கிறிமியாவிற்கு இரசியாவில் இருந்து 2018-ம் ஆண்டு கேர்ச் நீரிணையின் குறுக்கே $3.7பில்லியன் செலவில் 2018-ம் ஆண்டு பெரும் ரவாரத்துடன் கட்டிய பாலம் அவரது பிறந்த நாள் பரிசாக 2022 ஒக்டோபர் 8-ம் திகதி சனிக்கிழமை தீயிடப் பட்டது என உக்ரேனின் படைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவி-த்துள்ளார்.
கிறிமியா பாலம், கேர்ச் நீரிணைப் பாலம் போன்ற பெயர்களால் அழைக்கப்படும் 19கிமீ (12மைல்) நீளமான பாலம் ஐரோப்பாவிலேயே பெரிய பாலமாகும். அதை தீப்பிடிக்க வைத்த தாக்குதலுக்கு உக்ரேன் உரிமை கோராவிட்டாலும் உக்ரேனில் பல தரப்பினரும் தம் சமூக வலைத்தளப் பதிவுகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
“பாலம் ஆரம்பம்; சட்டவிரோதமானதெல்லாம் அழிக்கப்படவேண்டும், களவாடப் பட்ட தெல்லாவற்றையும் உக்ரேன் திரும்பப் பெறவேண்டும்; ஆக்கிரமிப்பாளரகள் வெளியேற்றப்பட வேண்டும்” என உக்ரேனிய அதிகாரி ஒருவரின் டுவிட்டர் பதிவு கூறுகின்றது.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்படி ஒரு பாலம் கட்டும் முயற்ச்சி மேற் கொள்ளப்பட்டது.
பயங்கரவாதம் என்ற புட்டீனின் பயங்கர பதிலடியா?
கிறிமியா பாலத்தை சேதப்படுத்தியமையை பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்தார் விளடிமீர் புட்டீன்.
அவர் சொன்ன மறுநாள் 2022-10-10 திங்கட் கிழமை உக்ரேனின் ஏழுக்கு மேற்பட்ட நகரங்களில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
உக்ரேன் தலைநகர் கீவ் பல குண்டுவெடிப்புக்களால் பாதிக்கப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதல் உக்ரேனின் மேற்குப் புறத்தில் போலாந்து எல்லையில் உள்ள அதாவது இரசியாவில் இருந்து ஆகக் கூடிய தொலைவில் உள்ள நகரங்கள் மீதும் நடைபெற்றுள்ளது.
மேற்குப் பிராந்திய நகரமான Lviv நகர் மீது நடந்த குட்ண்டுத்தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்புக்கள் வேண்டுமென்றே தெரிவு செய்யப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் குடியிருக்கும் பல தொடர் மாடிக் கட்டிடங்கள் மீதான தாக்குதல் பாரதூரமான போர்க்குற்றமாகும்.
தாக்குதல் நடந்த வித்தில் முரண்பாடு
கேர்ச் பாலத்தின் மீது சென்ற வெடி குண்டு நிரப்பிய வண்டியை வெடிக்க வைத்து பாலம் சேதப்படுத்தப் பட்டதாக இரசியா சொல்கின்றது.
ஆனால் பாலத்தின் கீழ் ஆட்கள் இயக்கிய அல்லது ஆளில்லா படகு ஒன்றை பாலத்தின் மேல் எரிபொருள் தாங்கிச் செல்லும் ஏழு வண்டிகள் சென்று கொண்டிருக்கையில் வெடிக்கச் தீ மூட்டப்பட்டதாக மேற்கு நாட்டு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாலத்தின் உள்ள உருக்குகளை உருகச் செய்யும் அளவிற்கு தீயினால் வெப்பம் அதிகரிக்கும் படி தாக்குதல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
உக்ரேனுக்கு சிரமம் கொடுக்க கட்டப்பட்ட பாலம்
கிறிமியாவில் நிலை கொண்டுள்ள இரசியப் படையினருக்கான வழங்கல்களை துரிதமாகச் செய்வதற்கு கட்டப்பட்ட பாலம் 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதில் இருந்தே தாக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது.
குளிர்காலம் தொடங்குகின்ற நேரம் பார்த்து அது தகர்க்கும் நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. கொத்தளிப்பான கால நிலையில் கிறிமியாவிற்கான வழங்கல்களை இலகுவாகச் செய்வதற்கு மட்டும் அப்பாலம் கட்டப்படவில்லை.
வேண்டு மென்றே கடல் மட்டத்தில் இருந்து 30மீட்டர் உயரத்தில் அதைக் கட்டி கேர்ச் நீரிணை மூலம் உக்ரேனின் பெரிய கப்பல்கள் செல்வதை இரசியா தடுத்தது.
ஊதிப் பெரிதாக்கும் மேற்கு ஊடகங்கள்
வெறுவாயை மென்று கொண்டிருந்த மேற்கு நாட்டு ஊடகங்களுக்கு 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து உக்ரேனியர்கள் தொடச்சியாக உச்சக்கட்டமாக அவல்களை ஊட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதன் 2022 ஒக்டோபர் 8-ம் திகதி மொஸ்க்கோ நேரம் காலை ஆறுமணிக்கு உக்ரேன் பாலத்தின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. புட்டீனின் பொக்கிசம் அழிக்கப்பட்டது; கிறிமியாவிற்கான வழங்கல் துண்டிக்கப்பட்டது; புட்டீனிற்கு பேரிடி போன்று எல்லாம் மேற்கு நாட்டு ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன.
சிரியாவிற்கு பெரும் படை நகர்வை துரிதமாகச் செய்த இரசியாவினால் 19கிமீ தொலைவில் உள்ள கிறிமியாவிற்கு வான் வழியாகவும் கடல் வழியாகவும் வழங்கல்களை செய்வது முடியாத செயல் அல்ல.
சிறு பகுதி மட்டும் சேதமாக்கப்பட்ட பாலத்தை திருத்தி ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அதனூடாக பாரம் குறைந்த வண்டிகளை இரசியா ஓட வைத்துள்ளது.
ஆனால் தம்பட்டமடிப்பதில் விருப்பமுடைய இரசிய அதிபருக்கு பாலம் தீப்பிடித்தமை ஓர் இடுகுறி இழப்பீடாகும்.
இரசிய மக்களுக்கு மூடி மறைக்க முடியாத இழப்பாக இது இருக்கின்றது. கிறிமியாப் பாலத்தை 2018இல் திறந்து வைத்துவிட்டு புட்டீன் தானே ஒரு பார ஊர்தியை அதன் மேலாக ஓட்டிச் சென்றார்.
இரசியாவின் கடற்படையின் இதயமான செவஸ்டோபோல் தளத்தை மேலும் வலுவாக்கியது என அப்போது புட்டீன் சூளுரைத்திருந்தார்.
வலிமையான பாதுகாப்பு
கேர்ச் பாலத்தை பாதுகாக்க இரசியாவின் பெருமை மிக்க S-400 ஏவுகணை எதிர்ப்பு, செய்மதிக் கண்காணிப்பு, வேவு விமானம், ஈருடக கப்பல்கள், கதுவிகள் (ரடார்கள்) பயிற்றப்பட்ட டொல்பின்கள், நீரடி நீச்சல் கவலாளிகள், படகுகள் என இருபது வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
2022 ஓகஸ்ட் மாதத்தில் செவஸ்டோபோலில் உள்ள கடற்படைத் தலைமையகம் மீது உக்ரேன் ஆளிலிகள் (Drones) மூலம் தாக்குதல் செய்யப்பட்டது.
அதே மாதம் கிறிமியாவில் உள்ள இரசியாவின் சாக்கி விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கு மேற்பட்ட இரசிய விமானங்கள் வெடித்துச் சிதற வைக்கப்பட்டன.
இத்தாக்குதல்களுக்குப் பிறகு கிறிமியாவில் இருந்து பலர் கிறிமியாப் பாலத்தினூடாக தப்பி இரசியாவிற்கு ஓடியிருந்தனர். அப்போது அப்பாலத்தினூடாக ஒரு நாளுக்கு 38,000 கார்கள் பயணித்திருந்தன.
இரசியாவிற்கு எதிராக பயங்கரமான திட்டமா?
ஒரு புறம் உக்ரேனின் வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள இரசியப் படையினரை வெளியேற்றுவதில் ஆரம்பித்து பின்னர் லுகான்ஸ்க், மாரியப்போல் ஆகிய பிரதேசங்களில் இருந்தும் இரசியப் படையினரை அகற்றி கிறிமியா நோக்கி உக்ரேன் படையினர் முன்னேறுவது ஒரு திட்டம். மறு திட்டமாக கேர்சன் பகுதியை கைப்பற்றி கிறிமியாவை நோக்கி முன்னேறுவது.
அதற்கு வசதியாக கிறிமியாவிற்கான வழங்கல்களை துண்டிக்க வேண்டும் என்பதற்காக கிறிமியா பாலத்தை தகர்க்கும் முயற்ச்சியில் உக்ரேனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பார ஊர்தி போக்குவரத்துக்கு என்றும் தொடருந்து போக்குவரத்துக்கு என்றும் இரண்டு தனிப் பாலங்களில் பார ஊர்தி பாலம் மட்டும் சேதமடைந்துள்ளது. மீளவும் திருத்தியமைக்க ஆறுமாதம் எடுக்கக்கூடிய வகையில் இரண்டு பாலங்களும் சேதமாக்கப்பட்டால் மட்டுமே இரசியாவிற்கு பின்னடைவு ஏற்படும்.
இரசியா உக்கிரமான பதிலடி கொடுக்குமா?
உக்ரேனின் வட கிழக்குப் பகுதி கார்க்கீவ் பிரதேசத்தில் 2022 செப்டம்பரில் இரசியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து இரசியால் உக்ரேனின் உட்-கட்டுமான ங்கள் மீது தாக்குதல் நடத்தி குடிமக்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தியது.
அது போல் கிறிமியா பாலத்தின் மீதான தாக்குதலுக்கு இரசியா கடுமையான பழிவாங்கல் நடவடிக்கையை ஏற்படுத்தும். புட்டீனின் ஆதரவாளர்கள் கொடூரமான பதிலடி கொடுக்கும் படி அவரை வற்புறுத்துடவதாக செய்திகள் வெளிவருகின்றன. உக்ரேனும் அதற்கு தயாராகுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
இரசியாவில் தலைகள் உருளுமா?
புட்டீனின் ஆதரவாளர்களாக இருப்பவரகள் இரசியத் தேசியவாதிகள், செஸ்னியன் தலைவர் ரம்ஜான் கடிரோவ், இரசிய கூலிப்படை உரிமையாளர் யெவ்கெனி ப்ரிகொஜின் ஆகியோர் ஆகும். இந்த ஆதரவாளர்கள் உக்ரேன் போரில் இரசியாவின் பின்னடைவிற்கு இரசியத் தளபதி கேர்ணல் ஜெனரல் அலெக்சாண்டர் லப்பின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
அவர் பதவி விலக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது. இரசியாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்காக இரசியாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்கி ஷொய்கு தற்கொலை செய்யவேண்டும் என இரசியா கைப்பற்றிய கேர்சன் பிரதேசத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட Kirill Stremousov பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
-வேல்தர்மா-