வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற எரிபொருளை எவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.  அதன் ஊடாகவே தற்போதைய தீவிர நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும்.  முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்கான திட்டம் உடனடியாக வகுக்கப்படவேண்டும்.  

நீண்ட வரிசைகளில் முச்சக்கர வண்டிகள், கார்கள். வேன்கள். பஸ் லொரிகள் என வீதிகள் முழுவதிலும் வாகன வரிசைகளை காணமுடிகிறது. மிகவும் ஒரு இக்கட்டான நெருக்கடியான காலகட்டத்தை தற்போது இலங்கை கடந்து கொண்டிருக்கின்றது.

முக்கியமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வாகனங்கள் கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிகளில் பல நாட்களாக நின்று கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

ஒவ்வொருவரும் தாம் இரண்டு நாட்கள் வரிசையில் நின்றோம் மூன்று நாட்கள் வரிசையில் நின்றோம் என்று தமது மிகவும் கடினமான வேதனையான அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு சில வேளைகளில் அவ்வாறு நீண்ட வரிசையில் நின்றும் நீண்ட நாட்கள் வரிசையில் நின்றும் இறுதி நேரத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத துரதிர்ஷ்டவசமான துயரமான அனுபவங்களும் பதிவாகி கொண்டிருக்கின்றன. எரிபொருள் நெருக்கடியின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை தற்போது அடைந்திருக்கிறது.

மக்களின் தவிப்பு 

வீதிகளில் வரிசைகளில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் ஒரு துயரம் தெரிகின்றது. மக்கள் தவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் மூன்று வாரங்கள் நாட்டில் மிக கடுமையானதாக காணப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதில் தற்போது ஒரு வாரம் கடந்து விட்டது என்று தெரிகிறது. அடுத்த இரண்டு வாரங்கள் மிக கடுமையானதாக இருக்கும் என்பதை உணர  முடிகிறது

அண்மைய சில மாதங்களாக இலங்கை கடுமையான  டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.  இக்காலப்பகுதியில் இலங்கை இந்தியாவிடம் ஒரு பில்லியன் கடன் தொகையை பெற்றுக்கொண்டிருந்தது.

அந்த ஒரு பில்லியன் கடன் தொகையின் ஊடாக கடந்த சில வாரங்களாக இலங்கைக்கு இந்தியாவிலிருந்து எரிபொருட்கள் வந்து கொண்டிருந்தன. தற்போது அந்த கடனுதவி கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்து விட்டது.  எனவே உடனடியாக எரிபொருளை எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் இலங்கை நெருக்கடியைத்  எதிர்கொண்டுள்ளது.  தற்போது மீண்டும் 500 மில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை இந்தியாவிடம் கோரியுள்ள   நிலையில் அதற்கான  சாதகமான பதில் கிடைத்திருக்கிறது.  எனினும் அந்த நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று அதனூடாக எரிபொருள் இலங்கையை வந்தடைய இன்னும் இரண்டு வாரங்கள் அளவில் எடுக்கலாம்.

இரண்டு வாரங்களுக்கு என்ன செய்வது?  

எனவே இந்த இடைப்பட்ட இரண்டு வார காலப்பகுதியில் எமக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான எந்தவிதமான மூலங்களும்  இதுவரை தெரியவில்லை.  எனவே இந்த இரண்டு வார காலம் என்பது மிக நெருக்கடியாக அமையும் என்பது பரவலாக கூறப்படுகிறது.  எரிபொருள் இன்றி வாகனங்கள் மிக நெருக்கடியை சந்திக்கும் அபாயமும் காணப்படுகின்றது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.  இலங்கை கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்பார்க்கின்றது.

ஆனால் இந்தியா கடந்த சில மாதங்களில் மட்டும் இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர்களை  வழங்கியிருக்கின்றது.  இந்த நிதியில் அதிகளவு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.  அத்துடன் அதனூடாக வெளிநாட்டு கடன்களும் செலுத்தப்பட்டிருந்தன.    இந்நிலையில் இலங்கை மேலும் இந்தியாவிடம் கடன் உதவியை கோரி நிற்கின்றது.  மேலும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுள்ளது.    ஜப்பான் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் டொலர் கடனை பெறுவதற்காக  இலங்கை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றது.  இதனூடாக விரைவில் கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்களை வாட்டும் தட்டுப்பாடு, விலை உயர்வு 

ஆனால் அவை எதிர்பார்த்த அளவில் இல்லாமல் மிகவும் தாமதமடைந்து கொண்டிருக்கின்றன.  முக்கியமாக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றவுடன் ஜப்பான் இலங்கைக்கு 2 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அந்த செயற்பாடு தொடர்ந்து தாமதிக்கிறது. அரசாங்கம்  ஜப்பானிடம் கடனுதவி பெற்று கொள்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  ஆனால் அது மிகவும் ஒரு நெருக்கடியான கடினமான விடயமாகவே காணப்படுகிறது.  ஜப்பானிடம் கடனைப் பெற்றுக்கொள்வது எந்தளவு தூரம் கடினமாக காணப்படுகின்றது என்பதை பிரதமரின் அவ்வப்போது வெளியிடுகின்ற கருத்துக்கள்   ஊடாக காணமுடிகிறது.

மக்களைப் பொறுத்தவரையில் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.  எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக தமது அன்றாட பொருளாதாரத்  செயற்பாடுகளை கொண்டு நடத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர்.  அதுபோன்று  பொருட்களின் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது.  சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் தமது வர்த்தக முயற்சிகளை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அன்றாடம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது பொருளாதாரத்தை கொண்டு நடத்துகின்ற மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திருக்கின்றனர்.    நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் வாழ்க்கை செலவு உயர்வு காரணமாக கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.  தற்போது வாழ்க்கைச் செலவை பொறுத்தவரையில் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.  எனவே மாத சம்பளத்தை வைத்துக் கொண்டு தமது பொருளாதார செயற்பாடுகளை திட்டமிட்டு நடத்திக் கொண்டிருந்த மக்கள் கடுமையான நெருக்கடிகளை கடுமையான பிரச்சினைகளை அசௌகரியங்களை சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உணவு நெருக்கடி ஒன்றும் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் எதிர்வுகூறப்படுகின்றது.  எனவே அதுதொடர்பான ஒரு நெருக்கடியை தற்போது மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.   மூன்று வேளை உணவை பெற்றுக் கொள்வதே இன்று வீடுகளில் ஒரு பெரும் யுத்தமாக மாறி இருக்கின்றது.  அதுமட்டுமின்றி சிறுவர்களின் போஷாக்கு பிரச்சனை பாரியதொரு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது.  அன்மைய வைத்தியசாலைகளின் தகவல்களின்டி வைத்தியசாலைகள் அனுமதிக்கப்படுகின்ற சிறுவர்களில் பலருக்கும் அந்த நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.  கடந்த சில மாதங்களாக பொருளாதாரப் பிரச்சினை, உணவைப் பெற்றுக் கொள்வதில் இருக்கின்ற பிரச்சினை, உணவுப் உற்பத்திகளை மேற்கொள்வதில் காணப்படுகின்ற தடைகள் என்பனவும்  தலைவிரித்தாடுகின்றன.

அரசாங்க ஊழியர்களுக்கும் தற்போது வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் அரசு ஊழியர்களை வீடுகளிலிருந்து வேலை செய்ய வைக்கலாமா என்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.   பாடசாலைகளுக்கும் அவ்வப்போது அடிக்கடி விடுமுறை வழங்கப்படுகிறது. மீண்டும் பாடசாலை நடவடிக்கைகளை இணையம் மூலமாக முன்னெடுக்க முடியுமா என்பது தொடர்பாக ஆராயப்படுகின்றது. காரணம் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக்கு எரிபொருள் இல்லை.   எனவே இந்த நிலைமையை சமாளிக்க முடியாத ஒரு சூழல் காணப்படுகிறது. அதன் காரணமாக கல்வி நடவடிக்கைகள் அரசு அலுவல்கள்   என்பனவும் கடுமையாக தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றன.

உணவு பொருள் விநியோகம் பாதிப்பு  

இதனிடையே எரிபொருள் பிரச்சினை காரணமாக உணவுப் பொருள் விநியோகம் நாட்டில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  அதாவது கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய பொருட்களை நகரப் பகுதிகளுக்கு விநியோகம் செய்வதிலும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.    நாட்டின் பொருள் விநியோகம் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு  முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றது. பொதுப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  கொழும்பில் முச்சக்கர வண்டிகள் எப்போதும் வேலைப்பளு மிக்கதாகவே நெரிசலாக காணப்படும்.  ஆனால் கடந்த சில தினங்களாக முச்சக்கர வண்டிகள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்கின்றனவே தவிர மக்களுக்கு சேவையாற்றுவதற்கான அவகாசம் மிகவும் அரிதாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

மறுபக்கத்தில் நாட்டின் விவசாய உற்பத்திகளின் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  எரிபொருள் மற்றும் உரம் இன்மையின் காரணமாக விவசாய பயிர் செய்கையை மேற்கொள்வது நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது.  இந்த சூழலிலேயே உணவு நெருக்கடி வரப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது.   இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளும் ஒரே கட்டத்தில் நாட்டைத் தாக்கி கொண்டிருக்கின்றன. மக்கள் இவற்றை சமாளிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர்.

என்ன செய்யவேண்டும்?  

எரிபொருளுக்கான வரிசைகளை பார்க்கும்போது இருக்கின்ற குறைந்தளவான எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் திட்டமிட்டு விநியோகிப்பதற்கான  ஒரு நடவடிக்கையை அரசாங்கம் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.  முக்கியமாக எரிபொருள் வினியோகம்  விவசாய நடவடிக்கை,  அத்தியாவசிய பொருள் விநியோகம்,  அத்தியாவசிய சேவைகள்   போன்றவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.    நாட்டின் பொருளாதாரத்தை இயக்குகின்ற போக்குவரத்து சேவை பொருட்கள் விநியோகம் மற்றும் விவசாயத்துறை நடவடிக்கைகளுக்கான, போக்குவரத்து சேவைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குவது முக்கியமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே அது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.  அதாவது வரையறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற எரிபொருளை எவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

அதன் ஊடாகவே தற்போதைய தீவிர நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். இல்லாவிடின் சகல பகுதிகளிலும் நீண்ட வரிசைகள் நீண்ட நாட்களுக்கான வரிசைகள் காணப்படுமாயின் அது மிகவும் ஒரு நெருக்கடியான நிலைமையை நாட்டில் ஏற்படுத்தும்.

எனவே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்கான திட்டம் உடனடியாக வகுக்கப்படவேண்டும்.  இந்த விடயத்தில் பொருளாதார நிபுணர்கள் துறை சார்ந்த நிபுணர்கள் முன்வைக்கின்ற பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.  அதேபோன்று  மக்கள் அதிகளவு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் ஊடாக தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் செலவை குறைக்க முடியும்.

எரிபொருள் மிகவும் அரிதாகவே மிகவும் குறைவாகவே கிடைத்துக் கொண்டிருக்கின்றது.  எனவே அதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பது இங்கு அவசியமாகிறது.    மக்கள் தொடர்ச்சியாக திண்டாடிக் கொண்டிருகின்றனர்.

துயரங்களுக்கு மத்தியில் இந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் நிற்கின்றனர்.  இந்த நிலைமை நீடிக்கக்கூடாது.  அரசாங்கம் விரைவாக பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி டொலர்  கடனதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.  அதன் ஊடாக எரிபொருளை இறக்குமதி செய்து மக்களின் அன்றாட பொருளாதார செயற்பாடுகள் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படும்  சூழல் ஏற்படுத்தப்படுவது மிக இன்றியமையாததாக உள்ளது.

ரொபட் அன்டனி

Share.
Leave A Reply