கோட்டாபய ராஜபக்ஷவும் பஷில் ராஜபக்ஷவும், இந்தியாவின் உதவியுடனேயே, மாலைதீவுக்குத் தப்பிச் சென்றனர் என கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில்  பரபரப்பாக தகவல்கள் பகிரப்பட்டன.

இன்னும் சிலர், இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ அதிகாரிகள் தான், அவரைப் பாதுகாப்பாக, நாட்டை விட்டு வெளியேற்றினர் என்று தகவல்களைப் பரப்பினர்.

ஆனால், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷவை நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் இந்தியா தொடர்புபடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்திருந்தது.

அத்துடன், ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவன மயப்படுத்தப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக, செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என மீண்டும் வலியுறுத்துவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.

இலங்கையில் இருந்து வெளியேற கோட்டாபய ராஜபக்ஷ முடிவெடுத்த போதே, அவர் தனது பயணத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் சகாக்கள் என 15 பேருடன், விமானப்படையின் அன்டனோவ் – 32 விமானத்தில், கேரளா அல்லது கர்நாடகாவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்குவதற்கு, கோட்டாபய ராஜபக்ஷ தரப்பில் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு இந்தியா இடமளிக்க மறுத்து விட்டது. இதன்பின்னர் தான் அவர், பயணிகள் விமானம் ஊடாக, டுபாய்க்குப் பயணத்தை மேற்கொள்ள திங்கட்கிழமை இரவு இரண்டு முயற்சிகளை முன்னெடுத்தார்.

அதுவும் தோல்வியில் முடிந்த நிலையில் தான், இராணுவ விமானத்தில் மாலைதீவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஜூலை 9ஆம் திகதி மக்கள் புரட்சியை அடுத்து. ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ முதலில் கடற்படையின் கஜபாகு போர்க்கப்பலில் ஏற்றப்பட்டு, இலங்கையின் கடல் எல்லைக்கு  கொண்டு செல்லப்பட்டார்.

இந்திய கடல் எல்லைக்குள் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும், கோட்டாபய ராஜபக்ஷ அங்கு செல்லவில்லை.

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த போதும், அயல் நாட்டுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை உறுதியாக கடைப்பிடிக்கும் இந்தியா, ஏன் கோட்டாவைக் காப்பாற்ற மறுத்தது?

கோட்டாவை காப்பாற்றியது இந்தியா தான், ‘றோ’ தான் என்று நம்புகின்றவர்கள், சில கள யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளவில்லை. ‘றோ’ வை நம்புகின்ற அளவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஒன்றும் முட்டாளாக இருக்க முடியாது.

ஏனென்றால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கையின் அரச புலனாய்வுச் சேவை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.

கடைசியாக விமானத்தில் ஏறிப் புறப்படும் வரையில், அரச புலனாய்வுச் சேவை அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை மீறி, ‘றோ’ வினால் கோட்டாவுக்கு பாதுகாப்பு அளித்திருக்க முடியாது,

அதைவிட, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அளித்து சிக்கலை எதிர்கொள்வதற்கும் இந்தியாவும் விரும்பவில்லை.

இலங்கையில் தனது நலன்களும், திட்டங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், இங்குள்ள மக்களின் கருத்துக்கள், போராட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இந்தியா கருதுவதாகத் தெரிகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கோட்டாபய ராஜபக்ஷ போன்ற தனிநபர்களை விட, அதன் நலன்களும் திட்டங்களும் தான் முக்கியமானவை. எனவே, கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாக்கின்ற வேலையை இந்தியா செய்வதற்கு முன்வரவில்லை.

இந்தியா அவ்வாறு பாதுகாப்புக் கொடுப்பதாக இருந்தால், கஜபாகு கப்பலிலேயே, அவரை ‘றோ’ அதிகாரிகளோ, இந்திய அதிகாரிகளோ பாதுகாப்புக் கொடுத்து – தென்னிந்திய துறைமுகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள்.

இலங்கையில் படையினருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு, நெருக்கடிகள் ஏற்பட்ட போது இந்தியா அவ்வாறான பாதுகாப்பை அளித்திருக்கிறது.

1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது, ஸ்ரீமா அரசாங்கத்தையும், முக்கிய நிலைகளையும் பாதுகாக்க இந்தியா தனது படைகளை அனுப்பியிருந்தது.

விடுதலைப் புலிகளின் காலத்தில், திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறைக்கு செல்லும் கடற்படையின் தொடரணி கப்பல்கள், கடற்புலிகளுக்கு பயந்து சர்வதேச கடற்பரப்பு வழியாக பயணித்து, இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து அல்லது அதனை ஒட்டியதாகவே செல்வது வழக்கம்.

பல கடற் சண்டைகளின் போது, கடற்படைப் படகுகள், துருப்புக்காவிகள் இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து- கரும்புலித் தாக்குதல் படகுகளிடம் இருந்து தப்பியிருக்கின்றன.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்திய கடற்படைப் படகுகள் கூட நேரடியாக கடற்புலிகள் மீது தாக்குல் நடத்தியும் இருந்தன.

ஆனால், இப்போது கோட்டாபய ராஜபக்ஷ கஜபாகு போர்க்கப்பலில் இருந்த போது, இந்தியா அவரை தனது எல்லைக்குள் வைத்துப் பாதுகாக்க முனையவில்லை.

2004இல், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று அரசாங்கத்திடம் தஞ்சமடைந்த கருணாவுக்கு கொழும்பில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்ட போது, அவரை இந்திய புலனாய்வுப் பிரிவினர் அழைத்துச் சென்று மும்பையில்  பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, இந்தியா அவரை – தனது நாட்டுக்கு அழைத்துச் சென்று பாதுகாக்க முனையவில்லை.

ராஜபக்ஷவினர் விடயத்தில் இந்தியா கடுமையான போக்கை கையாள முடிவெடுத்து விட்டது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. ராஜபக்ஷவினர் அதிகாரத்துக்கு வந்த பின்னர், இந்தியா எதிர்கொண்ட சிக்கல்கள் அதிகம்.

இந்தியாவை வெட்டி விட்டு, சீனாவை உள்ளே கொண்டு வருவதற்கு ராஜபக்சவினர் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்தனர்.

பொருளாதாரப் பின்னடைவுகள் தான், சீனாவின் பிடியில் முழுமையாக சிக்கிக் கொள்வதில் இருந்து தப்பிக் கொள்வதற்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதனால் தான், தங்களின் நலன்களையும், திட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கிய ராஜபக்ஷவினரை பாதுகாப்பதற்கு, இந்தியா அக்கறை கொள்ளவில்லை.

அதேவேளை, ராஜபக்ஷவினரைப் பாதுகாப்பதால் இந்தியாவுக்கு இந்த தருணத்தில் எந்த இலாபமும் கிடையாது.

ஏனென்றால், ராஜபக்ஷ எதிர்ப்பு அலை இலங்கை முழுவதும் வீசுகின்ற நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவினால் திரும்பி வர முடியாது.

அவருக்கு மீள் வருகைத் திட்டமும் கிடையாது.  எப்படியோ உலகின் ஏதோ ஒரு மூலையில் போய் அமர்ந்து கொள்ளப் போகும் தனி நபரைக் காப்பாற்றுவதற்காக, இந்தியா அதிகளவில் றிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கவில்லை.

ஏற்கனவே மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தால், இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பத் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரமணியன் சுவாமி புரளியைக் கிளப்பியிருந்தார்.

அப்போதே இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கைக்கு படைகளை அனுப்புவது தொடர்பான நிலைப்பாட்டுடன் இந்தியா இணங்கவில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருந்தது.

அப்போதும் ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக, செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றே இந்தியா கூறியது.

சோனியா காந்தியும் இலங்கைக்கு உதவ வேண்டும் என அறிக்கை ஒன்றில் முன்னதாக வலியுறுத்தியிருந்தார். சோனியாவும், சுப்ரமணியன் சுவாமியும் ராஜபக்ஷவினருக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால், இப்போதைய அரசாங்கம் இலங்கைக்கு படைகளை அனுப்பவோ,  ராஜபக்ஷவினரை பாதுகாக்கவோ தயாராக இல்லை.

அவர்களால் இனி ஆகப்போகும் காரியம் எதுவும் இல்லாத நிலையில் இந்தியா அவர்களைக் கைவிட்டது ஆச்சரியமில்லையே.

Share.
Leave A Reply