மக்களின் எதிரி யார் என்பது தற்போது தெளிவாகிறது. எனவே பாராளுமன்றத்தைக் கலைக்குமாறும் தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷவை விட ரணிலுக்கு சிறந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றது முதலே ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
அதற்கமையவே காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளது. இதன் போது ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது மோசமானதொரு நிலைமை ஆகும். ரணிலின் இந்த அடக்குமுறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இரத்த வெள்ளத்திற்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறார். யதார்த்தத்தினை ரணில் புரிந்து கொள்ளவில்லை.
இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
எனவே இராணுவத்தினரைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி அவர்களின் எழுச்சியை முடக்க முடியாது என்பதை ரணில் விக்கிரமசிங்க புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களின் எதிரி யார் என்பது தற்போது தெளிவாகிறது. அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே தற்போதுள்ள மக்கள் ஆணையற்ற அரசாங்கத்தை கலைக்குமாறு தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவையும் விரட்டியடிப்பதற்கான போராட்டத்தை தொடர வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவை விட ரணிலுக்கு சிறந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் என்றார்.