சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 11 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கையின் அதி சிறந்த வீராங்கனை சாரங்கி சில்வா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
பவ்ட் டி மொண்டே விளையாட்டரங்கில் நடைபெற்ற அத்லெட்டிக் ஏஜ்னீவ் 2022 போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குபற்றிய 26 வயதான சாரங்கி சில்வா, 6.33 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
எவ்வாறாயினும், சுகததாச விளையாட்டரங்கில் கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வு போட்டியில் சாரங்கி நிலைநாட்டிய 6.65 மீற்றர் தேசிய சாதனையை விட சுவிட்சர்லாந்தில் அவரது பெறுதி சற்று குறைவாக இருந்தது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டி அண்மித்துக் கொண்டிருக்கும் நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிக்கு மத்தியில் அவரது ஆற்றல்களில் பெரு முன்னேற்றம் இருப்பதாக அவரது பயிற்றுநர் வை. கே. குலரட்ன தெரிவித்தார்.
சீனாவில் நடைபெறவுள்ள 2022 ஆசிய விளையாட்டு விழாவில் (தற்போது பிற்போடப்பட்டுள்ளது) பங்குபற்ற சாரங்கி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயமாகும்.