ஓர் யுத்தம் யார் சரியென்பதை அல்லாமல், எவர் எஞ்சியிருக்கப் போகிறார்கள் என்பதையே தீர்மானிக்கும் என்பார், பேர்ட்ரன்ட் ரஸல்.
உக்ரேனின் மீது ரஷ்யா தொடுத்த யுத்தத்திலும் அப்படித்தான். உக்ரேனைப் பயன்படுத்தி ரஷ்யாவை பழிவாங்க நினைத்த நேட்டோ நாடுகள் சரியா?
ஐரோப்பிய ஒன்றியத்தை கிழக்கு நோக்கி விஸ்தரித்து, உக்ரேனிய மண்ணுக்குள் ரஷ்யாவைத் தாக்கக்கூடிய ஆயுதங்களை நிலைநாட்ட நினைத்த அமெரிக்கா சரியா?
மேற்குலகை நம்பிக் கொண்டு ரஷ்யாவிற்கு சவால் விடுத்த உக்ரேன் சரியா? இந்த மூன்று கேள்விகளுக்கான விடை சிக்கலானது.
தற்போதைய நிலையில் நேட்டோ, ரஷ்யா, உக்ரேன் ஆகிய மூன்று தரப்புக்களும் திரிசங்கு நிலையில் உள்ளதையே போர்க்களத்தின் நிலவரங்கள் காட்டுகின்றன.
கடந்த பெப்ரவரி மாதம் உக்ரேனிய மண்ணை ஆக்கிரமிக்கத் தொடங்குவதற்கு முன்னர், இந்த யுத்தம் இவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று விளாடிமிர் புட்டின் நம்பியிருக்க மாட்டார்.
உக்ரேனியப் படைகளுக்கு இந்தளவு போர் ஆற்றல் இருக்குமென மேற்கு நாடுகள் கூடக் கணித்திருக்க மாட்டாது.
போர்;க்களத்தில் சண்டையிடும் படைத்தரப்புக்களில், எந்தத்தரப்பிற்கு படைப்பலம் அதிகமாக இருக்கிறது என்பது முக்கியமானது தான்.
எனினும், எந்தப் படை தரைத்தோற்றங்களை அறிந்து, சரியான வியூகங்களை வகுத்து முன்னேறுகிறதோ, அந்தப் படைக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்பதும் படைவீரர்களின் மனோதிடமும் உளவுரணும் அதை விடவும் முக்கியமானது,
ரஷ்யாவின் படைப்பலம் அதிகமாக இருந்தாலும், உக்ரேனிய படைவீரர்கள் கூடுதல் உளவுரண் மிக்கவர்களாக காணப்படுகிறார்கள்.
இதன் காரணமாக, இன்று வரையிலும் தாம் நினைத்த இலக்குகளை ரஷ்யப் படைகளால் அடைய முடியவில்லை. தவிரவும், ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்த பெருநிலப்பரப்பை உக்ரேனியப் படைகள் மீளவும் கைப்பற்றியுள்ளன.
உக்ரேனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களையும், கருங்கடல் கரையோரப் பிரதேசங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று புட்டின் நினைத்தார். அந்த எண்ணத்தை உக்ரேனியப் படைகள் நிறைவேற்ற விடவில்லை.
இது தவிர, கடந்த எட்டு வருடங்களாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த டொன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யப்படைகளின் ஒருமுனைப்படுத்தப்பட்ட தாக்குதலையும் உக்ரேனியப் படைகள் தடுத்து நிறுத்தின.
இதில் கார்க்கிவ் என்ற மாநிலத்தை உக்ரேனியப் படைகள் மீளவும் கைப்பற்றியதன் மூலம் ரஷ்யாவிற்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது.
தற்போதைய களநிலவரத்தை ஆராய்ந்தால், நேட்டோ வழங்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரேனியப் படைகள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலப்பரப்பை கூடுதலாக ஊடுருவ முடியும். முன்னரங்க நிலைகளை அப்பால் நகர்த்துதலும் சாத்தியமே. இத்தகைய முன்னகர்வை சமாளிக்க ரஷ்ய ஜனாதிபதி படைகளை குவிக்க நேரிடும். இதற்கு ஆட்சேர்ப்பு செய்தல் அவசியம்.
ஓட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரேனிய யுத்தம், ரஷ்யர்கள் மத்தியிலும் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய மக்கள் படைகளுக்கான கட்டாய ஆட்சேர்;ப்பை விரும்பவில்லை. ஆங்காங்கே எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டு தானிருக்கின்றன.
இத்தகையதொரு சூழ்நிலையில் தான், ரஷ்யர்கள் செறிந்து வாழும் கிரிமியா குடாநாட்டிற்குரிய பாலம் தகர்க்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலைகள் மீது ரஷ்யா குண்டுகளைப் போட்டது. ரஷ்யாவின் இலக்கு, உக்ரேனிய மின்விநியோக வலைப்பின்னலின் கேந்திர நிலையங்கள் எனக் கூறப்பட்டாலும், இந்தத் தாக்குதலில் சிறுவர்களும் பலியானதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மேலைத்தேய நாடுகளைப் பொறுத்தவரையில், இந்த யுத்தத்தில் உக்ரேனியப் படைகள் தோற்றுவிடவோ, புட்டின் வென்று விடவோ கூடாது. மறுபுறத்தில், ரஷ்யா அணுவாயுதங்களைப் பயன்படுத்தி நேட்டோ நாடொன்றைத் தாக்கும் அளவிற்கு யுத்தம் தீவிரம் அடைந்து விடவும் கூடாதென மேற்கு நாடுகள் விரும்புகின்றன.
உக்ரேனிய யுத்தத்தைப் பொறுத்தவரையில், இப்படி நடந்தால் நல்லது என்ற எண்ணம் இருக்கிறதோ தவிர, இது தான் நடக்க வேண்டும் என்ற தி;ட்டவட்டமான இலக்கு கிடையாது. இந்த யுத்தத்தை எப்படி முடிப்பதென்ற குழப்பநிலையில் மேற்குலகம் உள்ளதை தெளிவாகக் காணலாம்.
புட்டினுக்கும் அதேநிலை தான். போர்க்களத்தில் ஏற்படும் தோல்விகள் அவரது சுயமரியாதைக்கும் பதவிக்கும் சவால் என்பதை அறிவார்.
எனவே, தரைவழியாக படைகள் பின்வாங்குவதற்கு முன்னர், கடந்த வாரம் நிகழ்ந்ததைப் போல, உக்ரேனிய தரப்பில் பேரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தாக்குதலை நடத்தி தம்மை நிரூபிக்க முனையக்கூடும்.
இதற்காக நீண்டதூர வீச்சுகொண்ட ஏவுகணைகள், மரபுவழி போர் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவருக்கு சிக்கல் கிடையாது.
ஆனால், அடிக்கடி தாம் அச்சுறுத்துதைப் போல, உக்ரேன் மீதோ நேட்டோ நாடொன்றின் மீதோ அணுவாயுதத் தாக்குதல் நடத்துவாரா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
இது பெரும்பாலும் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. அணுவாயுதம் என்பது உணர்வுபூர்வமான விடயம்.
உக்ரேனில் இருந்து பிரிந்து செல்லும் பிராந்தியங்களை மீளிணைப்பதாக புட்டின் மேற்கொண்ட அறிவித்தல், சர்வதேச அரங்கில் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக ஐ.நா. பொதுச்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யாவைக் கண்டிப்பதற்கான தீர்மானம் 143நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
இத்தகையதொரு பின்புலத்தில், மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு வழங்கக்கூடிய ஆதரவை நிறுத்தும் வகையில், ஏதோவொரு அச்சுறுத்தல் விடுப்பதற்காக, அணுவாயுத பயன்பாடு பற்றி எச்சரிக்கை விடுக்கலாம்.
இத்தகைய அச்சுறுத்தலலை உக்ரேனை சரணடையச் செய்யும் யுக்தியாகவும் பயன்படுத்தலாம். எனினும், அணுவாயுதங்களைப் பயன்படுத்தினால் அது தமக்கே உலை வைத்து விடுமென்பதை அவர் அறியாமல் இருக்க மாட்டார்.
கடந்த கால அனுபவங்களைப் பார்த்தால் விளாடிமிர் புட்டினை நம்ப முடியாது என்பதையும் கூறிவிட வேண்டும். மிகவும் மோசமான தீர்மானங்களை மேற்கொள்வதில் புட்டின் சளைத்தவர் அல்லர். அதற்கான அவசரமும், தேவையும் அவருக்கு இருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
இந்த யுத்தத்தில் எந்தவொரு அணுவாயுத பயன்பாடும் நேட்டோ நாடுகளையும் போருக்குள் இழுத்து விட்டு, உக்ரேனின் இருப்பைக் கேள்விக்குறியாக்கி விடும் என்பது தெளிவான உண்மை.
மறுபுறத்தில், போர்க்களத்தில் உக்ரேனியப் படைகள் முன்னேறி, ரஷ்யாவின் தரப்பில் பேரிழப்புக்கள் ஏற்பட்டால், அது ரஷ்ய ஜனாதிபதியின் அரசியல் இருப்பைப் பாதிக்கும்.
ரஷ்ய ஆட்சியதிகாரத்தை அவர் இரும்புக் கரங்களால் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்ற தோற்றப்பாடு ஏற்பட்டாலும், அவரது பதவிக்கு வேட்டு வைக்கக்கூடிய அரசியல் சக்திகள் வலுவடைந்து வருகின்றன.
உக்ரேனிய – ரஷ்ய யுத்தம் எந்தத் திசையில் பயணிக்கும் என்பது தெரியாது. இதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிப்பிடுவதும் கடினம்.
ரஷ்யா வெற்றி பெற்றால், உக்ரேன் என்றொரு நாடொன்று இருக்குமா அல்லது உக்ரேன் வெற்றி பெற்றால், புட்டின் என்னாவார் என்ற கேள்விகளைத் தவிர்க்க முடியாது.
இந்த நிலையில், சமாதானத் தீர்வுகளுக்கு சாத்தியம் இருந்தும், அதனை நாடாத எந்தவொரு போரும் அர்த்தமற்றது என்ற உண்மையையே உக்ரேனிய யுத்தமும் நிரூபித்து வருகிறது.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-