கேரள மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட இரண்டு பெண்களை கடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்கள் கொலை மட்டுமின்றி ஷாஃபி மேலும் பல கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எலந்தூர் மக்களிடையே நிலவுகிறது. அங்குள்ள கள நிலவரத்தை வழங்குகிறது பிபிசி தமிழ்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பகவல் சிங்கின் வீடருகே நாம் முதலில் சந்தித்த பெயர் வெளியிட விரும்பாத திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்மணி தாமும் மாந்திரீகரான ஷாஃபியின் வலையில் சிக்கவிருந்ததாகவும் அதில் இருந்து கடைசியில் மீண்டதாகவும் கூறினார்.

“முதலில் ஷாஃபியின் வேண்டுகோளுக்கிணங்க சென்றிருக்க வேண்டியது நான் தான். என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை தருவதாக அவர் சொன்னார்.

ஆனால், கடைசியில் மனம் மாறினேன். என்னால் வர முடியாது என்று சொல்லி விட்டேன். அதன் பிறகுதான் ரோஸிலினை ஷாஃபி அழைத்துச் சென்றார்,” என்று அந்த பெண்மணி தெரிவித்தார்.

நரபலி விவகாரத்தில் ஷாஃபி, இப்படி ஒரு கொடூர செயலை செய்திருப்பார் என்பதை நம்ப முடியவில்லை என்கிறார் அவரது மனைவி.

நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் 61 உடல் பாகங்கள் பகவல் சிங் வீட்டிலுள்ள தோட்டத்தில் பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அவை கச்சிதமாக கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவற்றில் 56 உடல் பாகங்கள் பத்மாவுடையது. 5 எலும்புக்கூடு துண்டுகள் ரோஸ்லினுடையது என தெரிய வந்துள்ளது.

அவற்றில் நேற்று 35 பாகங்களும் எஞ்சிய 26 பாகங்கள் இன்றும் பிரேத பரிசோதனை மற்றும் அதைத்தொடர்ந்த ரசாயன ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

பத்மா, ரோஸ்லின் ஆகிய இரண்டு பெண்களின் உடல் பாகங்களும் ஒன்றுக்கொன்று கலந்திருப்பதால், தனித்தனியாக அவற்றைப் பிரித்தெடுக்க இருவருடைய ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பதற்றத்தில் உள்ளூர் மக்கள்

எலந்தூர் பகுதியை சேர்ந்த சஜி நம்மிடம் பேசுகையில், “கடந்த இரண்டு மூன்று நாட்களாக, மக்களை குலை நடுங்கச் செய்யும் தகவலை கேட்டதில் இருந்து உறைந்து போயிருக்கிறோம்.

நடந்த சம்பவம் எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. கல்வி, கலாசாரம் வளர்ந்ததாக சொல்லப்படும் இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு செயல் நடந்திருப்பது வேதனையையும், பயத்தையும் தருகிறது,” என்கிறார்.

“பொருளாதார ரீதியாக பணக்காரர் ஆவதற்கும் , சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பதற்காகவும் மனித பலி பூஜை நடந்துள்ளது. சமீபத்தில் கூடத்தாய் என்ற இடத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை விஷம் வைத்து கொன்ற சம்பவத்தை விட இச்சம்பவம் கொடூரமானது,” என்கிறார் சஜி.

வீட்டுத்தோட்டப் பகுதியில் புதைக்கப்பட்ட உடல் பாகங்களை தோண்டியெடுக்க போலீஸார் வந்தபோது அங்கு குழுமிய மக்கள்

உள்ளூர் வியாபாரியான ஜோஸ், பகவல் சிங் வீட்டருகே சொந்த வீடு கட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

தான் வேலைக்கு சென்று விடுவதால், பகவல் சிங் மற்றும் அவரது கும்பத்தினரை பார்த்தால் சிரிப்பதோடு சரி, அதிக பழக்கம் கிடையாது என்கிறார்.அவர்.

“பகவல் சிங் ஒரு ஆயுர்வேத வைத்தியர் என்பதால் சிகிச்சைக்காக அவரிடம் பலரும் செல்வர். பகவல் சிங்கும் அவரது மனைவி லைலாவும் அக்கம்பக்கத்தினரிடம் நன்றாகவே பழகினர்.

ஆரம்பத்தில் பகவல் சிங்கும் அவரது மனைவியும் கைதானபோது அப்பாவிகளை ஏன் போலீஸார் கைது செய்கிறார்கள் என்றே நினைத்தோம். அதற்கு பிறகு அவர்களின் செயல்கள் வெளிச்சத்துக்கு வரவே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது,” என்கிறார் ஜோஸ்.

இது போன்ற கொலைகள் மேலும் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் சந்தேகப்படுவதால் காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜோஸ் கேட்டுக் கொண்டார்.

உள்ளூர்வாசிகளிடம் விசாரணை நடத்தும் போலீஸார்

இதற்கிடையே, கடவந்திரா காவல் நிலையத்தில் இருந்து பகவல் சிங்கின் வீடருகே வசிப்பவர்களிடம் அவரை முன்பின் தெரியுமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பகவல் சிங் வைத்தியரை தெரியுமா? அவர் புகழ்பெற்றவரா என்று போலீஸார் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

இரண்டு பெண்களின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டபோது, அரசு தரப்பு சாட்சியாக வட்டார பஞ்சாயத்து தலைவர் சாலி லாலு இருந்திருக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வீட்டுத்தோட்டத்தில் குற்றம்சாட்டப்பவட்டர்கள் சொன்ன இடங்களில் எல்லாம் போலீஸார் தோண்ட நடவடிக்கை எடுத்தனர்.

நான் சாட்சியாக இருந்தேன். விவசாய நிலத்தில் சேனை கிழங்கு தோண்டுவதைப்போல, கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல் உறுப்புகள் கச்சிதமாக வெட்டப்பட்ட நிலையில் ஒவ்வொன்றாக கிடைத்தன.

தோட்டத்தில் மழை பெய்ததால் உடல் பாகங்கள் சேறும் சகதியுமாக இருந்தன. பாகங்கள் எடுக்கப்பட்டபோது,புதைக்கப்பட்ட இடத்தில் அழுகிப்போன நாற்றம் அதிகமாக வீசியது,” என்று கூறினார்.

உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக வெளியே எடுக்கப்பட்டபோது அவை இருந்த நிலையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்கிறார் சாலி லாலு.

பிற்பகலில் ஆரம்பித்து இரவு 10 மணிவரை புதைக்கப்பட்ட இடங்களில் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட பெண்கள் உபயோகப்படுத்திய லிப்ஸ்டிக், கண்ணாடி, பர்ஸ், சாவி உள்ளிட்ட பொருட்களும் அங்கு கிடைத்தன.

“முதலில் பெண்களின் தலைகள் கிடைத்தன. இரண்டாவதாக கைப்பகுதி கிடைத்தன. மற்ற உறுப்புகள் எங்கே என்று கேட்ட போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேறு குழிகளை காண்பித்தனர்.

அவர்கள் சொன்னபடியே மற்ற இடங்களில் வேறு உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கப்பட்டன.இதுபோல வேறு நரபலிகள் நடந்தனவா என்பது குறித்து போலீஸார் தான் விசாரிக்க வேண்டும்,” என்கிறார் சாலி லாலு.

இதற்கிடையே, சம்பவ பகுதிக்கு வந்த ரோஸ்லினின் மகள் மஞ்சு வர்க்கீஸ் பிபிசி தமிழிடம் பேசினார். 2015ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம்வரை உத்தர பிரதேசத்தில் இவர் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கேரளாவின் காலடிக்கு கடந்த ஜனவரி மாதம் வந்த அவர், தனது அம்மாவுடன் ஜனவரி பிப்ரவரி 18ஆம் தேதி வரை இருந்துள்ளார். மறுதினம் வடக்காஞ்சேரி ஓட்டுப்பாற என்ற இடத்தில் அறக்கட்டளையில் பணியில் சேர்ந்துள்ளார்.

“என் அம்மா லாட்டரி விற்கவில்லை”

தனது அம்மா ஜூன் 6 ஆம் தேதி முதல் காணவில்லை என்று காலடி காவல் நிலையத்தில் அவர் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முறைப்படி புகார் கொடுத்துள்ளார்.

“தம்பதி உள்பட மூவர் கடந்த செவ்வாய்கிழமை கைதான பிறகு ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.ஆனால், கொல்லப்பட்டது எனது அம்மாதான் என்பதை இன்னும் போலீஸார் என்னிடம் உறுதிப்படுத்தவில்லை,” என்கிறார் மஞ்சு.

ரோஸிலின் (இடது), பத்மா (வலது)

தனது அம்மா ரோஸ்லின் காலடியில் வசித்து வந்ததாகவும், தன்னுடைய சகோதரன் இடுக்கி மாவட்டத்திலும், தான் வடக்காஞ்சேரியில் வசித்து வந்ததாகவும் ரோஸ்லின் தெரிவித்தார்.

தன்னுடைய அம்மாவை வட இந்தியாவிலேயே தன்னுடன் இருக்கச் சொன்னபோது, நிறைய பொருட்கள் வீட்டில் இருப்பதால், அதை எடுத்து வர முடியாது என அவர் கூறியதாக ரோஸ்லின் கூறினார்.

மேலும், சில ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல தனது அம்மா லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யவில்லை என்றும் அவர் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்யும் பிரதிநிதியாக இருந்தார் என்றும் மஞ்சு கூறினார்.

இந்த நிலையில் ரோஸ்லின் பயன்படுத்திய மேக் அப் சாதனங்கள், குடை, பை ஆகியவற்றை மஞ்சுவிடம் காண்பித்து அவை அவருடைய தாயாருடையதுதான் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டிஎன்ஏ பரிசோதனைக்கு நடவடிக்கை

இந்த நிலையில், ரோஸ்லினின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்காக, அவரது மகள் மஞ்சுவின் மாதிரியை தடயவியல் துறையினர் பெற்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அதை அனுப்பி வைத்துள்ளனர்

ஷாஃபி பற்றி ஏதாவது தெரியுமா என மஞ்சுவிடம் நாம் கேட்டபோது, அவர் பற்றிய எந்த விவரமும் தனக்குத் தெரியாது என்றும் மஞ்சு கூறினார்.

இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை கடைசியாக வந்த தகவலின்படி ஷாஃபி, பகவல் சிங், லைலா ஆகிய 3 பேரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

Share.
Leave A Reply