உறவுகளின் கண்முன்னே நாவலப்பிட்டி கெட்டபுலா அக்கரகந்த தோட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை காணவில்லை

சீரற்ற வானிலையால் மலையகத்தில் பல இயற்கை அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய நாவலப்பிட்டி கெட்டபுலா – அக்கரகந்த தோட்டத்தில் மூன்று பேர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். நேற்று 01.08.2022 பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

மஹாவலி ஆற்றுக்கு நீரை ஏந்திச் செல்லும் கிளை ஆறான கெட்டபுலா அக்கரகந்த ஆற்றில், மழை அதிகரிக்கும் போது அங்கிருக்கும் பாலத்துக்கு மேலாக நீர் செல்வது வழமையான விடயம் என்பதுடன், இதன்போது கயிற்றின் உதவியுடனேயே மக்கள் பாலத்தை கடப்பதாகவும்  பிரதேசவாசிகள் தெரிவித்துள்ள நிலையில், (01.08.2022) நேற்றும் அவ்வாறே நீர் அதிகரித்துள்ளது.

இதன்போது தோட்டத் தொழிலுக்குச் சென்றிருந்த 3 பிள்ளைகளின் தாயான 45 வயதான ஜெயலெட்சுமி கயற்றின் உதவியுடன் பாலத்தை கடக்க முற்பட்ட போது கை நழுவி ஆற்றில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதான சத்தியசீலன் மற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான சந்திரமோகன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்த போது, அவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை தேடும் பணிகளுக்காக இன்று (02.08.2022) பகல் 12 மணியளவில் கொத்மலை இராணுவ நிலையத்தின் இராணுவத்தினர் வருகைத் தந்துள்ளதுடன் நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply