முற்பகல் அம்பாந்தோட்டை, சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ, மஹாவலிகடஆர குளத்தில் நேற்றையதினம் (12) தோணி ஒன்றில் பயணித்த 8 பேர், குறித்த தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணமல் போன 3 பெண் பிள்ளைகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமது நீரில் மூழ்கி மரணிநத்த பாட்டனின் 3ஆம் மாத அன்னதான நிகழ்விற்கு வந்து தோணியில் சவாரி செய்ய முயன்ற வேளையிலேயே குறித்த மூன்று பேத்திகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த பாட்டனின் தான நிகழ்வு இன்று (13) இடம்பெறவிருந்த நிலையில், அதற்காக சூரியவெவ பிரதேசத்தில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு குறித்த சிறுமிகள் உள்ளிட்ட குழுவினர் குருணாகல், பிஹிம்புவ பிரதேசத்திலிருந்து வந்துள்ளனர்.

இவ்வாறு மரணமடைந்தவர்கள், குருணாகல், பிஹிம்புவ, மாலபே கொலனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகொடபொல கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வயதான தருஷி மிஹிரங்கி சேனாதீர, குருணாகல் கோனிகொட மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த விஷ்மி ஹன்சிகா, குருணாகல், இப்பாகமுவ மகா வித்தியாலயத்தில் உயிரியல் பாடப்பிரிவில் உயர் தரத்தில் கல்வி கற்கும் 18 வயதுடைய திலக்ஷி மதூஷிகா ஹேரத் ஆகிய மாணவிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சூரியவெவ மஹாவெலிகடஆர பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த பாட்டனின் தான நிகழ்வு இன்று (13) இடம்பெறும் நிலையில், குறித்த சிறுமிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்றையதினம் (12) அதிகாலை 2.00 மணியளவில் சூரியவெவ, மஹாவெலிகடஆர பிரதேசத்திற்கு வருகை தந்து, அங்கு தமது உறவினர்கள் சிலரது வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அன்றையதினம் காலை குறித்த நிகழ்விற்குத் அவசியமான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அப்போது, குறித்த சிறுவர்கள் குழுவினர், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவருடன், மஹாவெலிக்கடஆர குளத்திற்குச் சென்று, அங்கு மீன்பிடிக்கும் சிறிய தோணியொன்றை செலுத்தியுள்ளனர்.

முதலில், நான்கு பேர் மட்டும் குறித்த தோணியில் பயணித்துள்ள நிலையில், மேலும் 4 பேர் அங்கு வந்த நிலையில், அவர்கள் எட்டு பேரும் ஒரே தோணியில் குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

குறித்த பயணத்தில் 8 மாத குழந்தையையும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் செல்பி எடுத்துள்ளதோடு, கைகளால் துடுப்பு போட்டு படகை வேகமாக ஓட்டி குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

திடீரென குறித்த தோணிய கவிழ்ந்த நிலையில், தோணியை செலுத்திய நபர் 8 மாத குழந்தையை காப்பாற்றியதுடன், மேலும் மூவர் உயிருக்காக தத்தளித்துள்ள நிலையில், அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றுமொரு தோணியின் உதவியுடன் அவர்களை மீட்டுள்ளனர். இருப்பினும் படகில் பயணித்த மேலும் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

கிராமவாசிகள் பல மணிநேரம் தேடியும் சிறுமிகளை காண முடியாத நிலையில், சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் உயிர் காப்பு குழுவினர் அங்கு தேடுதலை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சூரியவெவ பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைய, கிரிந்த கடற்படையின் சுழியோடி குழுவொன்று அங்கு அனுப்பி வரவழைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்றையதினம் (12) பி.ப. 4.30 மணியளவில் உயிரிழந்த 10 வயதுச் சிறுமியின் சடலத்தை மாத்திரம் குளத்தின் அடியில் சிக்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்க முடிந்தது.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட மழை காரணமாக, தேடுதல் பணி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மோசமான காலநிலை காரணமாக ஏனையே இருவரையும் தேடும் பணி நிறுத்தப்பட்டு, இன்று (13) காலை மீண்டும் தேடுதல் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எஞ்சிய இரு மாணவிகளினதும் உடல்களை கடற்படை சுழியோடிகள், கிராம மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து மீட்டுள்ளனர்.

தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாத குழந்தை உள்ளிட்ட மீட்கப்பட்ட மற்றுமொருவர் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சூரியவெவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply