்கும். சட்டபூர்வமான அரசாங்கமாக இருக்கும். சிலர் பாராளுமன்றத்திற்கு வெளியே அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கின்றனர். அது சரிவராது.
கேள்வி : தற்போதைய நெருக்கடியில் மலையக மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வில் கஷ்டப்படுகின்றனர். அது தொடர்பில் என்ன நடவடிக்கை பிரதிநிதியாக எடுத்தீர்கள்?
பதில் : மலையகத் தமிழர்கள் எனும்போது எல்லோரும் தோட்டத் தொழிலாளர்கள் அல்ல. 15 லட்சம் மக்களில் ஒன்றரை இலட்சம் பேர் மட்டுமே தோட்டத் தொழிலாளர்கள்.
பல இடங்களிலும் மலையக மக்கள் என்று பரந்து விரிந்து வாழ்கின்றனர். ஒன்றரை லட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
பின்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். இந்தியா, ஜப்பான், தமிழக அரசாங்கங்கள் எமக்கு உதவி செய்கின்றன. உலக வங்கியும் உதவி செய்திருக்கின்றது. இவற்றை இந்த பின்தங்கிய மக்களுக்கான உதவியாக வழங்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம்.
கேள்வி : தற்போதைய நெருக்கடி போக்கை பார்க்கும்போது அரசியல் தீர்வு சாத்தியமா?
பதில் : அரசியல் தீர்வு தொடர்பாக நாம் பேசவேண்டும். மலையக அரசியல் பிரச்சினை, முஸ்லிம் மக்களின் பிரச்சினை என சகல பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும்.
காணாமல்போனோர் பிரச்சினை, அரசியல் கைதி பிரச்சினை, காணிப் பிரச்சினை என்ற விடயங்கள் இந்த போராடும் மக்களிடம் கூறப்பட வேண்டும்.
மலையக மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வேண்டும். முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்தும் பேசவேண்டும். வெறுமனே உணவு, மருந்து என்பனவற்றை மாத்திரம் இந்த போராட்டங்களுக்கு வரையறுக்க முடியாது. போராட்டக்காரர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டும்.
கேள்வி : மே 9 வன்முறைகள் இந்த சமூகத்துக்கு எதனை கூற வருகின்றன?
பதில் : அதனை ராஜபக் ஷ வன்முறை என்றே கூற வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட சகலரும் கைது செய்யப்பட வேண்டும்.
இதனை யார் தூண்டி விட்டது என்பதை மக்கள் அறியவேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மக்களுக்கு எதிராக தனி சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது போராட்டம் நடத்தப்பட்டது.
மலையக மக்களின் உரிமை பறிக்கப்பட்ட போது போராட்டம் நடத்தப்பட்டது. மக்கள் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் செய்தபோது அதனை அடித்து நொறுக்கினார்கள். அதுதான் தற்போது மீண்டும் பிரதிபலிக்கிறது என்று நம்புகிறேன்.
கேள்வி : நான் தற்போது சில அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை உங்களுக்கு காட்டுகின்றேன். அவர்கள் தொடர்பான உங்கள் மதிப்பீட்டை நீங்கள் கூறலாம்..?
டலஸ் அழகப்பெரும
எனது நண்பர். நாகரீகமான பண்பான மனிதர். அவ்வளவுதான் கூறமுடியும். இருக்கும் இடம் சரியில்லை என்பதால் வேறு எதையும் கூற முடியாது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இவர் தன்னை இந்தியாவின் காவல்காரன் என்று கூறினார். ஆனால் அவரது இரண்டாவது பதவியேற்புக்கு நான் சென்றபோது அவரை தென்னாசியாவின் காவல்காரனாக இருக்குமாறு கூறினேன். சரி என்று கூறினார்.
கேள்வி : இவரை மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருட பூர்த்தி நிகழ்வுக்கு அழைக்க விரும்புகிறீர்களா?
பதில் : இவரை அல்ல. நாம் தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைக்க விரும்புகிறோம். இந்திய பிரதமரும் அழைக்கப்படலாம். நேரமிருந்தால் வருவார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்
எனது அடுத்த ஆதாரம் எனது அடுத்த ஆசனத்துக்கு அடுத்த ஆசனத்தில் இருப்பவர். நான் பன்னிரெண்டாம் ஆசனத்தில் இருப்பேன். பதின்மூன்றாம் ஆசனத்தில் ரணில் அமர்ந்திருந்தார்.
14ஆம் ஆசனத்தில் சம்பந்தன் அமர்ந்திருக்கிறார். மூத்த தலைவர். சிறந்த தலைவர். அவரது உடல் பலவீனமாக இருக்கலாம். ஆனால் அவரது அறிவு கூர்மையாக இருக்கின்றது.
கேள்வி : பாராளுமன்றத்தில் பிரபலமான தலைவர்களுக்கு அருகில்தான் அமர்ந்திருக்கிறீர்கள்?
பதில் : எனது பக்கத்தில் அமர்ந்தால் பிரதமர் ஆகிவிடலாம். ரணில் எனது பக்கத்தில் அமர்ந்தார். பிரதமர் ஆகிவிட்டார். தற்போது மைத்திரி வந்திருக்கிறார். ரணில் ஜனாதிபதியாகி மைத்திரி பிரதமர் ஆகலாம்? என்ன செய்வது? நான் 13 ஆம் இலக்கத்தில் அமரவில்லையே?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
இவர் 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு செயலாளராக இருக்கும் போதே நான் முரண்பட்டேன். அப்போது யுத்த காலப்பகுதியில் நடந்த விடயங்களுக்காக நான் இவரை எதிர்த்து இவருடன் முரண்பட்டேன். நேரடியாக அவருடன் முரண்பட்டோம்.
சந்திரிகா குமாரதுங்க
எனது நண்பர். நல்லவர். சில தினங்களுக்கு முன்னர் அவர் தனியாக யுத்த விடயத்துக்காக தீபமேற்றி கொண்டிருந்ததை பார்த்தேன். அதனை அவர் தனது தந்தை பண்டாரநாயக்கவின் சிலைக்கு முன்பாக ஏற்றியிருக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு அவரது தந்தையும் ஒரு காரணம்.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்
எனது நண்பர். எனக்கும் அவருக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. நட்பும் இருக்கின்றது. முரண்படும் போது முரண்படுவோம். நட்பின் போது நட்பு பாராட்டுவோம். எம் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது, ஒரு பிரச்சினையை அத்துடன் விட்டுவிடுவோம். தொடரமாட்டோம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
இந்நாள் பிரதமர். நல்லவர். வல்லவர். அவரது பலமும் எனக்கு தெரியும். பலவீனமும் எனக்கு தெரியும். பலவீனம் குறித்து பேசமாட்டேன். பலம் என்னவென்றால் அவர் ஒருவராக வந்து ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவர் எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது நான் அவரிடம் ஒரு விடயத்தை கூறினேன்.
அதாவது நீங்கள் சிங்கள மக்களின் மனதை வென்ற தலைவர். நீங்கள் ஒரு தீர்வை கொடுத்தால் நிச்சயமாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அதனை செய்து காட்டுங்கள் என்று அவருக்கு நான் கூறினேன். மண்ணை மீட்டது போல் தமிழ் மக்களின் மனங்களை மீட்குமாறு கூறினேன். ஆனால் அவர் அதனை செய்யவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான்
அவர் தலைவராக பொறுப்பேற்றதும் வாழ்த்து தெரிவித்தேன். அவ்வளவுதான்.
கேள்வி : மலையகத்தில் இரண்டு முகாம்கள் இருக்கின்றன (இடைமறிப்பு)
பதில் ; இல்லை ஒரு முகாம்தான் இருக்கின்றது. அது தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமே. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு கட்சி அவ்வளவுதான். நாங்கள் மூன்று கட்சிகள் சேர்ந்து ஒருமுகாமாக இருக்கின்றோம்.
இவர்கள் தரப்பில் இருவர் இருக்கின்றனர். அவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் நாங்கள் வளர்ந்து விட்டோம். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் மலையகத்தை பொற்காலமாக உருவாக்கினோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
வரலாறு காணாத ஒரு முறையிலேயே தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் தமிழக முதல்வராக வரும்போது அவர் மீது ஒரு சந்தேகம் இருந்தது.
தந்தை எட்டடி பாயும்போது இவர் 4 அடியாவது பாய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் தற்போது 32 அடிகள் பாய்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலேயே தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக கருதப்படுகிறது. இந்தியாவில் ஒரு பிரபலமான முதலமைச்சராக இந்தியாவின் ஊடகங்கள் அவரை தெரிவு செய்கின்றன.
கேள்வி : ஸ்டாலினின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?
பதில் : தெரியவில்லை. அவரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் அவருடைய சமூகநீதி கொள்கை சிறப்பாக இருக்கின்றது.
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்கள் பெண்கள் போன்றோரை நோக்கி அவரது செயற்பாடுகள் இருக்கின்றன.
அந்த அவரது சமூகநீதி கரங்கள் எமது மலையக மக்களையும் அரவணைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருக்கின்றேன். அந்த கோரிக்கை அவர்கள் கைக்கு சென்றிருக்கின்றது. வெகுவிரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு தமிழக முதல்வரை சந்திக்கும்.
கேள்வி : மனோ கணேசன் தீர்மானம் எடுக்கும் போது எடுக்கின்ற எடுகோள்கள் என்ன?
பதில் : என் மனச்சாட்சி சொல்வதை நான் செய்கிறேன். ஒரு மனிதன் என்றால் என்ன? சிந்தனை, சொல், செயல். இந்த மூன்றும் மனச்சாட்சிப்படி செயற்படுகின்றன.
அவையே என்னை தீர்மானிக்கின்றன. கண்டியில் 15 வருடங்களாக ஒரு தமிழ் எம்.பி. இருக்கவில்லை. மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தார்கள். சிங்களவர்கள் இருந்தார்கள்.
அதனால் நான் கண்டியில் 2010 இல் போட்டியிட்டேன். தலைவர் என்றால் சவால்களை சந்திக்க வேண்டும். அதனால்தான் போட்டியிட்டேன். நான் தோல்வி அடையவில்லை.
மாறாக வன்முறை காரணமாக வெற்றிபெற முடியவில்லை. நான் அன்று இட்ட வித்து தான் இன்றுவேலு குமாராக வளர்ந்திருக்கிறது. நான் ஓடி ஒளியவில்லை.
எனது தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபடியும் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்திருக்கிறேன். நான் நீண்ட நாட்கள் அரசியலில் இருக்கமாட்டேன். எல்லோருக்கும் ஒரு ஆரம்பம் முடிவு இருக்கும்.
கேள்வி : அப்படியானால் அடுத்த தேர்தலில்?
பதில் : பொறுத்திருந்து பாருங்கள்.