மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் ஆய்வில் 390 கோடி மதிப்பிலான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிரடி சோதனை
மகாராஷ்டிராவில் கடந்த 1 ஆம் தேதியில் இருந்து பல அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இந்நிலையில் இன்று ஜல்னா மாவட்டத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.
இரும்பு மற்றும் உருக்கு ஆலைகள் அதிகம் உள்ள பகுதியான இங்கே, சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து இன்று காலை 5 குழுக்கள் ஜல்னா மாவட்டத்திற்குள் நுழைந்திருக்கின்றன.
120 வாகனங்களில் சென்ற 260 வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் ஒரேநேரத்தில் சோதனைகளை நடத்தினர்
. முன்னதாக ஒரு வீட்டில் நுழைந்த அதிகாரிகளுக்கு ஏதும் கிடைக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் அந்நிறுவனத்துக்கு சொந்தமான பண்ணை வீட்டை கண்டுபிடித்து அங்கே சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
அங்கே மெத்தைக்கு கீழே, கட்டுக்கட்டாக பணம் இருந்திருக்கிறது. மேலும், கிலோ கணக்கில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
13 மணிநேரம்
ஸ்டீல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் இயங்கிவரும் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து கண்டெக்கப்பட்ட பணம் பாரத ஸ்டேட் வங்கியின் நாசிக் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காலை 11 மணியளவில் வங்கி ஊழியர்கள் பணத்தை எண்ணத் தொடங்கினர், இது நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது.
13 மணிநேரம் நடைபெற்ற இந்த பணியில் 58 கோடி ரூபாய் கைப்பற்றட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
மேலும், 32 கிலோ தங்க நகைகளும், 390 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
திருமண கார்கள்
ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த ரெய்டு துவங்கியபோது திருமண ஊர்வலங்களில் பங்கேற்பது போன்ற கார்களில் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றிருக்கிறார்கள்.
இந்த பரிசோதனையில் நாசிக், புனே, தானே மற்றும் மும்பை அதிகாரிகள் இடம்பெற்றிருக்கின்றனர்.
சந்தேகம் வராமல் இருக்க ஒரே மாதிரியான ஸ்டிக்கர்களை இந்த காரில் ஒட்டியுள்ளனர் அதிகாரிகள்.
இதனிடையே மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கான பணத்தினை கைப்பற்றியது இந்தியா முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.