உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என அந்த பெண் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். பாதிக்கப்பட்ட முதியவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
கோவை: கோவையை சேர்ந்தவர் 58 வயது முதியவர் ஒருவர் சித்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்தபோது அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதனை எடுத்து அவர் பேசினார்.
அப்போது எதிர்முனையில் பெண் ஒருவர் பேசினார். அவர், முதியவரிடம் நான் உங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தேன்.
உங்களை பார்த்திருக்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள். உங்களை போன்ற ஒரு அழகனை பார்த்ததில்லை என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்திருக்கிறார்.
முதியவரும் அதனை நம்பினார். அதன்பின்னர் தொடர்ந்து 2 பேரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தனர்.
இந்த நிலையில் ஒருநாள் முதியவரை போனில் தொடர்பு கொண்ட இளம்பெண், நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
நாம் இருவரும் சந்தித்து பேசி ஜாலியாக இருக்கலாம் என கூறினார். நாம் எப்போது சந்திக்கலாம் என கேட்டிருக்கிறார்.
முதியவரும் பெண்ணின் பேச்சில் மயங்கி அவரை நேரில் சந்திப்பதற்கு ஆசை தெரிவித்தார். அதற்கு அந்த பெண் நீங்கள் என்னை சந்திக்க வரும் போது டிப்டாப் உடையணிந்தும், நகைகளை அணிந்தும் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதற்கு என்று முதியவர் கேட்க, நீங்கள் டிப்டாப் உடையில் நகை அணிந்தால் மிகவும் அருமையாக இருக்கும் என ஆசை வார்த்தையை அள்ளி வீசினார்.
முதியவரும் இளம்பெண்ணின் வார்த்தைகளை அப்படியே கேட்டு கொண்டவராக, டிப்டாப் உடையணிந்து கொண்டார்.
மேலும் வீட்டில் இருந்த 5 பவுன் நகையையும் எடுத்து அணிந்து கொண்டு இளம்பெண்ணை பார்க்க போகும் ஆவலில் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
போகும் வழியில் செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் துடியலூர் சந்திப்பில் நிற்பதாக கூறினார்.
அங்கு சென்றதும் இளம்பெண்ணை, முதியவர் சந்தித்தார். பின்னர் இளம்பெண், முதியவரை கரட்டுமேடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு 2 பேரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு வாலிபர் இவர்களின் அருகே வந்தார்.
வந்த வேகத்தில் முதியவரை பார்த்து, நீ யார் எப்படி என் மனைவியுடன் பேசி கொண்டிருப்பாய் என கேட்டார்.
மேலும் முதியவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து இருக்குமாறு செல்போனில் புகைப்படமும் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.
பணம் தராவிட்டால் இந்த புகைப்படத்தை உன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டினார்.
மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் பறித்து கொண்டு அவரை அங்கிருந்து விரட்டினர்.
இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி நகையை பறித்த இளம்பெண் மற்றும் வாலிபரை தேடி வருகின்றனர்.