தமிழக அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் கலை திருவிழாவில் புதுக்கோட்டை அருகே வயலோகம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பாட்டு, நடனம் என அசத்தி வருகிறார்.

தமிழக அரசு பள்ளிகளில் ‘கலை திருவிழா’ நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஓவியம், கேலிச்சித்திரம், நவீன ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், புகைப்படம் எடுத்தல், நாட்டுப்புறப்பாட்டு, மெல்லிசை, செவ்வியல் இசை என பல்வேறு கலைத்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் வட்டார அளவில் தேர்வாகும் தனிநபர் மற்றும் குழு மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும்.

பின்னர், அதிலிருந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் தனிநபர் மற்றும் குழுக்கள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி மாதம் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

மேலும், தமிழக அளவில் தரவரிசையில் முதல் 20 இடங்களை பிடிப்பவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அனுப்பிவைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி – சித்ரா. இந்த தம்பதியுடைய மகள் ஆர்த்தி.

அரசு அள்ளியில் பயின்று வரும் இவர் தற்போது கலை திருவிழாவில் பங்கேற்று வருகிறார். பாட்டு மற்றும் நடனம் என அனைத்திலும் மாணவி ஆர்வத்துடன் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

இவருடைய பாடல் பாடும் திறன் மற்றும் நடன திறமைகளை ஆசிரியை ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர அந்த வீடியோ சமூக வலை தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

‘எவரும் சொல்லாமலே’ பாடலை ஆர்த்தி பாடும் வீடியோவை தமிழக பள்ளி கல்வித்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

தனக்கு இதனை திறமைகள் இருப்பதை தற்போது தான் அறிந்துகொண்டதாக கூறும் ஆர்த்தி தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் கலை திருவிழாவில் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றிபெற்றுள்ள ஆர்த்தி அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளார்.

இதுபற்றி அவர் பேசுகையில், தன்னுடைய திறமைகளை மேலும் வளர்க்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த இப்படியான வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

Share.
Leave A Reply