இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் ஆயுதப்போர் முனையில் வெற்றி முகத்தோடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து, ஆழ ஊடுருவி அழிப்பதற்கான விதைகளைப் போட்டவர் ரணில் விக்கிரமசிங்க.
‘கருணா அம்மான்’ என்கிற புலிகளின் கிழக்கு தளபதியை பிரித்தெடுத்து, இராணுவ பலத்தை சிதைத்ததுடன், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான தடைகளை வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளையும் செய்திருந்தார்.
புலிகளை இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் தோற்கடிப்பதற்காக ரணில் போட்ட பாதையில்தான், அவருக்குப் பின்னர் வந்த ராஜபக்ஷர்கள் பயணித்து 2009இல் வென்றார்கள்.
ரணில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம், எப்படிக் கையாள்வது என்பதில் கவனமாக இருப்பவர்.
அதற்காக தயவுதாட்சண்யங்கள் இன்றி, அரசியல் சதுரங்கத்தை ஆடுபவர். பொதுவாகவே, ஆட்சி அதிகாரங்களைக் குறிவைக்கும் அரசியல்வாதிகள், காரியம் நடக்க வேண்டுமென்றால் யார் கால்களை வேண்டுமானாலும் பிடிப்பார்கள். அதுபோல, கணநேரத்தில் குப்புறத் தள்ளி, முதுகில் குத்தவும் தயங்க மாட்டார்கள்.
ஆனால், ரணில் சற்று வேறுபாடானவர். அதிக நேரங்களில் தோளில் கைபோட்டு, நட்போடு அணுகியே, எதிரிகளை வீழ்த்துபவர். அதனால்தான் அவரை ‘பசுந்தோல் போர்த்திய புலி’ என்பார்கள்.
ராஜபக்ஷர்களுக்கு எதிராக நாடே வீதிக்கு இறங்கிப் போராடிபோது, ஒரு கட்டம் வரையில், போராட்டங்களை ரணில் ஆதரித்து வந்தார்.
ராஜபக்ஷர்களிடம் இருந்து அதிகாரத்தை அவர் பெற்ற புள்ளியில் இருந்து, போராட்டங்களை மட்டுமல்ல, அவருக்கு எதிரான அரசியல் சக்திகளையும் அழிப்பதற்கான வாய்ப்புகளை, ஒவ்வொன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.
ராஜபக்ஷர்களில் தனக்கு அச்சுறுத்தலான பசில் ராஜபக்ஷ தொடங்கி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈறாக, தன்னுடைய அரசியல் எதிரிகளை ரணில் குறிவைத்து பந்தாடத் தொடங்கியிருக்கிறார்.
அவரின் எதிரிகள் பட்டியலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ராஜபக்ஷர்களை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாமும் ஓரணியில் இணைந்தார்கள்.
அப்போது, ரணிலுக்குப் பதிலாக மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக முன்னிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், அந்த முடிவுக்கு ரணில் ஆரம்பத்தில் இணங்கவில்லை. ஆனால், அவரின் முடிவை மாற்றியது இரா. சம்பந்தனும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலமும்தான்.
“…நீங்கள் ஜனாதிபதி வேட்பாளரானால் ராஜபக்ஷர்கள் இலகுவாக வென்றுவிடுவார்கள். ஆகவே, ராஜபக்ஷர்களோடு இருந்த மைத்திரியை பொதுவேட்பாளராக்கினால் தென் இலங்கை கிராமங்களின் வாக்குகளைக் கவர்வது இலகுவானது.
அது வெற்றிக்கு முக்கியமானது. அப்படியான நிலையில், நீங்கள் போட்டியிடுவது சாத்தியமில்லாதது…” என்று ரணிலை விலக வைத்தவர் சம்பந்தன்.
அப்போது சந்திரிகா குமாரதுங்கவும் மங்கள சமரவீரவும், ரணிலை சமரசப்படுத்துவதற்காக சம்பந்தனையும் கூட்டமைப்பின் பலத்தையும் நம்பியிருந்தார்கள்.
ஆனால், கூட்டமைப்பு தனக்குள் பிளவுட்டு, பலமிழந்த புள்ளியில் இன்று நிற்கும்போது, இன்னும் இன்னும் பலவீனப்படுத்தும் வேலைகளைச் செய்வதில் ரணில் கவனமாக இருக்கிறார்.
ஏனெனில், ராஜபக்ஷர்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடிய மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராக, குறிப்பாக மக்கள் ஆணைக்கு எதிராக, ஜனநாயக படுகொலை செய்துகொண்டு, ரணில் ஆட்சிபீடம் ஏறினார் என்பது கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக இருந்தது.
அது, பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பின் போதும் தாக்கம் செலுத்தும் சூழ்நிலை உருவானது. அதனால்தான், கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் அவசரம் அவருக்கு ஏற்பட்டது.
டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்த போதிலும், அந்த முடிவுக்கு எதிராக குறைந்தது ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள்.
அதனை, ரணிலே கூட்டமைப்புடனான சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். இன்றைக்கு கூட்டமைப்புக்குள் பிளவு மேலும் அதிகரித்திருப்பதற்கு ரணில், தன்னுடைய கரங்களை நீட்டிக் கொண்டிருப்பது காரணமாகும்.
தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் மீதான அதிருப்தியை, தமிழ் மக்கள் கடந்த பொதுத் தேர்தலின் போது கணிசமாக வெளிப்படுத்தினார்கள்.
அதனால், கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு, வீட்டுச் சின்னத்தின் மீதான தங்கியிருந்தல் தொடர்பிலான அணுகுமுறை குறிப்பிட்டளவு மாறிவிட்டது.
கூட்டமைப்புக்கு மாற்றாக குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தங்கியிருப்பதற்கு மாற்றாக, பொதுக் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
அந்தப் புள்ளியை ரணில் விக்கிரமசிங்க பிடித்துக் கொண்டிருக்கிறார். அதன் மூலம், தமிழ்த் தேசிய அரசியலில் இன்றளவும் முதன்மைக் கட்சியாக இருக்கும் கூட்டமைப்பை பிளவுபடுத்தி, தனக்கு சார்பான கட்டமைப்பொன்றை பேண முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
சம்பந்தனும் எம்.ஏ சுமந்திரனும், ரணிலின் முடிவுகளை ஆதரித்த சமயங்களில் அவர், கூட்டமைப்பினை பிளவுபடுத்துவது சார்ந்து யோசித்ததில்லை.
ஆனால், அவர்கள் இருவரும் தனக்கு எதிராகக் திரும்பி விட்டார்கள் என்ற நிலையில், கூட்டமைப்பின் பிளவு அவருக்கு அவசியமாகிவிட்டது.
அண்மையில், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களின் விடுவிப்புக்கு யார் யாரெல்லாம் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்தால், ரணிலின் கரங்கள் எங்கெல்லாம் நீண்டிருக்கின்ற என்பது புரியும்.
நீதிமன்றங்களில் ஆதாரங்களை வைத்து, வழக்குகளை நடத்த முடியாத நிலையில் பலரை, அரசியல் கைதிகளாக இலங்கை அரசு சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றது.
அவர்கள் பல்லாண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் விடுதலை என்பது எதற்காகவும் பிற்போடப்படக்கூடாது. அவர்களின் விடுதலை யாரால் நிகழ்ந்தாலும் அதனை தமிழ் மக்கள் ஏற்பார்கள். அதில் மாற்றுக்கருத்தில்லை.
அதாவது, ‘யார் குற்றினாலும் அரசியானால் சரி’ என்ற நிலை! ஆனால், அந்தக் கட்டங்களை, தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைப்பதற்காகக் கொடுங்கரங்கள் கையாள முயன்றால், அதை அடையாளம் கண்டு கொள்வது தவிர்க்க முடியாதது.
நாட்டின் பொருளாதார பின்னடைவு என்பது கணிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில் தென்இலங்கை, மீட்பர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றது.
அதன் ஒருகட்டமாக, ரணில் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களையும் அழைகின்றார். அதில், அவர் பணமுதலைகளை அடையாளம் கண்டு அழைக்கின்றார்.
அவர்களை நாட்டின் பொருளாதார மீட்சிக்காக மட்டுமல்லாது, தமிழ்த் தேசிய அரசியலைக் கையாளுவதற்கான கருவிகளாகவும் கையாள நினைக்கின்றார்.
ரணில் எப்போதுமே தன்னை மேன்மையானவர் என்ற தோரணையில் முன்னிறுத்துபவர். அதாவது, மேட்டுக்குடி மனநிலையோடு இயங்குபவர்.
தன் முன்னால் யாரும் பெரியவர் இல்லை என்பது அவரது நிலைப்பாடு. அப்படிப்பட்ட ரணில், அண்மைய பிரித்தானிய பயணத்தின் போது, புலம்பெயர் வர்த்தகர்கள், பணமுதலைகள் சிலரை சந்தித்து, பௌவியமாக உரையாடிய விடயம் கவனிப்புக்குரியது. அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் தன்னுடைய அரசியல் பலத்தையும் அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது அவரது நோக்கம்.
ஏற்கெனவே, தமிழ்த் தேசிய கட்சிகள் புலம்பெயர் பணமுதலைகளின் ஏவலாளிகள் போல இயங்குவதான நிலை இருக்கின்றது.
கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசிய கட்சிகளைப் பிரித்தாண்டதில் புலம்பெயர் பணமுதலைகளின் பங்கு கணிசமானது. ஒரே கட்சிக்குள்ளேயே மற்ற வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காக, பெருமளவு பணத்தை இவ்வாறான பணமுதலைகள் செலவிட்டன.
அதற்காக, கட்சிகளும் அதன் தலைவர்களும்கூட எசமானின் காலடியைச் சுற்றிவரும் நன்றியுள்ள ஜீவன் மாதிரி இயங்கினார்கள்.
மக்களின் எதிர்பார்த்பை மீறி, இவ்வாறான பணமுதலைகளின் தேவைகளுக்காக குரைக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவு தமிழ்த் தேசிய பரப்பில், சிங்கள இனவாதக் கட்சிகளினதும் துணைக்குழுக்களினதும் வெற்றி நிகழ்ந்தது.
இப்போதும் ரணிலின் பெரும் ஆசீர்வாதத்தோடு புலம்பெயர் பணமுதலைகள் சில, தமிழ்த் தேசிய கட்சிகளை குறிப்பாக கூட்டமைப்பை சிதைக்கும் வேலைகளில் கடந்த நாள்களில் இயங்குவது தெளிவாகத் தெரிகின்றது.
தங்களால் கையாள முடியாத தலைவர்களை அரங்கில் இருந்து அகற்றி, கையாட்களைக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை நிரப்புவதுதான் இவர்களின் இலக்கு. இவ்வாறான செயற்பாட்டுக்கு, தூரநோக்கற்ற அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் துணைபோகின்றன.
எப்போதுமே, எதிரியின் கையை வைத்தே எதிரியின் கண்களை குத்த வைக்கும் ரணிலின் தந்திரம், இப்போதும் தமிழ்த் தேசிய அரசியலை குறிவைத்திருக்கின்றது.
அதனை அடையாளம் காண்பது என்பது, தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்புக்கு அவசியமானது. இல்லையென்றால், ஏவல் நாய்களால் மாத்திரம், தமிழ்த் தேசிய அரங்கு நிறையும்.
-புருஜோத்தமன் தங்கமயில்–