2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல் முறை.

நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை போட்டி 28 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும். அதன் இறுதிப்பந்தயம் டிசம்பர் 18 அன்று நடைபெறும். இந்த உலகக் கோப்பை தொடர்பான முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்:
2022 FIFA உலகக் கோப்பையில் எத்தனை நாடுகள் பங்கேற்கும்?

இந்த 22-ஆவது ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க கடந்த 4 ஆண்டுகளாக 210 அணிகள் முயற்சி செய்துவருகின்றன. ஆனால் போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே உலகக் கோப்பையில் பங்கேற்கும்.

ஆஸ்திரேலியா, கோஸ்டா ரிகா, வேல்ஸ் ஆகிய அணிகள் கடைசியாக இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

2022 FIFA உலக கோப்பைக்கு எந்தெந்த நாடுகள் தகுதி பெற்றுள்ளன?

அமெரிக்கா
மெக்சிகோ
கனடா
கேமரூன்
மொராக்கோ
துனீஷியா
செனகல்
கானா
உருகுவே
ஈக்வடோர்
அர்ஜென்டீனா
பிரேசில்
போலந்து
போர்ச்சுகல்
சுவிட்சர்லாந்து
நெதர்லாந்து
இங்கிலாந்து
செர்பியா
ஸ்பெயின்
குரோஷியா
பெல்ஜியம்
பிரான்ஸ்
டென்மார்க்
ஜெர்மனி
ஜப்பான்
செளதி அரேபியா
தென் கொரியா
இரான்
கத்தார்
வேல்ஸ்
கோஸ்டா ரிகா
ஆஸ்திரேலியா

FIFA உலகக் கோப்பை 2022


FIFA உலக கோப்பை 2022 அட்டவணையில் உள்ள பிரிவுகள் என்னென்ன?

32 அணிகள், நான்கு அணிகள் கொண்ட 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குழு A: கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து
குழு B: இங்கிலாந்து, இரான், அமெரிக்கா, வேல்ஸ்
குழு C: அர்ஜென்டீனா, செளதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
குழு D: பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனீஷியா
குழு E: ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான்
குழு F: பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோயேஷியா
குழு G: பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
குழு H: போர்ச்சுகல், கானா, உருகுவே, கொரிய குடியரசு

12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.

FIFA உலக கோப்பை 2022 எங்கு நடைபெறும்?

கத்தார் நாட்டில் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 15 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்ப்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் அந்த நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுமார் 1,75,000 ஹோட்டல் அறைகள் உள்ளன. 2019 ஆம் ஆண்டில், கத்தார் ஒரு கப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன் மூலம் மிதக்கும் ஹோட்டல்கள் தயார் செய்யப்படுகின்றன.

பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து கண்ணீரோடு வெளியேறிய லயோனல் மெஸ்ஸி
சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பது ஏன்?

இந்தப் போட்டிக்காக கத்தாரில் மொத்தம் 8 மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 8-ல் 7 மைதானங்கள் முன்பே கட்டப்பட்டுவிட்டன. மீதமுள்ள ஒன்றும் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒருமணி நேர பயணத்தில், அதிகபட்சமாக 43 மைல்கள் தொலைவில் உள்ளன.

ஃபிஃபா உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் எவை?

லுசைல் ஸ்டேடியம் (கொள்ளளவு- 80,000)
அல் பேத் ஸ்டேடியம் (கொள்ளளவு- 60,000)
ஸ்டேடியம் 974 (கொள்ளளவு- 40,000)
கலீஃபா சர்வதேச அரங்கம் (கொள்ளளவு- 45,416)
எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
அல் துமாமா ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
அல் ஜனுப் ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
அகமது பின் அலி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)

கலீஃபா மைதானம்

FIFA உலக கோப்பை 2022 இன் இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி லுசைல் மைதானத்தில் நடைபெறும்.

FIFA உலக கோப்பை போட்டி ஏன் குளிர்காலத்தில் நடத்தப்படுகிறது?

FIFA உலக கோப்பை போட்டிகள் வழக்கமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும். ஆனால் கத்தாரில் ஆண்டின் இந்த மாதங்களில் சராசரி வெப்பநிலை சுமார் 41 °C மற்றும் 50 °C ஐ எட்டும். இத்தகைய வெப்பம் ஆபத்தானது.

மைதானத்துக்குள் குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ளது

அத்தகைய சூழ்நிலையில் 90 நிமிடங்கள் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏலத்தின் போது, ​​கத்தார் மேம்பட்ட ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக உறுதியளித்தது. இது மைதானங்கள், பயிற்சி மைதானங்கள் போன்ற இடங்களை 23 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும் என்று கூறப்பட்டது.

இருப்பினும், 2015 இல், போட்டியை குளிர்காலத்தில் நடத்த ஃபிஃபா முடிவு செய்தது. உலகக் கோப்பை போட்டி நவம்பர் 21-ம் தேதி தொடங்கி இறுதிப்போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

அதாவது, பல நாடுகளின் கிளப் கால்பந்து சீசனின் நடுப்பகுதியில் இது வரும். இதன் காரணமாக அவர்கள் குறுக்கீடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

FIFA உலக கோப்பை – கத்தார் தொடர்பாக ஏற்பட்டசர்ச்சை என்ன?

இதுவரையிலான மிகவும் சர்ச்சைக்குரிய உலகக் கோப்பை இது என்று கூறப்படுகிறது. கத்தார் எப்படி இந்த உலக கோப்பை ஏலத்தை வென்றது, ஸ்டேடியம் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்,

உலகக் கோப்பைக்கு இது சரியான இடமா போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. திட்டத்துடன் தொடர்புடைய 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது.

கத்தார் தொழிலாளர்களை வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் 2016 ஆம் ஆண்டு குற்றம் சாட்டியது. பல தொழிலாளர்கள் மோசமான நிலைமைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,

அவர்களின் வீடுகள் வாழத் தகுதியற்றவை, அவர்களிடமிருந்து பெருமளவு ஆட்சேர்ப்புக் கட்டணம் பெறப்பட்டது, தொழிலாளர்கள் நாட்டைவிட்டுச்செல்ல அனுமதிக்கப்படவிலை, அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பன போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம்

2017 ஆம் ஆண்டு முதல் அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெப்பத்தில் வேலை செய்வதிலிருந்து காப்பாற்றவும், வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் முகாம்களில் வசதிகளை மேம்படுத்தவும் ஆரம்பித்தது.

ஆயினும் வெளிநாட்டு ஊழியர்கள் இன்னும் சட்டவிரோத சம்பள வெட்டுக்களை எதிர்கொள்வதாகவும், அத்துடன் ஒரு நாளைக்கு பல மணிநேரம் வேலை செய்த போதிலும் பல மாத ஊதியம் அளிக்கப்படாமல் வேலை செய்ய நிர்பந்தப்படுத்தப்படுவதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2021 ஆம் ஆண்டின் அறிக்கை கூறியது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து சென்ற 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கத்தாரில் இறந்ததாக 2021 பிப்ரவரியில் கார்டியன் செய்தித்தாள் கூறியது.

கத்தார் உலகக் கோப்பைக்கான ஏலத்தில் வென்றது முதல் இறந்தவர்களில் பலர் உலகக் கோப்பை உள்கட்டமைப்புத் திட்டங்களில் பணிபுரிந்தவர்கள் என்று தொழிலாளர் உரிமைக் குழுவான ஃபேர்ஸ்கொயர் கூறுகிறது.

பல ஆண்டுகளாக கத்தாரில் வாழ்ந்து, வேலை செய்து பிறகு காலமான ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களும் இதில் உள்ளதால், இந்த புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன என்று கத்தார் அரசு கூறுகிறது.

இவர்களில் பலர் கட்டுமானத் துறையில் வேலை செய்யாதவர்கள் என்று அரசு தெரிவித்தது. 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை மைதானத்தின் கட்டுமானப் பணியில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது. இதில் 34 இறப்புகள் வேலை காரணமானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை மைதான கட்டுமானத்துடன் தொடர்புடைய 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கத்தார் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

FIFA உலக கோப்பை 2022 ஐ நடத்தும் வாய்ப்பு கத்தாருக்கு கிடைத்தது எப்படி?

உலக கோப்பை 2022 ஐ கத்தார் நடத்தும் என்று 2010-இல் ஃபிஃபா அறிவித்ததிலிருந்து சர்ச்சை துவங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை ஓரங்கட்டி கத்தார் இதை எப்படி சாதித்தது என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இதற்காக ஃபிஃபா அதிகாரிகளுக்கு கத்தார் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு சுயாதீன விசாரணையை ஃபிஃபா நடத்தியது. குற்றச்சாட்டை நிரூபிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் விசாரணையில் கிடைக்கவில்லை.

 

பிரதிநிதிகளின் வாக்குகளை விலைகொடுத்து வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுத்துள்ளது. ஆனால் பிரெஞ்சு அதிகாரிகளால் தொடங்கப்பட்ட விசாரணை இன்னும் தொடர்கிறது. மேலும் மூன்று FIFA அதிகாரிகள் பணம் பெற்றதாக 2020 இல் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

FIFA உலகக் கோப்பை 2018 -இல் வெற்றி பெற்ற அணி எது?

2018 ஃபிஃபா உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றது. ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் பரபரப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. பிரான்ஸ் அணி உலக கோப்பையை வென்றது அது இரண்டாவது முறையாகும்.

FIFA தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த அணிகள் எவை?

பிரேசில்
பெல்ஜியம்
பிரான்ஸ்
அர்ஜென்டீனா
இங்கிலாந்து
இத்தாலி
ஸ்பெயின்
போர்ச்சுகல்
மெக்ஸிகோ
நெதர்லாந்து

Share.
Leave A Reply