தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்?

பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்டால், தைராய்டு சுரப்பி வேலை செய்வதில் கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என சென்னையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் மாதங்கி ராஜகோபால் கூறுகிறார்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ள பெண்கள், தங்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதை உணர்ந்தால் உடனே தைராய்டு சோதனை செய்துகொள்வது அவசியம் என்றும் குழந்தை பிறப்புக்கு முன்னும் கர்ப்ப காலத்திலும் தைராய்டு பிரச்னையை சரிசெய்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்கிறார் மாதங்கி.

அயோடின் கலந்த உப்பை எடுத்துக்கொள்வது பல விதமான தைராய்டு பிரச்னைகளில் இருந்து நம்மை காக்கும் என்று கூறும் அவர், ”தற்போது சந்தையில் பலவிதமான உப்புகள் விற்கப்படுகின்றன.

கருப்பு நிற உப்பு, இமாலய உப்பு என்ற சிகப்பு நிற உப்பு, வெள்ளை உப்பு என உப்பில் பலவிதங்கள், பல பிராண்டுகளில் கிடைக்கின்றன.

நாம் அயோடின் கலந்த உப்பு எடுத்துக்கொண்டால், அது தைராய்டு சுரப்பி மூலம் தேவையான அளவு ஹார்மோன் சுரப்பதை உறுதி செய்யும்.

பேறுக் காலத்தில் தைராய்டு குறைவாகவோ, அதிகமாகவோ சுரப்பதை அவ்வப்போது சோதனை செய்வார்கள். ஏனெனில், தைராய்டு பிரச்னை தாயை மட்டுமல்ல, வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், அதை சரிசெய்வது அவசியம்,” என்கிறார் மருத்துவர் மாதங்கி.

மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், தைராய்டு பிரச்னை காரணாமாக பல ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முன்கழுத்து கழலை இருந்ததை காணமுடிந்தது என்றும் அயோடின் உப்பு பயன்பாடு அதிகரித்ததால் கழலை உள்ளவர்களை அதிகம் காணமுடிவதில்லை என்றும் கூறினார்.

இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் பலவும் சீராக வேலைசெய்வதற்கு தைராய்டு சுரப்பி தேவைப்படுவதால், தைராய்டு பிரச்னை மற்ற உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

தைராய்டு அதிகமாக சுரப்பது அல்லது குறைவாக சுரப்பது என இரண்டு வகையான கோளாறுகள் ஏற்படும் என்கிறார் மருத்துவர்.

தைராய்டு சுரப்பி தேவைக்கு அதிகமாக வேலை செய்து அதிகமான ஹார்மோன் சுரந்தால் ஹைப்பர் தைராய்டிசம் என்ற குறைபாடும், குறைவாக ஹார்மோன் சுரந்தால் ஹைபோ தைராய்டிசம் என்ற குறைபாடும் ஏற்படும் என்கிறார் அவர்.

”தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தால், கை நடுக்கம், எடை குறைவு, இதயத் துடிப்பு அதிகரிப்பது, அடிக்கடி பசி எடுக்கும் உணர்வு, பதற்றம் மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். மாதவிடாய்க் காலத்தில் அதிகமான உதிரப்போக்கு ஏற்படுவது, மிகவும் குறைவான உதிரப்போக்கு ஏற்படுவது, மாதவிடாய் சரியான காலத்தில் வராமல் போவது உள்ளிட்டவை ஏற்படும்.

 

தைராய்டு குறைவாக சுரந்தால், உடல் எடை அதிகரிப்பு, குளிர் தாங்கமுடியாமல் இருப்பது, உடல் சோர்வு, கால்களில் வீக்கம் போன்றவை இருக்கும், மாதவிடாய் தொந்தரவுகள் ஏற்படும்,”என்கிறார் மாதங்கி.

தமிழ்நாட்டில் எவ்வளவு பெண்களுக்கு தைராய்டு குறைபாடு?

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு(5) மூலம் வெளியான புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் அதிகபட்சமாக, கேரளாவில் பத்து லட்சம் பெண்களில் 8,696 பேருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாகவும், நாகலாந்தில் பத்து லட்சம் பெண்களில் 505 பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பத்து லட்சம் பெண்களில் 4,076 பேருக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

Share.
Leave A Reply