இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும்படி நவம்பர் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது இந்திய அரசு.

“நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்ற கொடூரமான குற்றத்திற்காக சட்டத்தின்படி முறையாகத் தண்டிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்ளிட்டோருக்கு மன்னிப்பு வழங்குவது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

எனவே தேச இறையாண்மை அதிகார வரம்புக்குள் அந்த விவகாரம் வரக்கூடியது,” என இந்திய அரசு மறுஆய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

பிபிசி பார்வையிட்ட அந்த மனுவின் நகலில், “இந்த வழக்கை வாதாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சட்டப்பூர்வ குறைபாட்டைக் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை புதிதாக பரிசீலித்து மாற்றியமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமது தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இந்திய கூறியுள்ளது.

மறுஆய்வு மனுவில் உள்ள அம்சங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஸ்ரீஹரன், முருகன், ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சுதேந்திர ராஜா ஆகிய 6 பேரை விடுதலை செய்து நவம்பர் 11ஆம் தேதி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிபதி பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு, 6 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்த தமிழக அரசின் உத்தரவையும், ஆறு குற்றவாளிகளின் நன்னடத்தையையும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.

நீண்ட காலமாக ஆறு பேரும் சிறையில் இருந்ததை உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கவனத்தில் கொண்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, மத்திய அரசு, “நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் உத்தரவு, இந்திய யூனியன் விசாரணைக்கு போதுமான வாய்ப்பை வழங்காமல் நிறைவேற்றப்பட்டது” என்று கூறியது.

ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு தரப்பு எதிர்மனுதாரராக தாம் சேர்க்கப்படவில்லை என்று இந்திய அரசு தெரிவித்தது. “மனுதாரர்களால் வழக்கில் தொடர்புடைய இந்திய அரசை எதிர்மனுதாரராகக் சேர்க்க எந்த விண்ணப்பமும் தாக்கல் செய்யவில்லை.

மனுதாரர்களின் தரப்பில் காணப்பட்ட இந்த நடைமுறைக் குறைபாடு காரணமாக வழக்கின் அடுத்தடுத்த விசாரணைகளில் இந்திய அரசால் பங்கேற்க முடியாமல் போனது,” என்று மறுஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மன்னிப்பு வழங்கப்பட்ட ஆறு பேரில் நான்கு பேர் இலங்கை பிரஜைகள் என்பது முக்கியமானது என்பதையும் இந்திய அரசு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசு முன்வைக்கும் வாதம்

உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 11ஆம் தேதி தீர்ப்பு, இயற்கை நீதி கோட்பாடுகளை மீறும் வகையிலும் சர்வதேச தாக்கத்தைக் கொண்ட விவகாரத்தில் வெளிப்படையாகவே சில விஷயங்களை மீறும் வகையிலும் இருப்பதாக இந்திய அரசு கூறியுள்ளது.

மேலும், திறந்தவெளி நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் இந்த விஷயத்தில் நியாயமான மற்றும் சரியான முடிவை நீதிமன்றம் எடுப்பதற்கு உதவவும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற தகுதியற்றவர்களாவது ஏன் என்பதை முன்வைக்க இந்திய அரசுக்கு ஒரு வாய்ப்பை தந்திருக்க வேண்டும். , ”என்று இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கில் கைதிகளில் ஒருவரான நளினி மூன்று தசாப்தங்களாக சிறையில் இருந்ததாகவும், அவரது நடத்தை திருப்திகரமாக இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முதுகலை டிப்ளமோ பெற்றுள்ளார்.

மேலும் ரவிச்சந்திரனின் நடத்தை திருப்திகரமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் சிறையில் இருந்தபோது கலைத்துறையில் முதுகலை டிப்ளமோ உட்பட பல்வேறு படிப்புகளை முடித்துள்ளார். இந்த தகவல்களை தமது நவம்பர் 11 ஆம் தேதி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர்

என்ன பின்னணி?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளான ஏழு பேரில் பேரறிவாளனின் கருணை மனு மீது மாநில ஆளுநர் முடவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அவரை விடுதலை செய்யும்படி இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

அதே முன்மாதியை தங்களுக்கும் கடைப்பிடிக்க வலியுறுத்தி அதே வழக்கில் சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் மற்றும் அந்த வழக்கில் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், எஸ் ராஜா, முருகன் ஸ்ரீஹரன் ஆகியோரை விடுதலை செய்யும்படி இந்திய உச்ச நீதிமன்றம் நவம்பர் 11ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் கடந்த மே 18ஆம் தேதியன்று பேரறிவாளனை விடுவிக்க அரசியலமைப்பின் 142ஆம் பிரிவை உச்ச நீதிமன்றம் தமது அசாதாரண அதிகாரங்களை பயன்படுத்தியது.

தமிழக அரசு பரிந்துரை

முன்னதாக, 2018ஆம் ஆண்டு ஏழு பேரின் ஆயுள் தண்டனையை நீக்குவதற்கான முடிவு ஆளுநர் வசம் இருப்பதால் அது தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரின் கருணை மனுக்களை பரிசீலித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதிகளின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைக்க மாநில அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து நளினியும் ரவிச்சந்திரனும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நாடி தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடும்படி கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

கைவிரித்த உயர் நீதிமன்றம்

“அரசியல் சாசனத்தின் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கும் சிறப்பு அதிகாரங்கள் தங்களுக்குஇல்லை என்றும், மே 2022இல் பேரறிவாளனை விடுவித்தது போல் நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது” என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.

அதே சமயம், பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்து விடுதலை பெற கோருவதாக இருந்தால் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கிடையே, பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நிலையில், தங்களின் கருணை மனுக்கள் மீதான கோப்பு குறித்து முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவதாக அந்த கடிதத்தில் ரவிச்சந்திரன் கூறியிருந்தார்.

இதையடுத்து, 2018 செப்டம்பரில் தமிழக அரசு செய்த பரிந்துரையின் அடிப்படையில் பேரறிவாளனை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய எப்படி உச்ச நீதிமன்றம் தீர்மானித்ததோ அதே அடிப்படையில் அதே வழக்கில் சிறையில் இருந்து ஆளுநரால் முடிவெடுக்கப்படாமல் இருந்த 6 கைதிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

ராஜீவ் கொலை வழக்கு

முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி, 1991 மே 21ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

புலனாய்வில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கண்டறிந்தது.

மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனு சம்பவத்திலேயே இறந்துவிட்டார். கொலைச் சதியின் பின்னணியில் இயங்கியதாக சிபிஐ கண்டறிந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் பெங்களூருவில் தங்கியிருந்த வீட்டை போலீஸ் சுற்றி வளைத்த நிலையில் அவர்கள் சயனைடு அருந்தி இறந்துவிட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தலை மறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் தவிர பல்வேறு காரணங்களுக்காக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு இதற்கென அமைக்கப்பட்ட தடா சிறப்பு நீதிமன்றம் 1998 ஜனவரி 28-ம் தேதி மரண தண்டனை விதித்தது.

தண்டனை பெற்றவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையிலான அமர்வு நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மட்டுமே மரண தண்டனையை உறுதி செய்தது.

ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒருவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார். மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது.

அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலைசெய்யப்பட்டனர்.மீதமிருந்த 7 பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் தண்டனை முதலில் உச்ச நீதிமன்றத்தால் 2014ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களில் பேரறிவாளன் கடந்த மே மாதம் விடுதலை அடைந்தார். மற்ற 6 பேரும் கடந்த 11-ஆம் தேதி தீர்ப்புக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்

 

Share.
Leave A Reply