செங்கல்பட்டு பகுதியில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலுள்ள சித்திரவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு 12 வயதில் ஒரு மகள் இருந்தார்.
விடுமுறை தினம் என்பதால், சிறுமி மதுராந்தகம் அருகேயுள்ள அவுரிமேடு பகுதியிலிருக்கும் அவரின் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி சிறுமி சாலையில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அங்கு சாலையோரம் இருந்த மின்கம்பம் சிறுமியின் தலைமேல் விழுந்தது.
கம்பம் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காகச் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிவடைந்து சிறுமியின் உடல் கடந்த 15-ம் தேதி சித்திரவாடி பகுதி சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை சிறுமியின் உறவினர்கள் 11-ம் நாள் காரியம் செய்வதற்காகச் சுடுகாட்டுக்கு வந்திருந்தனர். அப்போது சிறுமி புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சித்திரவாடி பகுதி சுடுகாட்டுக்கு காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவர்கள் விரைந்தனர். அங்கு சிறுமி புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது.
சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடம்
அதில், சிறுமியின் உடலில் தலையை யாரோ வெட்டி எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சிறுமியின் தலையை எடுத்துச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
புதைக்கப்பட்ட சிறுமியின் தலை காணாமல்போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.