சீனி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்து இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய 1600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை இழக்கச் செய்து பாரிய நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் பூரண விசாரணையை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் திங்கட்கிழமை (08)உத்தரவிட்டது.

 

கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இலங்கசிங்க இதற்கான உத்தரவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவிற்கு விடுத்தார்.

பாரிய சீனி வரி மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலணாய்வு திணைக்களம் அறிக்கை ஊடாக மேலதிக நீதிவானுக்கு அறிவித்த நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு பாரிய அளவில் வரி குறைப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற   பிரதிபலன் நுகர்வோரை சென்றடையாது வேறு தரப்பொன்று கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடாத்துவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவு மன்றுக்கு அறிவித்தது.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி நடந்த அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு (கோபா) கூட்டத்தின் பின்னர் அரசின் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டாக சி.ஐ.டியினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இதற்கான முறைப்பாட்டை நிதி,பொருளாதார ஸ்திரம் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணை பிரிவு முதலாம் இலக்க விசாரணை அறைக்கு சமர்ப்பித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இந்த வரிக்குறைப்பிற்கு 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் மேலும் அறிவித்தனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர்,தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் பணிப்பாளர்,ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட மூவரின் வாக்குமூலங்களை சி.ஐ.டி.யினர் பதிவு செய்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இது குறித்த விசாரணைகள் தொடர்வதாக சி.ஐ.டி யினர் மன்றின் அவதானத்திற்கு கொண்டு வந்த நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் பண்டார இலங்க சிங்க உத்தரவு பிறப்பித்தார்

Share.
Leave A Reply