ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, அடுத்த மாதம் இலங்கை திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இராஜினாமாவை அடுத்து, ஓய்வு பெற்றுள்ள ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொள்ள உள்ளார் என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
அதற்கமைய, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு படை, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள், முன்னாள் ஜனாதிபதிக்கும் அவருடைய மனைவிக்கும் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 2 வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபயவை நாட்டுக்குள் அனுமதித்தமைக்கு எதிராக சனிக்கிழமை (16) எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தின் அமைச்சரொருவர் கோட்டாவை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னர் மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டா, அங்கிருந்து கடந்த 13ஆம் திகதி சிங்கப்பூருக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.