இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய, தற்பொழுது சமுர்த்தி உதவி பெறுகின்ற சுமார் 1.7 மில்லியன் குடும்பங்களுக்கு, அவர்கள் பெறுகின்ற மாதாந்த சமுர்த்தி உதவித் தொகையினை ரூ. 5,000 முதல் 7,500 ரூபா வரையான தொகையொன்றாக அதிகரித்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமுர்த்தி கொடுப்பனவுகளை எதிர்பார்த்து காத்திருப்பு பட்டியலிலுள்ள சுமார் 726,000 குடும்பங்களுக்கு தற்காலிகமாக ரூ. 5,000 உதவித் தொகை வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு செலுத்தப்பட்ட கொடுப்பனவு 5,000 ரூபாவிலிருந்து 7,500 ரூபா வரைக்குமான தொகையொன்றாக அதிகரிக்கப்பட்டது.

மேலும், இந்த உதவியினை எதிர்பார்த்து காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்களுக்கான தற்காலிக ஏற்பாடாக 5,000 ரூபா உதவி வழங்கப்பட்டது.

சமகால பொருளாதார நெருக்கடியினை குறைப்பதற்கும் சமூக ஸ்திரத் தன்மையினை மீள நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்த உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட் ரூபா 133 பில்லியனிலிருந்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, தற்பொழுது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 3.2 மில்லியன் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு இந்த வரவு செலவுத்திட்டத்தினைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புநிரப்பு மதிப்பீட்டினூடாக அங்கீகாரம் பெறப்பட்டது.

இக்கருத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மேற்படி சலுகைகளுக்கு மேலதிகமாக, 2022/2023 பெரும் போகத்தில் நெற்செய்கைக்கு தேவையான யூரியாவினை இறக்குமதி செய்வதற்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூபா 40 பில்லியன்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்பொழுது இதற்கான கொள்வனவுச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம் எதிர்வருகின்ற பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்களுக்கு சிறந்த அறவடையினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன், அதன் மூலம் அரிசி நுகர்வாளர்களுக்கு சாதாரண விலையில் அரிசியினைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்குமென நான் நம்புகின்றேன்.

அதேபோன்று இக்கடன் திட்டத்தின் மூலம், வெளிநாட்டுச் செலாவணி பற்றாக்குறையினால் நாட்டில் சமயல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதனால் அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு சமயல் வாயுவினை இறக்குமதி செய்து குறுகிய காலத்தில் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

அத்துடன், எதிர்காலத்திலும் பற்றாக்குறை ஏற்படாதவாறு தேவையான சமயல் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் செயற்பட வேண்டியுள்ளது.

அதற்காக இக்கடன் உதவியிலிருந்து ஏறக்குறைய 70 மில்லியன் டொலர்களை (ரூபா 25 பில்லியன்) செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வேலை இழப்பு, விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களினால் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாமை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவியாக மேலதிக மாதாந்தக் கொடுப்பனவினை வழங்குவதற்கு 2022 மே முதல் ஜூலை மாதம் வரை மேலதிகமாக ரூபா 31,000 மில்லியனை அரசாங்கம் செலவிட்டுள்ளது.

 

 

Share.
Leave A Reply