தனக்கு தேவையெண்டால் எல்லோரும் தமிழன் இல்லையெண்டால் சக்கிலி பறையரோ”

இலங்கையின் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான இராஜேஸ்வரி பாலசுப்ரம ணியம் எழுதிய நாவல்களில் முக்கியமானது “தில்லையாற்றங்கரை”என்பதாகும். இந்த நாவல் சுமார் இருபது வருடங்களுக்குமுன் எழுதப்பட்டது.

இந்தநாவல் தமிழரசு கட்சியின் தொடக்ககாலங்களில் அவரது சொந்த கிராமங்களான அம்பாறை மாவட்டத்தின் கோளாவில், மற்றும் ஆலையடிவேம்பு கிராமவெளிகளில் பயணிக்கின்றது. அதில் வருகின்ற ஒரு கம்யுனிஸ்ட் வாத்தியார் ஒரு தமிழரசுகட்சி பிரமுகரை பார்த்து இப்படி கேட்பார்,

“தனக்கு தேவையெண்டால் எல்லோரும் தமிழன்இல்லையெண்டால் சக்கிலி பறையரோ”. அந்த பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதியொருவர் இத்தனை வருடங்கள் கழித்தும் அதே நிலைமையை எதிர் கொள்ளுகின்ற  அவலம்  இன்றும் நிகழ்கின்றது என்பதை அண்மையில் பாராளுமன்றத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.

அண்மையில் ( 09 ஒக்ரோபர் 2014,) பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் உரையாற்று கையில் ஏற்பட்ட விவாதத்தின் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய  பியசேனவைப் பார்த்து நீ கீழ்சாதி வாயை மூடிக்கொண்டிரு என்று நாகரிகமற்ற முறையில் வார்த்தைகளை கொட்டி தீர்த்துள்ளார்.

இந்த வார்த்தைப் பிரயோகங்கள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களிடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் இதுகுறித்து மிகப்பெரும் மனவேதனையடைந்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அரசியல் என்பது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வளவு கீழ்த்த ரமாக கையாளுகின்றது என்பதற்கு அரிய நேந்திரனின் இந்த பேச்சு மீண்டுமொரு உதாரணமாகியுள்ளது.

2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தந்தை செல்வா அவர்களின் 35 ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ்ப்பா ணத்தில் இடம்பெற்றபோதும் இது போன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதிக்க சாதிமனோபாவம் பகிரங்கமானது..

sivaji-lingam

முன்னாள் அரசியல் பெருந்தலைவர்களில் ஒருவரான இராசதுரை அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுக்க யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கு இராசதுரை அவர்களின் பிரசன்னம் நிகழ்ந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் எழுந்து அவரை மட்டக்களப்பு சக்கிலியா என திட்டித் தீர்த்தார்.

தமிழுக்கு தொண்டாற்றுகின்றோம் என விளித்து சாதிமான்களாக வாழ்ந்துவிட்டுபோன தமிழ் தலைவர்களின் தொடர்ச்சி அற்றுபோய் விட கூடாது என்பதாலோ இந்த அரியநேந்திரனும் இப்படி சிவாஜிலிங்கம் பாசையில் பேசியுள்ளார்.

மட்டக்களப்பானது சாதிமான் ஆறுமுகநாவலரின் ஆசாரகறை படியாது தப்பிகிடக்கின்ற பூமி. யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்ட முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பிறந்த மண்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச கல்வி கொடுக்காதே என்று யாழ்ப்பாணத்தில் ஜி.ஜி.பொன் னம்பலம் கட்டைபஞ்சாயத்து செய்த வேளைகளில் அனைவருக்கும் ஆலயபிரவேசம் என்று பகுத்தறிவு பெரியாரை மட்டக்களப்புக்கு அறிமுகம் செய்த பெரும் தலைவர் இராஜதுரை அரசியல் செய்த இந்த மண்ணிலே இப்படி யொரு மக்கள் தலைவனா என்று எண்ண மனது கூசுகிறது. மட்டக்களப்பு மண்ணு க்கே மாபெரும் அவமானத்தை அரசியல் தலைவராக வலம்வரும் அரியநேந்திரனின் இந்த பேச்சு ஏற்படுத்தியிருக்கிறது.

கண்ணியம்மிக்க கனவான்களாக கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய அவையிலே அரியநேந்திரன் கொட்டித் தீர்த்த இந்த அருவருக்கத்தக்க வார்த்தை களையிட்டு தமிழ் பத்திரிகைகள் எதுவுமே ஒரு பெட்டிசெய்தியாக கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஒரு சமூகத்தை வழி நடத்தும் பொறுப்புமிக்க பத்திரிகை யாளர்கள் இந்த விடயத்தில் கண் மூடி வாய் பொத்தி நடந்துகொள்ள முயற்சிப்பது எதற்காக? அரியநேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி என்பதாலா?

அல்லது தமிழர் ஒற்றுமைக்கு இப்படிப்பட்ட பேச்சுக்களே அவசியம் என கருதுவதாலா? ஏனிந்த மௌனம்? தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை என்று வாய்க்குவாய் கத்துவதால் மட்டும் தேசிய உணர்வு உருவாகி விடுமா? ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? என்று கேட்டானே பாரதி.அது உங்களை நோக்கித்தான் என்று ஒத்துகொள்ள நீங்கள் தயாரா?

உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளை அமைத்து கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காக இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் கூட அண்மையில்தான் ஒக்டோபர் 4ம், 5ம் திகதிகளில் ஜேர்மனியின் ஹம் நகரில் நடைபெற்றது.

சர்வதேச தமிழறிஞர்கள் பலர் அங்கு கூடினர். தமிழரசு கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா அங்கே விசேட வரவேற்பளிக்கப்பட்டு வீற்றிருந்தார். தமிழ் நாட்டில் தலித்மக்கள் என்று அறியப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விசேட உரையா ற்றினார்.

அங்கு அவர் பேசுகையில் நாம் எல்லோரும் சாதிக்க வேண்டிய மிகப்பெரிய சவால், நாம் எல்லோரும் சந்திக்க வேண்டிய மிகப்பெரிய சவால் தமிழ் இனத்தின் ஒற்றுமையை வென்றெடுப்பதேயாகும் என ஓங்காரமிட்டார்.

திருமாவளவனின் அந்த அருமையான கனவு சுக்குநூறாகிவிட்டது. நான்கு நாட்கள் கடக்கமுன்பே இந்த அரியநேந்திரன் திருமாவளவனின் கனவு களை தன்காலடிகளில் போட்டு மிதித்திரு க்கின்றார்.பாவம் திருமாவளவன் போன்றவர்கள் தலித் மக்களின் விடுத லையை இந்த சாதி போற்றும் தமிழ் தேசிய வாதிகளிடம் தேடிவருகின்றார்.

அரியநேந்திரனால் கீழ்சாதி என்று பழிக்கப்பட்ட பியசேனா பாராளு மன்றத்தின் ஒரு கௌரவ உறுப்பினர் ஆவார். அரியநேந்திரன் போன்று கிங்ஸ்லி இராஜநாயகம் எம்பியை புலித்தளபதி ரமேசை கொண்டு கட்டிவைத்து இராஜினாமா பண்ணசெய்யவைத்தபின் அந்த இடத்துக்காக பின்வழியால் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தவரல்ல.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் பதவியில் இருக்கும் அனைவரும் கட்சியின் செல்வாக்காலும் வீட்டு சின்னத்தின் மகிமையால் பதவி பெற்றவர்கள் ஆகும்.  ஆனால் பியசெனா விடயத்திலோ இந்த விதி தலைகீழானது.

ஆலையடிவேம்பில் பியசேனாவை வைத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு பதவி பெற்றது. எம்ஜிஆர் ரசிகனான பியசேனா தனது சமூக சேவைகள் மூலம் கிராமிய மக்களின் மதிப்பை பெற்றவர்.ஏழை மக்களின் தோழனாக அவர்களின் இன்பதுன்பங்களின் பங்காளனாக ஆலயடிவேம்பு மக்களிடத்தில் முடிசூடா மன்னனாக வலம்வந்தவர்.

இந்த வாய்ப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தி அவரை கட்சியில் சேர்த்து கொண்டது. 2006ம் ஆண்டு   உள்ளுராட்சி மன்றதேர்தலில் 7,600 வாக்குகளை பெற்று ஆலயடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளராக அரசியலில் காலடி வைத்தவர் இந்த பியசெனா ஆகும்.

பின்னர் 2010ம் ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலில் தேர்தலில் 11,139 வாக்குகளைபெற்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரானவர். இத்தகைய மக்கள் பிரதிநிதி ஒருவரை அரியநேந்திரன் சாதிபெயர்சொல்லி இழிவு படுத்துவது என்பது அவர் பிரதி நிதித்துத்துவம் செய்யும் அந்த பல்லாயிரம் மக்களையும் இழிவு படுத்துவதாகும்.

அதுமட்டுமல்ல ஒரு தெரு சண்டியன் போல ஒரு பாராளுமன்றத்தில் உரை யாற்றும் அரியநேந்திரன் போன்றவர்கள் இந்த பதவிகளுக்கு எப்படி பொருத்த மானவர்களாக இருக்க முடியும்? தமிழ் மக்களின் ஒரு பகுதியினரான தாழ்த்த ப்பட்ட மக்களை இப்படி கேவலமாக பேசிக்கொண்டு தமிழ் மக்களின் தலைவர்கள் தாமே, தமிழ் மக்களின் விடுதலைக்கு வழிகாட்டிகளும் தாமே என்று மார்புதட்டிக்கொள்ள இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?

இதுதானா நீங்கள் நாள்தோறும் போதிக்கும் தமிழ் தேசியத்தின் இலட்சணம்? இதுதானா நமது விடுதலைக்கு வழி? இதையிட்டு எந்த ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவ ர்களும் கண்டனம் தெரிவிக் கவில்லை.அன்றே சிவாஜிலிங்கத்தை கண்டித்திருந்தால் இன்று அரியநேந்திரன் இப்படி பேசுவதற்குஅஞ்சியிருப்பாரன்றோ?

ஒருவரை திட்டி தீர்ப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிபெயரை பயன்படுத்துவது என்பது அவரை கேவலப்படுத்துவது மட்டுமன்றி தாழ்த்தப்பட்ட சாதி மக்களனைவரையும் கேவலப்படுத்து வதுமாகும். சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு அரிவரி பாடம் சொல்லித்தந்த பாரதியின் நினைவுதினம் கடந்த செப்ரம்பர் 11 திகதிதான் கொண்டாடப்பட்டது.

இந்த அரசியல்வாதிகளும் எங்கோ ஒரு மூலையில் நிகழ்ந்திருக்க கூடிய பாரதி நினைவு தினத்தில் இதனைகூட சொல்லி மாணவர் களுக்கு முன்னி லையில் உரையாற்றி யிருப்பர். அதுமட்டுமல்ல பாரதி நினைவு விழா க்கள், பாரதி சிலைகள், பாரதி கவிதைகள் என்று வருடா வருடம் பிரசன்ன மா வார்கள்.ஆனால் என்னதான் பிரயோ சனம்?

பாரதி சொல்லித் தந்த இந்த அரிவரி பாடத்தினைக் கூட தம்வாழ்வில் பின்பற்ற முடியாத தற்குறிகளாக இந்த அரசியல் வாதிகள் இருக்கி றார்களே?தமிழர் பாரம்பரியத்தை காப்ப தாக நாளும் சத்தியம் செய்யும் அரியே ந்திரன் அவர்களே உங்க ளுக்கு ஒரு செய்தி சொல்ல கடமைப்பட்டி ருக்கின்றேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தானையா பழந்தமிழ் பாரம்பரியம் என்பது. இதுதானா கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடிகளின் பண்பாடு? சிலவேளை நாமின்னும் அந்த காட்டு மிராண்டி காலத்திலிருந்து விடுபடவில லையோ?

– மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்-

Share.
Leave A Reply