அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் இந்தியப் பெண்களை தொடர்ந்து தரக்குறைவாகப் பேசுவதோடு “நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள்” என்று ஆவேசமாகப் பேசுகிறார்.
நடந்தது என்ன? டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரம். இங்கு இந்தியப் பெண்கள் நால்வர் ஓர் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு கார் பார்க்கிங் லாட்டில் நிற்கின்றனர்.
அப்போது அங்கே வரும் மெக்சிகோ அமெரிக்கப் பெண் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தை தொடங்குகிறார்.
அந்தப் பெண், இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர்.
நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் ஏன் நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள் என்று கேட்கிறார்.
நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்கள் என்றும் கூறுகிறார். அவருடைய பேச்சுக்கிடையே அவ்வப்போது ஆபாச ஆங்கில வார்த்தையையும் பிரயோகப்படுத்துகிறார்.
பின்னர் அவர் திடீரென நான்கு இந்தியப் பெண்கள் மீதும் பாய்ந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்.
அந்தப் பெண்ணின் செயல்பாட்டை இந்தியப் பெண்கள் சாதுர்யமாக தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோவை பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் மகள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
அடையாளம் தெரிந்தது: இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்ட போலீஸார் அப்பெண்ணை அடையாளம் கண்டனர். அவர் டெக்சாஸ் நகரின் ப்ளேனோ பகுதியைச் சேர்ந்த எஸ்மெரால்டா அப்டன் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், அச்சுறுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் ப்ளேனோ போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.