காதலியின் பிணத்துடன் பிரசெஞ்சித் கோஷ் 2 நாட்கள் தனியாக இருந்துள்ளார்.
பெண்ணின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியதற்கான தடயம் காணப்பட்டது.
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதிக்கு கடந்த 3-ந்தேதி இரவு மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம் ஜோடியினர் அறை எடுத்து தங்கினார்கள்.
கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் விடுதி ஊழியர்கள் நேற்று காலையில் அறை அருகே சென்றனர்.
அப்போது விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அறை கதவு உள்புறம் தாழிடப்பட்டு இருந்தது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது படுக்கை மீது இளம் ஜோடி இருவரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் இருவரும் மேற்கு வங்காள மாநிலம் பங்குரா பகுதியை சேர்ந்த காதல் ஜோடி என்று தெரிய வந்தது.
அவர்கள் பெயர் பிரசெஞ்சித் கோஷ், அர்பிதா பால். இருவரும் கணவன்-மனைவி என்று கூறி விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியதற்கான தடயம் காணப்பட்டது.
எனவே அந்த பெண்ணை காதலன் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பின்னர் காதலியின் பிணத்துடன் பிரசெஞ்சித் கோஷ் 2 நாட்கள் தனியாக இருந்துள்ளார்.
அதன்பிறகு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். காதலியை கொலை செய்த விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.