ராஜராஜசோழனை இந்து மன்னன் என அழைப்பது சரியா?

ராஜ ராஜ சோழன் தொடர்பாக சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பல தகவல்களும் விவரங்களும் அந்த படம் திரைக்கு வந்த பிறகு பல தலைப்புகளில் விவாதப்பொருளாகி வருகின்றன.

அதில் சமீபத்தில் ராஜராஜ சோழனுக்கு இந்து அடையாளத்தைக் கொடுக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சர்ச்சையானது.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் வெற்றிமாறன் எழுப்பிய கேள்வி குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல், “இந்து மதம் என்பது ராஜராஜ சோழன் காலத்தியே கிடையாது. வைணவம், சைவம், சமணம் என்ற பெயர்களே இருந்துள்ளன.

இந்து மதம் என்பது ‘வெள்ளைக்காரங்க’ நமக்கு வைத்த பெயர். தூத்துக்குடியை டூட்டிகொரின் என சொன்ன மாதிரிதான் இதுவும்.

கி.பி.8ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மதம்னு ஸ்தாபிதம் செய்கிறார். இது சரித்திரம் சம்பந்தப்பட்டது. இதை இங்கே சொல்லக் கூடாது. இந்த படம் சரித்திரப் புனைவுபற்றியது. மொழி பிரச்னையை இங்கே கொண்டு வரவும் வேண்டாம்” என்றார்..

முன்னதாக, கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனின் 60வது பிறந்தநாளை ஒட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது,

சோழ மன்னன் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளப்படுத்துவது என தமிழர்களின் அடையாளத்தை பறிக்கிறார்கள்” என பேசியிருந்தார்.

இதற்குப் பதில் சொல்லும் வகையில் பேட்டியளித்த இயக்குனர் பேரரசு, “ராஜராஜ சோழன் இந்து மன்னன்தான், இந்தியர்கள் அனைவருமே இந்துக்கள்தான்” என்றார்.

இதையடுத்து ராஜ ராஜ சோழனின் மதம் எது என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடக்க, பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சிகளின் விவாத மேடைகளை இந்த விவகாரமே பிடித்துக்கொண்டது.

ராஜ ராஜ சோழன் வாழந்த காலத்தையும் இந்து மதத்தின் வரலாற்றையும் ஒப்பிட்டுப் பார்த்துதான் இந்த சர்ச்சையில் பேச வேண்டும் என்கிறார் விவேகானந்தா கல்லூரியின் ஓய்வுபெற்ற வரலாற்று துறை பேராசிரியரான அ. கருணானந்தம்.

 

”ராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலம் கி.பி. பத்து மற்றும் பதினொன்றாவது நூற்றாண்டு. இந்து என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தபட்ட காலம் ராஜ ராஜ சோழனின் காலத்திற்கு மிகவும் பிந்தைய காலம்.

ராஜ ராஜ சோழனின் காலத்தில் இந்து என்ற சொல்லாடல் பயன்பாட்டில் இல்லை என்பது உறுதி. இதுவரை கண்டறியப்பட்ட சோழர் காலக் கல்வெட்டு எதிலும், இந்து என்ற சொல் காணக்கிடைக்கவில்லை.

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் எதிலும் இந்து என்ற சொல் நேரடியாக மதத்தை குறிக்கும் பொருள் கொண்ட சொல்லாக அந்தக் காலத்தில் அறியப்படவில்லை. அதனால், ராஜ ராஜ சோழன் இந்து மன்னன் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை” என்கிறார் கருணானந்தம்.

மேலும், ராஜ ராஜ சோழனின் காலத்தில் சைவ, வைணவ மதங்களே முதன்மை மதங்களாக இருந்தன என்கிறார் கருணானந்தம்.

“ராஜ ராஜ சோழனின் காலத்தில் சிவனை முழு முதற் கடவுளாக பார்க்கும் சைவ மதம் தழைத்தோங்கி இருந்தது.

அப்போது இந்து என்ற மதமே கிடையாது. சைவம், வைணவம்தான் முதன்மையான மதங்களாக இருந்தன.

சமணம் மற்றும் பௌத்த சமயங்கள் அந்த காலகட்டத்தில் அழிவை நோக்கி சென்று கொண்டிருந்தன. சைவம், வைணவ மதத்தில் அந்தக் காலத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தன.

ராஜராஜ சோழன் பின்பற்றிய வழிபாட்டு முறைகள் பாசுபத சைவம் என்ற பிரிவை சேர்ந்ததாக உள்ளன. அதனால், ராஜராஜ சோழன் இந்து மன்னனாக இருந்திருக்கவில்லை” என்கிறார் அவர்.

பேராசிரியர் அ. கருணானந்தம்

மேலும், தற்போதைய இந்து மதம் என்ற சொல்லாடலுடன் ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்த மதத்தை இணைத்துப் பார்ப்பது தேவையற்றது; அது ஒரு வரலாற்று பிழை என்கிறார் அவர்.

”வடமேற்கு திசையில் இருந்து இந்தியவுக்கு வந்த பாரசீகர்களும் கிரேக்கர்களும் இந்திய நாட்டை அப்போது சிந்து என்று வழங்கினார்கள்.

அந்த பெயர் சிந்து நதி பகுதியில் வசிப்பவர்கள் என்ற அர்த்தத்துடன் வழங்கப்பட்டது. காலப்போக்கில் சிந்து என்பது, ஹிந்து, இந்து என்று மருவிவிட்டது.

சிந்து என்றால் நதி என்று அர்த்தம், ஆனால் இந்து என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை. காலப்போக்கில் அரசியல்வாதிகள் இந்து என்பதை மதத்தை குறிக்கும் சொல்லாக மாற்றிவிட்டார்கள்” என்கிறார் கருணானந்தம்.

ராஜ ராஜ சோழன் காலத்தில் சிவன் கோவில்களில் பின்பற்றப்பட்ட மதம் சைவ மதம்தான் என்கிறார் ‘இராஜராஜம்’ என்ற நூலை எழுதியுள்ள வெ. ஜீவகுமார்.

”ராஜ ராஜனின் காலத்தில் சிவன் கோயில்களில் பின்பற்றப்பட்ட மதத்தை சைவம் என்றுதான் வழங்கினார்கள்.

தேவாரம் மற்றும் திருமுறை பாடல்களில் சைவம் என்ற சொல்தான் வழங்கப்படுகிறது. இன்றும்கூட சைவத்தை தனி மதமாக கருதுபவர்கள் இருக்கிறார்கள்.

சிவலிங்கத்தை மட்டும் வழிபடும் லிங்காயத்துகள் கூட தாங்கள் இந்துக்கள் அல்ல என்றுதான் கூறுகிறார்கள்.

சைவத்தை போலவே, ராஜ ராஜனின் காலத்தில் சமணமும் பௌத்தமும் பின்பற்றப்பட்டது. வைணவமும் பின்பற்றப்பட்டது.

கடவுளை வணங்காமல் வாழ்ந்த சித்தர்களும் இங்கு இருந்திருக்கிறார்கள். தான் சைவத்தை பின்பற்றினாலும், ராஜ ராஜனின் ஆட்சியில் பல மதங்களும் இருந்ததால் ஒரு மதத்தின் மன்னனாக ராஜ ராஜன் அறியப்படவில்லை” என்கிறார் ஜீவகுமார்.

ராஜராஜ சோழனின் சதயவிழா நினைவு சிறப்பிதழ் ஓவியம்

சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் முதன்முதலில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை குறிப்பிட இந்து என்ற சொல்லை பயன்படுத்தியதாகச் சொல்கிறார் அவர்.

“விதவிதமான கடவுள்களை வணங்கும் மக்களை, ஒரே பிரிவாகச் சேர்த்து அழைக்க இந்து என்ற சொல்லை ஆங்கிலேயர்கள்தான் குறிப்பிட்டார்கள்.

சர் வில்லியம் ஜோன்ஸ் 1790களில் சட்டங்களை தொகுக்கும்போது, கிறிஸ்துவர்கள் அல்லாமல், இஸ்லாமியர்கள் அல்லாமல் இருக்கும் ஒரு பெரும் தொகையான மக்களை இந்துக்கள் என்ற பெயரில் வழங்கினார். அது மதத்தின் அடையாளம் அல்ல, ஒரு பெயர் அல்லது குறியீடு மட்டும்தான்” என்கிறார் ஜீவகுமார்.

தற்போதைய வழக்கங்களை வைத்துக்கொண்டு ராஜ ராஜ சோழனை இந்து மன்னன் என்று சொல்வது பிழை என்கிறார் சென்னை பல்கலைக் கழகத்தின் தத்துவம் மற்றும் மத சிந்தனைகள் பிரிவின் பேராசிரியர் சரவணன்.

”இந்து என்ற சொல்லுக்கு தனியாக ஒரு வழிபாட்டு முறையோ கடவுளோ கிடையாது. இந்து என்று சொல்லில் குறிப்பிடுவது வேத காலத்து வழிபாட்டைத்தான்.

அதாவது வேள்வி நடத்தி வழிபாடு செய்வது. அது சனாதன தர்மத்தை, வர்ணாசிரமத்தை ஆதரிப்பது. அ

தற்கு முற்றிலும் மாறுபட்டதாகத்தான் தமிழர்கள் பின்பற்றிய மத வழிபாடுகள் இருந்தன. ஒன்பதாம் நூற்றாண்டில் சங்கரர் கூட ஆறு மதங்களைக் குறிக்க ஷன்மதம் என்ற சொல்லை பயன்படுத்தினார்.

அதாவது, சிவனை வழிபடுவது சைவம், விஷ்ணுவை வழிபடுவது வைணவம், முருகனை வழிபடுவது கௌமாரம், சூரியனை வழிபடுவது சௌரம், கணபதியை வழிபடுவது காணாபதியம், சக்தியை வழிபடுவது சாக்தம் என்று வகைப்படுத்தியுள்ளார்.

அதனால், தற்போதைய சொல்லாடலை வைத்துக்கொண்டு ராஜராஜ சோழனை இந்து மன்னன் என்று சொல்வது பிழை” என்கிறார் சரவணன்.

மேலும், சைவம் என்ற மதமே இந்து என்ற சொல்லில் மறைக்கப்பட்டது என்கிறார் சரவணன். ”திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தொன்மையான நூல்களில்கூட இந்து என்ற குறிப்புகள் வரவில்லை.

அதனால், பிற்காலத்தில் அரசுகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், வேத பிராமணர்கள் உயர்வானவர்கள் என்ற கோட்பாட்டை ஏற்படுத்தினர்.

பிறகு ஒரு கட்டத்தில், சைவ மதத்தின் முழு முதற் கடவுளான சிவனை பல இந்து கடவுள்களில் ஒருவராக இணைத்தனர்.

இப்படித்தான் சைவ மதத்தை இந்து என்ற பெயரில் வழங்க ஆரம்பித்து அதனை விழுங்கினர். பின்னர் வைணவத்திற்கும் அதுதான் நேர்ந்தது. சைவத்தை முழுமையாக பின்பற்றுபவர்கள் தாங்கள் இந்துக்கள் என்று தற்போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்கிறார் சரவணன்.
”ஹிந்துஸ்தானத்தில் இருப்பவர்கள் இந்துக்கள்”

ஆனால், வெற்றிமாறனின் கருத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகிறது பாரதிய ஜனதா கட்சி. “சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் அந்தக் கட்சியின் முன்னாள் தேசியச்

இந்து என்பது ஒரு மதமல்ல, வாழ்க்கை முறை என்பதால், அந்தச் சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை என்கிறார் தமிழக பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

”இந்தியா என்கிற ஹிந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் இந்துக்கள்தான் என்றே நாம் சொல்கிறோம்.

சைவமும், வைணவமும் மோதிக்கொண்டதாகவே இருக்கட்டும். அந்த மோதலை தடுத்து, இணைத்தது இந்து என்ற சொல்தானே? குருதிச் சேற்றில் தலைகள் உருண்டதாகவே வைத்து கொள்வோம்.

அதை தடுத்து, சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைத்தது ‘இந்து’ என்ற சொல்தானே? அதனால், இந்து என்ற சொல்லை வழங்குவதில் தவறில்லை,” என்கிறார் நாராயணன் திருப்பதி.

Share.
Leave A Reply