“எதிர்க்கட்சிகளை வளைத்துப் போட்டு, ஆட்சியைக் கவிழ்ப்பது, அதிகாரத்தைப் பெறுவது, பெரும்பான்மை பலத்தை உறுதி செய்வது எல்லாமே, ராஜபக்ஷவினருக்கு கைவந்த கலை. அ ந்த அணியில் தற்போது ரணிலும் இணைந்திருக்கின்றார்”
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு இடப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
ராஜபக்ஷவினர் அவரை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்தமைக்கு, முக்கியமான காரணம், பொருளாதார நெருக்கடியில் இருந்து, நாட்டை மீட்பதற்கு பொருத்தமானவர் அவர் தான் என்ற தகைமை மாத்திரமல்ல, – தங்களைத் தற்போதைய நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்கு, ரணிலை விடப் பொருத்தமான வேறெவரும் இல்லை என்பதும் தான்.
ரணில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட போது, தயக்கத்துடன் ஒதுங்கியிருந்த கட்சிகள் கூட, ஒரு கட்டத்தில் அவரை நெருங்கி அவரது அரசுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தன.
ஆனால், அடுத்து வந்த நாட்களில், கோட்டா- ரணில் அரசாங்கம், ஆதரவு கொடுத்த கட்சிகளையே உரசிப் பார்க்கத் தொடங்கி விட்டது. அமைச்சர்களின் நியமனம் அதற்கு ஒரு உதாரணம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னான்டோ, மனுஷ நாணயக்கார, சுயாதீன அணியைச் சேர்ந்த விஜேதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, ரிரான் அலஸ் ஆகியோர், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேசப்பட்ட போதும், தனிநபர்களை இழுத்து ஆட்சியை அமைப்பதிலேயே கோட்டா- ரணில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது.

இது, இடைக்கால அரசுக்கு ஒத்துழைக்க முற்பட்ட கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சர் பதவிகளுக்காக ஆட்களை இழுத்து, தங்களின் கட்சிகளை உடைக்க இந்த அரசாங்கம் முனைகிறது என்ற சந்தேகம் அந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கும் பலர் அரசுடன் இணையத் தயாராகி வருகின்றனர்.
அவர்களும் போனால், மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சுதந்திரக் கட்சி, இன்னும் சிதைந்து விடும்.
ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த விடயத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. ஏனென்றால், அந்தக் கட்சியில் உள்ள பலருக்கு ரணில் – சஜித் தலைமைத்துவங்கள் குறித்த பெரிய முரண்பாடுகள் இல்லை.
இரண்டு பேரையுமே பச்சை நிறமாகத் தான் பார்க்கிறார்கள். எனவே, ரணில் அதிகாரம் பெற்ற அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு கொள்கை ரீதியாக அவர்களுக்கு கூச்சமும் வரவில்லை, அதுபற்றி அவர்கள் கவலைப்படவுமில்லை.
இது சஜித் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. புதிதாக கட்டியெழுப்பிய கட்சியாக இருந்தாலும், அது இன்னமும் பச்சை நிறத்தில் இருந்தோ, யானைச் சின்னத்தில் இருந்தோ முற்றாக விடுபடவில்லை.
எனவே, எந்த நேரத்திலும் தனது தரப்பில் உள்ளவர்கள், காலை வாரி விட்டுப் போகலாம் என்ற எச்சரிக்கை சஜித்துக்கு உள்ளது.
அதுபோலவே, பொதுஜன பெரமுனவின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்டு, சுயாதீன அணியில் இடம்பெற்றிருந்தவர்களும் அரசாங்கத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.
இது விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற சுயாதீன அணியினரையும் அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.
தங்களின் அணிகளை அல்லது கட்சிகளைப் பலவீனப்படுத்தி, கோட்டா – ரணில் கூட்டு, தமது அரசாங்கத்தை பலப்படுத்திக் கொள்கிறதோ என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது.
எதிர்க்கட்சிகளை வளைத்துப் போட்டு, ஆட்சியைக் கவிழ்ப்பது, அதிகாரத்தைப் பெறுவது, பெரும்பான்மை பலத்தை உறுதி செய்வது எல்லாமே, ராஜபக்ஷவினருக்கு கைவந்த கலை.

ஐ.தே.க.வின் பிரதி தலைவராக இருந்த கரு ஜயசூரிய, பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலர், முன்னர் மஹிந்த ராஜபக்ஷவினால் இவ்வாறு இழுக்கப்பட்டவர்கள் தான்.
18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக பெரியதொரு அணியை அப்போது ரணிலிடம் இருந்து பிரித்தெடுத்திருந்தார் மஹிந்த.
அவர்களில் பலர் மீண்டும் ஐ.தே.க.வுக்குத் திரும்பினர். இப்போது அவர்களில் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்துள்ளனர்.
அதே பாணியில் தான், இப்போது கோட்டா- ரணில் அரசாங்கம் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தும் வகையில், அமைச்சர் பதவிகளுக்கு ஆட்களை இழுக்கிறதா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர், முக்கியமாக நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான சர்வதேச உதவிகள் குறித்த சாதகமான பெறுபேறுகளாகும்.
இந்த சாதகமான நிலை எட்டும் வரை, ராஜபக்ஷவினர் பொறுமையாக இருப்பார்கள். ஏனென்றால், இந்த நெருக்கடியை கையாளுவதில் அவர்கள் தோல்வியடைந்து விட்டார்கள். அதேவேளை, நெருக்கடியில் இருந்து நாடு மீள்வதற்கிடையில், தங்களை மீளுயிர்ப்புச் செய்து கொள்வது தான் அவர்களின் திட்டம்.
அரசாங்கத்தின் பதவிகளை மட்டும் தான் அவர்கள் இழந்திருக்கிறார்களே தவிர, அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கின்ற நிலையில் தான், அவர்கள் இருக்கிறார்கள்.
இன்னமும் கூட பஷில் ராஜபக்ஷ தான் அரசாங்கத்தின் முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கிறார் என்று, சுயாதீன அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
ராஜபக்ஷவினருக்கு இப்போது தேவைப்படுவது ஒரு குறுகிய காலஅவகாசம். மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்தியும், எதிர்ப்பும் தணியும் வரையான ஒரு ஓய்வுக் காலம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
அந்த இடைவெளியை நிரப்ப வந்தவர் தான் ரணில். அந்த வேலையை அவர் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார். அவ்வப்போது, பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும ஆட்டுகிறார்.
‘கோட்டா கோ கம’ வுக்கும் ஆதரவு தெரிவிக்கிறார். அதே கோட்டாவுடன் இணைந்து ஆட்சியையும் நடத்துகிறார்.
அவர் பதவிக்கு வந்த பின்னர், கோட்டா வீட்டுக்குப் போ போராட்டம் தொய்வடையத் தொடங்கியிருக்கிறது. இது தான் ராஜபக்ஷவினரின் முதல் வெற்றி.
‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற போராட்டம் தான் முதலில் தொடங்கியது. மஹிந்த ராஜபக்ஷவின் பதவியிறக்கத்துடன், அந்த இலக்கு நோக்கிய பயணம் திசை திருப்பப்பட்டது. அதனை வெற்றிகரமாகச் செய்தவர் ரணில்.
அவர் இப்போது அரசாங்கத்திலும் இருந்து கொண்டு கோட்டா கோ கமவுடன் பேசுவதற்கும் முனைகிறார். அவர்களையும் தனது பயணத்தில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.
இதன் மூலம், ராஜபக்ஷவினருக்குத் தேவையான அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கிறார். 2024 ஆம் ஆண்டு வரை எந்த தேர்தலையும் நடத்துவதில்லை என்றொரு முடிவு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அது உண்மையானால், கோட்டா- ரணில் இணையின் ராஜபக்ஷ மீட்பு போரின் முக்கியமான அடைவாக அது இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொட்டு தன்னை மறுசீரமைத்துக் கொண்டு மீண்டும் தயாராகி விடும்.
அது ஆட்சி கைமாறுவதை தடுப்பதற்கு கிடைத்துள்ள வாய்ப்பாக அமையும். இதனையெல்லாம் ரணில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் மூலோபாயம் என்ற வகைக்குள் உள்ளடக்கி கொள்வார்.
முதலில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்போம், பின்னர் அரசியல் நெருக்கடியை தீர்ப்போம் என்று அவர், மக்களுக்கு கூறுவார்.
நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணமே தவறான ஆட்சி நிர்வாகம் தான். அந்த தவறான ஆட்சி நிர்வாகத்தை நடத்தியவர்களும், அதற்கு தலைமை தாங்கியவரும் மாற்றப்படாமல், காலத்தை கடத்துவது மட்டும் தான் உத்தியாக உள்ளது.
ராஜபக்ஷவினரைப் பாதுகாக்கும் ரணிலின் திட்டம், ஒவ்வொன்றாக நடந்தேறுகிறது. ரணில் இந்த வேலையை அவர்களுக்காக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
-சத்ரியன்-

