டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒருவரின் கொலை தொடர்பாக அவரது மனைவி மற்றும் வளர்ப்பு மகனைக் கைது செய்துள்ளது.

அந்த பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் குளிர்சாதன பெட்டியில் வைத்துப் பின்னர் வெவ்வேறு இடங்களில் வீசி அப்புறப்படுத்தியதாக காவல் துறை கூறுகிறது.

இந்த படுகொலை டெல்லி மெஹ்ரௌலியில் நடந்த ஷ்ரத்தா படுகொலையை ஒத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப்பும் ஷ்ரத்தாவைக் கொன்று, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, பின்னர் வெவ்வேறு இடங்களில் வீசினார்.

இந்த சம்பவம் குறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறை, இது குறித்து விரிவான தகவல்களைத் தெரிவித்துள்ளது.

டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையாளர் அமித் கோயல், “ஜூன் 5-ம் தேதி, ராம்லீலா மைதானத்தில் ஒருவரின் உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதன் பிறகு, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, இரண்டு கால்கள், இரண்டு தொடைகள், பின்னர் ஒரு கையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் பாகங்கள் மூன்று முதல் நான்கு நாட்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. முதலில், இறந்தவரை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு நிறைய முயற்சி எடுக்கப்பட்டது.

இறந்தவரை அடையாளம் காண முடியவில்லை. பல குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தன. கடைசியாக இந்த விஷயத்தில் எங்கள் குழுவுக்கு வெற்றி கிட்டியுள்ளது.” என்றார்.

” பல வீடியோ காட்சிகளின் ஆதாரத்தில் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தவிர, வீடு வீடாகச் சென்று விசாரித்தனர்.

முதலில் இந்த முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை. ஆனால் கடைசியில் இறந்தவர் அஞ்சன் தாஸ் ஆக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

அஞ்சன்தாஸ் வீட்டிற்கு சென்று விசாரித்ததில், ஐந்து மாதங்களாக அஞ்சன் தாஸைக் காணவில்லை என்பது தெரிய வந்தது.

இருந்தும், காணாமல் போன புகாரை, காவல் நிலையத்தில் பதிவு செய்யவில்லை. இதனால், குடும்பத்தினர் இந்தப் புகாரை அளிக்காதது, இந்த வழக்கில் சந்தேகத்தை எழுப்பியது.

இது குறித்து டிசிபி கூறுகையில், “இதையடுத்து, இந்த வழக்கில் அஞ்சன் தாஸின் மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஏனெனில், சிசிடிவி காட்சிகளில் தாய், மகன் இருவரும் இருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ​​அவர்கள் வாக்குமூலம் அளித்துக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்,” என்கிறார்.

டெல்லி காவல் துறைக்கு கிடைத்த ஆதாரம்

கொலையின் போது பயன்படுத்திய உடைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டெல்லி காவல் துறை அறிவித்தது.

அமித் கோயல், “சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட ஆடைகள் எங்களுக்குக் கிடைத்தன. அத்துடன், இறந்தவரின் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

உயிரிழந்தவர் 2011ஆம் ஆண்டு முதல் இந்தப் பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து கோயல் கூறுகையில், “இறந்தவருடன் இந்தப் பெண்மணிக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.


இதற்கு முன், கல்லு என்ற இளைஞரை இந்த பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தனர். 2016-ல் கல்லு இறந்துவிட்டார். கைது செய்யப்பட்ட இளைஞரான தீபக், கல்லு என்பவரின் மகன். தனது திருமணத்திற்குப் பின் தீபக் தனியாக வசித்து வந்தார்,” என்று தெரிவித்தார்.

போலீஸ் தரப்பில், “அஞ்சன் தாஸுக்கு பிகாரில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இவர் பூனமின் நகைகளை விற்று, வீட்டுக்குப் பணம் அனுப்பியுள்ளார். இன்னும் அதிக வருமானம் இல்லாததால், செலவுக்கு பூனமின் கைகளை எதிர்பார்த்திருந்தார்.

இதுவே தகராறுக்கு முக்கிய காரணம். மேலும் தீபக் மீதும் அவரது மனைவி மீதும் இந்த நபர் தவறான கண்ணோட்டம் வைத்திருப்பதாகப் பூனம் உணர்ந்தார்.

இதனால்தான் தீபக்கும், பூனமும் கொலை செய்வது பற்றி விவாதித்துள்ளனர். மே 30 அன்று பூனம் வீட்டில், அஞ்சன் தாஸுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறப்படுகிறது.

Share.
Leave A Reply