கோட்டா – ரணில் அரசாங்கத்தின் பயணம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகருகிறதா என்ற சந்தேகம் இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஏனென்றால், நாட்டின் நிலைமை தற்போது மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.
கோட்டா- மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் இருந்த நிலையை விட, மிக மோசமான கட்டத்துக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர், மக்களின் எதிர்ப்பலையை சமாளிக்க கோட்டா -மஹிந்த அரசின் அமைச்சர்கள் முதலில் பதவி விலகினார்கள்.
அலரி மாளிகையில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, மஹிந்தவும் விலகிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்காகவே, ஒற்றை உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டார்.
அவரின் மூலமாக மேற்குலக நிதியுதவிகளை கொண்டு வரமுடியும் என்று ராஜபக்ஷவினர் நம்பினார்கள்.
ஆனால், சர்வதேச உதவிகளை எதிர்பார்த்தபடி, ரணில் விக்கிரமசிங்கவினால் பெற முடியவில்லை.
அல்லது நாட்டு மக்களும், ராஜபக்ஷவினரும் எதிர்பார்த்த வேகத்துக்கு உதவிகளைப் பெறும் நடவடிக்கை நடந்தேறவில்லை.
இது ரணில் விக்கிரமசிங்கவின் தவறு அல்ல. அவர் ஆட்சிக்கு வந்த போதே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்க 3 தொடக்கம், 6 மாதங்கள் செல்லும் என்று கூறியிருந்தார்.
சடுதியாக சர்வதேச உதவிகளை, இலங்கையின் பக்கம் திருப்புகின்ற வல்லமை தனக்கு இருப்பதாக அவர் ஒருபோதும் கூறவில்லை.
அதேவேளை, அவர் வாராவாரம் ஊடகங்களின் ஊடாகவும், பாராளுமன்றத்திலும் உண்மையைச் சொல்கிறேன் என்ற பெயரில், வெளியிட்ட அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளுக்கும் மக்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்திய போதும், அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார் என்பதே உண்மை.
அதாவது கடந்த காலத் தவறுகள் தான் தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்பதை, அவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்த தவறவில்லை.
அதன் மூலம், அவர் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் முன்னெடுத்திருந்தார்.
ஆனால் ராஜபக்ஷவினரும், நாட்டு மக்களும், அவரிடம் எதிர்பார்த்தது வேறு.
ரணில் வந்து விட்டார்- இனி அமெரிக்கா, இந்தியாவில் இருந்து உதவிகள் வந்து குவியும், என்ற அசட்டு நம்பிக்கை பலரிடம் காணப்பட்டதை மறுக்க முடியாது.
அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தியமைக்கு ரணில் பொறுப்புக்கூற வேண்டியவரில்லை. ஏனென்றால், இப்போதைய நிலைமைக்கு அவர் எந்த வகையிலும் பொறுப்பாளி அல்ல.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் சாபத்தை தற்போது எதிர்கொள்கிறோம் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கடந்தவாரம் கூறியிருந்தார்.
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் ஜனாசாக்களை எரித்ததன் சாபத்தையே அரசாங்கம் எதிர்கொள்கிறது என்று ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா போன்றவர்களும் கூறியிருந்தார்கள்.
எது சரியோ, ஏற்கனவே இழைக்கப்பட்ட தவறுகளின் பலாபலன்களைத் தான், நாடு தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
குறுகிய காலத்துக்குள் ஒட்டுமொத்த நாட்டையும் சீரழிவுக்குள் தள்ளியது போல, குறுகிய காலத்துக்குள் ஒட்டுமொத்த நிலைமைகளையும் மாற்றுவதற்கு ரணில் ஒன்றும் மாய வித்தைகளை நிகழ்த்துபவர் அல்ல.
அதனை அவர் புரிந்து கொண்டிருந்ததால் தான், அவ்வப்போது உண்மைகளைப் போட்டு உடைப்பதாக, அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
ஆனாலும், நாடு மோசமான கட்டத்துக்குள் –கிட்டத்தட்ட செயலிழந்து போகின்ற நிலைக்குள், தள்ளப்பட்டிருக்கின்ற சூழலில், இதற்குப் பொறுப்புக்கூறுகின்ற நிலையில் இருந்து அவராலும் தப்பிக்க முடியாது.
இப்போது அரசாங்கத்தினால், நாளாந்த அரசாங்க செயற்பாடுகளைக் கூட, முன்னெடுக்க முடியாத நிலை, ஏற்பட்டுள்ளது.
படிப்படியாக ஒவ்வொரு துறையாக செயலிழந்து, கல்வி, சுகாதாரம், உணவு விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கூட முடங்குகின்ற நிலை உருவாகி விட்டது.
இதற்கு ஆட்சியில் உள்ள அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மக்களின் கோபமும், எதிர்ப்பும், கோட்டாவின் மீது மட்டுமல்ல, ரணில் மீதும் தான் ஏற்படும்.
அதேவேளை, இப்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின், அவசரமாக எரிபொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
அதற்காக கட்டாருக்கும், ரஷ்யாவுக்கும் அமைச்சர்கள் பறந்திருக்கிறார்கள். இந்தியாவிடம் இருந்து அவசரமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தப் பேச்சுக்களின் முன்னேற்றங்கள் ஏற்பட்டு, எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஆகலாம்.
ஆனால், இலங்கையை நம்பி இப்போது எரிபொருளை வழங்க எத்தனை நாடுகள் முன்வரும் என்ற கேள்வி இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் சர்வதேசஅளவில் இலங்கையின் பெயர் கெட்டுப் போய் விட்டது.
பொருளாதார ரீதியாக தோல்வியடைந்து விட்ட நாடு என்ற அடையாளம் உருவாக்கப்பட்டு விட்டது.
நியூயோர்க் நீதிமன்றத்தில் தங்களின் இறையாண்மை பத்திரங்கள் மீதான முதலீட்டை திருப்பிச் செலுத்துமாறு வழக்குத் தொடர்ந்திருக்கிறது அமெரிக்காவின் ஹமில்டன் வங்கி.
இவ்வாறான நிலையில், நாட்டைச் சீர்படுத்துவதற்கு முதலீடுகளையோ, உதவிகளையோ வழங்குவதற்கு எந்த நாடோ, நிதி நிறுவனமோ முன்வராது என்று கூறியிருக்கிறார் சம்பிக்க ரணவக்க.
அதனால், எரிபொருளை எந்த நாட்டிடம் இருந்தும் பெறமுடியாது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை, கலாநிதி தயான் ஜயதிலக, இன்னொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார். தோல்வியுற்ற தலைமைக்கு சர்வதேச அமைப்புகள், நாடுகள் நிதியுதவிகளை வழங்காது என்பது அவரது கருத்தாக உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டரை ஆண்டுகளில் தன்னை ஒரு தோல்வியுற்ற தலைவராக அடையாளப்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.
அவருக்கு சர்வதேச அளவில் மதிப்பு இருந்தால், அதனைப் பயன்படுத்தி நெருக்கடிகளை தீர்த்திருக்க முடியும். அவர் ஆரம்பத்தில் பல நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார், சில நாடுகளின் தலைவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆனாலும், அவரது வேண்டுகோளை பெருமளவில் உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் அதாவது மருந்து, அத்தியாவசியப் பொருட்களின் உதவிகளை வழங்க முன்வந்தாலும், நெருக்கடியில் இருந்து இலங்கையை காப்பாற்றும் திட்டத்துக்கு எந்த நாடும் உதவ முன்வரவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்த ஒன்று என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இந்த நிலையில், தோல்வியுற்ற, ஊழல் நிறைந்த அரசாங்கம் என அடையாளப்படுத்தப்பட்ட அரசாங்கத்துக்கு புதியதொரு தலைமைத்துவம் கிடைக்காதன்றி, சர்வதேசம் உதவத் தயாராக இருக்காது.
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கு புதிய தலைமைத்துவம் நாட்டைப் பொறுப்பேற்க வேண்டும்.
இல்லையேல் குறைந்தபட்சம், எல்லாக் கட்சிகளும் பங்கேற்கும் ஒரு அவசரகால அரசாங்கம் பதவிக்கு வேண்டும்.
அதற்கான சூழல் தற்போது இல்லை. கோட்டா தாம் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று கூறிவிட்டார்.
எஞ்சிய பதவிக்காலம் முழுவதும் ஆட்சியில் இருப்பேன், தோல்வியுற்ற தலைவர் என்ற அடையாளத்துடன் வீட்டுக்குச் செல்லமாட்டேன் என்பது அவரது பிடிவாதம்.
இந்த நிலையில், அனைத்துக்கட்சிகளும் இடம்பெறும் ஒரு அரசாங்கத்தை அமைப்பது தான் இருக்கின்ற ஒரே வழி.
அதுகூட பெரியளவில் வெற்றிகரமானதாக இருக்காது. ஏனென்றால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள், கோட்டாவின் தலைமையிலான அரசாங்கத்தில் தாங்கள் இடம்பெறமாட்டோம் என்கின்றன.
இந்த நிலையில், மோசமடைந்து வரும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, மக்களின் கவனத்தை திசை திருப்ப கோட்டா மீண்டும் ஒரு புதிய முகத்தை கொண்டு வந்து நிறுத்த முற்படலாம்.
மக்களின் கோபம், கொந்தளிப்பாக மாறும் நிலை ஏற்பட்டால், அரசியலில் எதுவும் நடக்கலாம்.
அது கோட்டா- ரணில் அரசாங்கத்துக்கு முடிவுரை எழுதினாலும் ஆச்சரியமில்லை.
ஆனால் ஒன்று, அவ்வாறு செய்தால் ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வரும், அதேவேளை, சர்வதேச உதவிகளை பெறுகின்ற முயற்சிகள் தடைப்படுவதும் உறுதி.
-சத்ரியன்-