குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை அகதிகள் முகாமில் திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லைக் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை, மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது இரும்பூதிப்பட்டி. இந்த கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது.

இந்த கிராமத்தை உள்ளடக்கிய சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக, அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள வெஞ்சமாங்கூடலூரைச் சேர்ந்த அன்புராஜ் (36) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த செப்டம்பர் 29 – ஆம் தேதி மதியம் இரும்பூதிப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த திருமணமான 35 வயது பெண்ணிடம், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியான அந்த பெண், அவரை தடுத்திருக்கிறார்.

ஆனால், அன்புராஜ் தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுக்கவே, அந்தப் பெண் சத்தமிட்டிருக்கிறார். இதனால், அருகில் இருந்தவர்கள் வருவதை கண்டு அன்புராஜ் அங்கிருந்து தப்பிச்சென்றதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்பு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

Share.
Leave A Reply