ரஷ்ய நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக, தந்திரோபாய அணுக்கரு ஆயுதத்தைப் பயன்படுத்த தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறியுள்ளார்.

இது, யுக்ரேன் மீது சிறியவகை அல்லது “தந்திரோபாய” அணு ஆயுதத்தை அவர் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி செய்வது, இரண்டாம் உலக போருக்குப் பிறகு நடக்கும் மிக ஆபத்தான போர்ப்பதற்ற அதிகரிப்பாக அமைந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் என்றால் என்ன?

தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் என்பவை சிறிய அணு ஆயுதங்கள் மற்றும், அவற்றை சிறிய அளவில் போர்க்களத்தில் பயன்படுத்துவதற்கான ஏவும் அமைப்பைக் குறிப்பதாகும்.

மிகப் பரந்த அளவில் கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தாமல் குறிப்பிட்ட பகுதியில் உள்ள எதிரியின் இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது இது.

மிகச்சிறிய தந்திரோபாய அணுக்கரு ஆயுதம் ஒரு கிலோ டன் அல்லது அதைவிட குறைவான திறன் கொண்டதாக இருக்கலாம். அதாவது 1000 டன் டிஎன்டி வெடிபொருள் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு சமமான தாக்கத்தை உருவாக்குவது இது என்று பொருள்.

பெரிய தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் 100 கிலோ டன் அளவுக்கு இருக்கலாம். இவற்றை நீண்ட தூரத்தில் இருந்து வீச முடியும். ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசிய அணு குண்டு 15 கிலோ டன் திறன் கொண்டது.

ரஷ்யாவிடம் எத்தனை தந்திரோபாய அணு ஆயுதங்கள் உள்ளன?

அமெரிக்க உளவுத்துறையின் கூற்றுப்படி, ரஷ்யாவிடம் சுமார் 2,000 தந்திரோபாய அணு ஆயுதங்கள் உள்ளன.

க்ரூஸ் ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் போன்ற வழக்கமான வெடி கருவிகளுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல வகை ஏவுகணைகளில் தந்திரோபாய அணுக்கரு அமைப்பை நிறுவ முடியும்.

இந்த தந்திரோபாய அணு ஆயுதங்களை விமானம் மற்றும் கப்பல்களில் இருந்தும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளாகவும், வான்வழி எதிர்ப்பு ஏவுகணையாகவும் அதிக தூரத்தில் இருந்து இயக்கலாம்.

இந்த வகை ஆயுதங்களின் வரம்பு மற்றும் துல்லியத்தை மேம்படுத்த ரஷ்யா சமீபகாலமாக அதிக அளவில் முதலீடு செய்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது.

 

தந்திரோபாய அணு ஆயுதங்கள் இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டதா?
Graphic of two Russian short range nuclear weapons

தந்திரோபாய அணுக்கரு ஆயுதங்கள் இதுவரை எந்த மோதலிலும் பயன்படுத்தப்படவில்லை.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற அணுசக்தி நாடுகள், மரபுவழி ஆயுதங்களைப் பயன்படுத்தி போர்க்களத்தில் இலக்குகளை அழிப்பது, சமமான பலனை தருவதாகக் கண்டறிந்துள்ளன.

கூடுதலாக, எந்த அணு ஆயுத நாடும் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து அணு ஆயுதப் போரையும் கட்டவிழ்த்துவிட அவை இதுவரை தயாராக இல்லை.

இருப்பினும், பெரிய மூலோபாய ஏவுகணைகளை விட சிறிய தந்திரோபாய ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்கலாம்.

சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் அமைப்பின் சர்வதேச பாதுகாப்புத் திட்ட தலைவரான டாக்டர் பாட்ரிசியா லூயிஸ், “இந்த மிகப்பெரிய அணுசக்தி பயன்பாட்டை கடக்க முடியாது என அந்த நாடுகள் கருதியிருக்கலாம். “அவை தங்கள் வழக்கமான படைகளின் ஒரு பகுதியாகவே இந்த ஆயுதங்களைப் பார்க்கின்றன,” என்கிறார்.


ரஷ்ய ஆயுத பலம்

 

ரஷ்யப் படைகள் சிறிய அணு ஆயுதங்களைச் சுட, “மல்கா” எனப்படும் சுயமாக இயக்கப்படும் துப்பாக்கி போன்ற வழக்கமான பீரங்கிகளையே பயன்படுத்துகின்றன.

புதினின் அணுசக்தி அச்சுறுத்தல்கள் கவலைக்குரிய உண்மையான காரணமா?

பிப்ரவரி 2022இல், யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு சற்று முன்பு, ரஷ்யாவின் அணுசக்தி படையினரை, “போர் தயார்நிலையில்” வைத்து, உயரிய அணு ஆயுத பயிற்சிகளை அதிபர் புதின் வழங்கினார்.

மிக சமீபத்தில், அவர் இது பற்றி பேசும்போது, “எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், ரஷ்யாவையும் எங்கள் மக்களையும் பாதுகாக்க நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம். இது ஒரு முட்டாள்தனம் அல்ல,” என்று கூறினார்.

ரஷ்யா தான் ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது.

பிரிந்து செல்லும் “மக்கள் குடியரசுகளை” உருவாக்க போலியான வாக்கெடுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது மற்றும் அதிபர் புதின் “எல்லா வகையிலும்” பிராந்தியங்களின் “ஒருமைப்பாட்டை” பாதுகாக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்.

இந்த பிராந்தியங்களை மீண்டும் தன் வசப்படுத்த யுக்ரேனுக்கு மேற்கு நாடுகள் உதவாமல் இருப்பதை ஒரு அச்சுறுத்தலாக அமெரிக்க உளவுத்துறை பார்க்கிறது.

ஆனால் மேலும் பின்னடைவை சந்தித்தால், தோல்வியையோ முடங்கிப் போயிருப்பதையோ தவிர்க்க யுக்ரேனில் ஒரு சிறிய தந்திரோபாய ஆயுதத்தை “புதிய திருப்பமாக” பயன்படுத்த ரஷ்யா ஆசைப்படலாம் என்று மற்ற நாடுகள் கவலைப்படுகின்றன.

வாஷிங்டன் டிசியில் உள்ள கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பேஸின் அணுசக்தி நிபுணரான ஜேம்ஸ் ஆக்டன், “அத்தகைய சூழ்நிலையில், புதின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவார் என்று நான் சட்டபூர்வமாக கவலைப்படுகிறேன் – பெரும்பாலும் யுக்ரேனில் களத்தில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி, தனது காரியத்தை சாதிக்க அவர் நினைக்கலாம்,” என்கிறார்.

 

 

Comparison of the estimated number of warheads held each of the nine nuclear-armed countries.

அமெரிக்கா எவ்வாறு எதிர்வினையாற்றியது?

யுக்ரேன் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிபிஎஸ் நியூஸுக்கு அளித்த ஒரு நேர்காணலின் போது பேசிய பைடன், அத்தகைய நடவடிக்கை “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரின் முகத்தை மாற்றும். அது விளைவாகவும் இருக்கும்,” என்று கூறினார்.

எந்தவொரு அணுசக்தி பயன்பாட்டிற்கும் அமெரிக்காவும் நேட்டோவும் எவ்வாறு பதிலளிக்கும் என்பதை கணிப்பது கடினம். யுக்ரேனில் நிலைமையை மேலும் தீவிரமாக்க விரும்பவில்லை.

அணுசக்தி யுத்தத்தை அது ஆபத்தில் ஆழ்த்தலாம். ஆனால் அந்த நாடுகள் ஒரு வரையறை கோட்டை போட்டுக் கொள்ள விரும்பலாம்.

இருப்பினும், ரஷ்யா தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருக்க மற்றொரு சக்தியான சீனா தடுக்கலாம்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் அணுசக்தி நிபுணரான டாக்டர் ஹீதர் வில்லியம்ஸ், “ரஷ்யா சீனாவின் ஆதரவை பெரிதும் சார்ந்துள்ளது. “ஆனால் சீனாவுக்கு ‘முதலில் பயன்படுத்தக்கூடாது’ என்ற அணுசக்தி கோட்பாடு உள்ளது.

எனவே புதின் அவற்றைப் பயன்படுத்தினால், சீனா அவருக்கு ஆதரவாக நிற்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருக்கும்.

அதையும் மீறி புதின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், அவர் சீனாவை இழக்க நேரிடும்,” என்கிறார்.

Share.
Leave A Reply