சாணியடித் திருவிழாவைக் கொண்டாடுவதன் மூலம் இப்பகுதியில் ஆண்டுதோறும் தவறாமல் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. உணவு பொருள்கள், தானியத் தட்டுப்பாடு வராது என்கிறார்கள் கிராம மக்கள்.
ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசி அடித்துக் கொண்டாடும் விநோதத் திருவிழா ஒன்று சமீபத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகா, மலைக்கிராமமான கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் தீபாவளி முடிந்து 3 வது நாளில் சாணியடித் திருவிழா நடைபெறும்.
விழாவில் ஆண்கள் சட்டை அணியாமல் பங்கேற்று, கை நிறைய சாணியை அள்ளி ஒருவர் மீது ஒருவர் வீசி விழாவை வினோதமாகக் கொண்டாடினர்.
தமிழக- கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் இத்திருவிழா பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது.
அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரர் சுவாமி.
விழாவையொட்டி கும்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது மாட்டுக் கொட்டகையில் சேகரிக்கப்படும் சாணியை டிராக்டர் மூலமாகக் கொண்டு வந்து கோயிலில் பின்புறம் மலைபோல குவித்து வைத்தனர்.
விழாவில் பங்கேற்கும் ஆண்கள் பீரேஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்திற்குச் சென்று குளித்தனர். பின்னர் அதே குளத்தில் பீரேஸ்வரர் சுவாமியை குளிக்கச் செய்து, கழுதையில் அமரவைத்து பவனியாக அழைத்துக் கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர், மலைபோல உள்ள சாணிக் குவியலுக்குக் கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்ட பின் சாணியடித் திருவிழாவைத் தொடங்கினர்.
மாட்டுத் தொழுவங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட சாணிக் குவியல்.
அப்போது ஆண்கள், ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசி வயது வித்தியாசமின்றி உற்சாகமாகக் கொண்டாடினர். சில மணி நேரங்கள் நடைபெற்ற சாணியடித் திருவிழா முடிந்ததும் ஆண்கள் கோயில் குளத்தில் குளித்து, உடைகளை மாற்றிக் கொண்டு பீரேஸ்வர சுவாமியை வணங்கினர்.
ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசும் பக்தர்கள்.
விழாவைக் கொண்டாடுவதன் நோக்கம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், சாணியடித் திருவிழாவைக் கொண்டாடுவதன் மூலம் இப்பகுதியில் ஆண்டுதோறும் தவறாமல் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.
உணவு பொருள்கள், தானியத் தட்டுப்பாடு வராது. சாணியை உடலில் பூசுவதன் மூலம் எந்தவிதமான நோய் நொடியும் நம்மை அண்டாது.
பீடையும் ஒழியும் என்று நம்புவதால் கிராம மக்கள் அனைவரும் திரண்டு இந்தத் திருவிழாவைப் பல தலைமுறைகளைக் கடந்தும், பாரம்பர்யமாகக் கொண்டாடி வருகிறோம் என்றனர்.