சக மாணவி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை மட்டுமே தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹரார் டவுண் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பல்கலையில் உள்ள விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி படித்துவருகின்றனர்.
இந்த நிலையில் மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் வெளியாகின. இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள் வெளியான நிலையில் சில மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியது.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் மாணவிகளும் விடுதிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மொகாலி எஸ்.பி., விவேக் சோனி சம்பவ இடத்துக்கு சென்றார்.
தொடர்ந்து அங்குள்ள மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வீடியோக்கள் அழிக்கப்படும் என உறுதியளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். அந்த வீடியோக்கள் அழிக்கப்படும். இந்த வீடியோக்களை யார் படம் பிடித்தார் என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது” என்றார்.
இது குறித்து பேசிய மாநில முதலமைச்சர் பகவந்த் மான், “இந்த விவகாரத்தில் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் உறுதி செய்யப்படும்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “மாணவிகள் தொடர்புடைய வீடியோக்கள் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மாணவிகளின் குளியலறை மற்றும் ஆடை மாற்றும் வீடியோக்களை சக மாணவி ஒருவரே எடுத்ததாக கூறப்படுகிறது. அவர் தான் அந்த வீடியோ ஆண் நண்பர் ஒருவருக்கு அனுப்பினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சக மாணவி அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை மட்டுமே தனது ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.