2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர்.

உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், உக்ரேன் தனது கிழக்குப் பிராந்தியத்தில் பெருமளவு நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும், உக்ரேன் தனது படைக்கலன்களை கைவிட வேண்டும், உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் போன்ற தனது கோரிக்கைகளை உக்ரேனை ஏற்க வைப்பதற்காக இரசியா உக்ரேன் மீது “சிறப்புப்படை நடவடிக்கை” என்னும் பெயரில் இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு படையெடுப்பை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தது.

அதில் பெரும் பின் வாங்கல் ஒன்றை செப்டம்பர் 5-ம் திகதி இரசியாவை உக்ரேன் செய்ய வைத்தது.
Combined Arms Manoeuvre

தொலைதூரத் தாக்குதல் படைக்கலன்களையும் குறுகிய தூரத் தாக்குதல் படைக்கலன்களையும் ஒன்றிறைந்துக் கையாளும் திறனை படைத்துறையில் Combined Arms Manoeuvre (இணைக்கப்பட்ட படைக்கலன்களை கவனமாககையாள்தல்) என அழைப்பர். இதை தனது 2022 செப்டம்பர் 5-ம் திகதி தாக்குதல்களின் போது உக்ரேன் சிறப்பாகச் செய்தனர்.

இதனால் இரசியாவின் வழங்கல் பாதைகள், கட்டுப்பாட்டு-கட்டளைப் பணியகத்தின் புறநிலைகள்(outposts) உட்படப் பல தாக்குதல் வலிமைகள் சேதமடைந்தன.

பின்வாங்கலின் பின்னர் இரசியா செய்த நகர்வுகள்:

1.இரசியப் படையினருக்கு எதிரான சட்டம்

இரசியப் படையில் இருந்து படை நடவடிக்கைகளின் போது தப்பி ஓடுபவர்களையும் படைக்கலன்களுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிபவர்களையும் கடுமையாக தண்டிக்கும் சட்டத்தை 2022 செப்டம்பர் 20-ம் திகதி நிறைவேற்றியுள்ளது.

இரசியப் படையினர் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய மறுக்கின்றார்கள் தங்கள் சொத்துக்களை தாமே சேதப்படுத்துகின்றார்கள், படையில் இருந்து தப்பி ஓடுகின்றார்கள் என மேச்ற்கு நாட்டு ஊடகங்கள் பரப்புரை செய்தபோது இரசியா அவை பொய்யான செய்திகள் என மறுத்து வந்தது.

இரசியாவின் மறுப்பை இரசியாவின் இந்த நகர்வு கேள்விக்குறியாக்கியுள்ளது.

இரசியா உக்ரேனில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்த போரை இரசியா போர் என்று சொல்லாமல் அதை ஒரு சிறப்புப் படை நடவடிக்கை என்றே அழைக்கின்றது.

இரசியா உக்ரெனில் போர் செய்கின்றது என்று சொல்வது இரசிய சட்டப்படி குற்றமாகும்.

இரசிய சட்டத்தில் சிறப்பு படை நடவடிக்கை என ஒன்று இல்லை என்றபடியால் அதற்கான சட்டம் இரசியாவில் தேவைப்படுகின்றது.

2. புதிதாக மேன்படைக்கு (Reserve Force) ஆட்சேர்ப்பு

இரசியா புதிதாக மூன்று இலட்சம் பேரை தனது மேன்படையில் (Reserve Force) இணைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இரசியா தனது படைக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்யலாம் என்ற கரிசனையில் பல இரசியர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுவதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் என்னும் இரசியாவிற்கு எதிரான செய்திகளை வெளியிடும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரசியாவை பின் வாங்கச் செய்யும் அமெரிக்கப் படைக்கலன்கள்:

அமெரிக்கா தொடர்ந்தும் பல படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கி வருகின்றது.

ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தப்பட்ட வலிமைகளைக் கொண்ட படைக்கலன்களையே அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கி வந்தாலும் 2022 ஜூன் மாதத்தில் இருந்து வலிமை மிக்க பல்குழல் ஏவூர்தி செலுத்திகளை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்குகின்றது.

1. 155-மில்லி மீட்டர் Howitzers ஏவூர்தி செலுத்திகள்

155-மில்லி மீட்டர் Howitzers என்னும் இழுத்துச் செல்லும் ஏவுகணைச் செலுத்திகள். இந்த வகை எறிகணைச் செலுத்திகள் 122ஐ அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியிருந்தது. அவற்றிற்கான குண்டுகள் எட்டு இலட்சம் வரை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியது.


2. அமெரிக்காவின் GMLR ஏவூர்திகள்

GMLR என்னும் துல்லியமாக எதிரியின் இலக்குகளைத் தாக்கக் கூடிய ஏவூர்திகள். இவை GPS மூலம் வழிகாட்டப்படுபவை. 70கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கி அழிக்க வல்லவை.

இவற்றைச் செலுத்தக் கூடிய 155மிமீ Howitzer செலுத்திகளையும் அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

 

3. அமெரிக்காவின் M-31 HIMARS மற்றும் M-142 HIMARS ஏவூர்தி செலுத்திகள்

M-31 HIMARS M-142 HIMARS என்ற இருவகை High Mobility Artillery Rocket System மிகவும் நகரக் கூடிய பல் குழல் ஏவுகணைச் செலுத்தி. இவற்றால் பல தொலைதூரம் பாயும் வழிகாட்டல் ஏவுகணைகளை ஒரேயடியாக வீச முடியும். அமெரிக்கா 2022 ஜூனில் உக்ரேனுக்கு வழங்கிய இந்த ஏவுகணைச் செலுத்தியை இரசியர்களின் கட்டளை நிலையங்களையும் படைக்கலன் கழஞ்சியங்களையும் அழிக்க உக்ரேனியர்கள் பயன்படுத்துகின்றார்கள். பல M-31 HIMAR ஏவுகணைச் செலுத்திகளை அழித்ததாக இரசியர்கள் சொல்கின்றனர். உக்ரேனியர்களிடம் முப்பதிற்கும் மேற்பட்ட M-31 HIMARS இருப்பதாக நம்பப்படுகின்றது. M-31 HIMARS ஐப் பாவித்து 400இற்கு மேற்பட்ட இரசிய இலக்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சொல்கின்றது. HIMARS இரசியப் படைக்கலன்களின் அரைப்பங்கை அழித்து விட்டது என சில செய்திகள் வருகின்றன. ஆனால் இரசியா தனது படை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்கின்றது. M-142 HIMARSஇல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் 200மைல்கள்(321கிமீ) தூரம் வரை பாயக்கூடியன. இவற்றைப் பாவித்து கிறிமியாவில் உள்ள இரசியப் படை நிலைகள் மீது உக்ரேனியப் படையினர் தாக்குதல் செய்கின்றனர். இதனால் கிறிமியாவில் இருந்து இரசியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வெளியேறியதாகவும் செய்திகள் வருகின்றன. HIMARS ஏவூர்திச் செலுத்திகள் துரிதமாக இடமாற்றம் செய்யக் கூடியவை. ஓரிடத்தில் இருந்து தாக்குதல் செய்து விட்டு உடனடியாக வேறு இடத்திற்கு மாறி மறைந்திருக்க கூடியவை. அதனால் ஏவூர்திகள் செலுத்தப்படும் இடத்தின் மீது பதிலடி தாக்குதல் செய்து அவற்றை அழிக்க முடியாது.

உக்ரேன் பாவித்தஉத்தி

தெற்கில் கேர்சன் பிராந்தியத்தைக் மீளக் கைப்பற்றுவோம் கிறிமியாவை மீட்போம் எனச் சொல்லி சிறிய தாக்குதலை அங்கு தொடுத்துவிட்டு வடகிழக்கில் கார்கீவ் பகுதியில் அதிரடித் தாக்குதல் செய்தமை. இரசியப் படைத்துறையில் நிலவும் ஊழலும் இரசியாவின் பின்னடைவிற்கு காரணம். உக்ரேனியர்கள் கேர்சனைக் கைப்பற்றப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில் இரசியா அதிக கவனத்தை அங்கு செலுத்தி வட கிழக்குப் பகுதியில் குறைந்த கவனத்தை செலுத்தியது.

போலந்து வழங்கிய Krab Self-propelled ஆட்டிலெறிகள் பலவற்றை செப்டம்பர் 5-ம் திகது உக்ரேனியர்கள் கார்கீவ் படை நடவடிக்கையின் போது பாவித்தார்கள்.

இடர் சூழ் எதிர்காலம்

இரசியா பெரிய அளவில் படை நகர்வுகளை இனிச் செய்தால் பெரும் ஆளணி இழப்பை சந்திக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. HIMRS Howitzer ஆகியவற்றை பயன்படுத்தும் திறனை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கற்றுக் கொண்டனர்.

உக்ரேனியர்கள் இது போன்ற படைக்கலன்களை ஏற்கனவே தாமே உற்பத்தி செய்தும் பயன்படுத்தியும் உள்ளனர்.

உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கேர்சன் பிரதேசத்தில் எதிரிகளின் படைநிலைகளுக்கு பின்னால் உள்ள படைக்கலன் களஞ்சியங்கள், பாலங்கள் போன்றவற்றை Howitzer இல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் மூலம் தாக்கி அழித்துள்ளனர்.

இரசியப் படையினர் அதிக இடர் மிக்க பறப்புக்களைச் செய்கின்றனர். அதில் பல இழப்புக்களை அவர்கள் சந்திக்கின்றனர்.

தாழப்பறந்து தமது படையினருக்கு ஆதரவாக குண்டுகளை வீசும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

இரசிய வான்படையினரின் Situation Awareness தொழில்நுட்பம் உயர்த தரத்தில் இல்லை எனச் சொல்லப்படுகின்றது.

Situation Awareness தொழில்நுட்பம் எதிரியின் வான்பாதுகாப்பு மற்றும் வான்எதிர்ப்பு முறைமைகளை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் முறைமையாகும்.

விலகி நிற்கும் இரசியாவின் நண்பர்கள்

2022 செப்டம்பர் 16-ம் திகதி உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-ம் உச்சி மாநாடு நடைபெற்ற போது அங்கு வைத்து இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் தனைத்தனியே சந்தித்தனர்.

மோடி போர் புரிவதற்கு இது உகந்த காலம் அல்ல என புட்டீனுக்கு மோடி சொல்லியிருந்தார்.

ஜீ ஜின்பிங்கை சந்தித்த பின்னர் விளடிமீர் புட்டீன் சீனாவிடம் உக்ரேன் போர் பற்றிய கேள்வியும் கரிசனையும் உள்ளன என்றார்.

சீனாவின் பல முதலீடுகள் உக்ரேனில் இரசியாவின் படை நடவடிக்கையால் அழிக்கப்பட்டுள்ளன.

சீனா உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு கொண்டு வரப்படுவதையே பெரிதும் விரும்புகின்றது.

இரசிய தேசியவாதிகளும் சில புட்டீனின் ஆதரவாளர்களும் இரசியா உக்ரேன் மீது முழுமையான போரைச் செய்ய வேண்டும் எனவும் அதிக படையினரையும் அதிக சிறப்பு படையணிகளையும் களமிறக்க வேண்டும் எனவும் புட்டீனை வற்புறுத்துகின்றனர்.

இரசியா கைப்பற்றிய முழுப் பிரதேசத்தையும் உக்ரேனால் மீளக் கைப்பற்ற முடியாது.

இரசியா மேலும் அதிக படையினரை போரில் ஈடுபடுத்தும் போது நிலைமை மாற வாய்ப்புண்டு.

இரசிய நலன்களைப் பாதுகாக்க எதையும் செய்வோம்; எம்மிடமிருக்கும் எந்தப் படைக்கலனையும் பாவிப்போம் என புட்டீன் சூளுரைத்துள்ளார்.

அவர் அணுக்குண்டைப் பாவிப்பார் என மிரட்டுகின்றார் என நம்பலாம். அணுக்குண்டுகள் இரசியாவிடம் இருக்கும் வரை இரசியாவிற்கு பின்னடைவு ஏற்படாது.

இரசியாவின் உக்ரேன் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் நடந்தது:

Share.
Leave A Reply