நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்திக்கு ‍தேவையான 960,000 மெட்றிக் டொன் நிலக்கரி தட்டுப்பாடு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்படவுள்ளதால், எதிர்வரும் காலத்தில் நாளாந்தம் 10 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 38 கப்பல்களில் நிலக்கரியை இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 14 கப்பல்களுக்கான கடன் உறுதிப் பத்திரங்கள் வழங்க முடியாமல் போனமை மற்றும் விடுக்கப்பட்டிருந்த விலை மனுக்கோரல்களுக்கு நிறுவனங்கள் தங்களது விலைகளை சமர்ப்பிக்காமை போன்ற காரணங்களால் நிலக்கரிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த 8 மாதங்களில் 24 நிலக்கரி கப்பல்கள் ஊடான நிலக்கரி வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலம் நுரைச்சோலை நிலக்கரி உற்பத்தி நிலையங்கள் சாதாரண அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாகவும் பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரலிலிருந்து தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பித்துள்ளதால், ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரை நாட்டில் நிலக்கரி இறக்குமதி செய்தாலும், தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், 20 ஆம் திகதிக்கு பின்னர் நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் நுரைச்சோலை நிலக்கரி உற்பத்தி இயல்பாகவே நின்றுவிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மின்சார உற்பத்தி கட்மைப்பில் கிட்டத்தட்ட 900 மெகா வொட் மின்சாரத்தை சேர்க்கும் இந்த மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு சுமார் பத்து மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டிவரும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து பல மாதங்களுக்கு முன்னரே அமைச்சர் மற்றும் பொறுப்புமிக்க அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தபோதிலும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்காததால் நாடு மீண்டும் இருளில் மூழ்கும் சூழ்நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply