(லியோ நிரோஷ தர்ஷன்)
டிசம்பர் 16: இன்று இந்தியா – பங்களாதேஷ் நாடுகளின் ‘வெற்றித்தினம்’
‘வங்கதேசம்’ என அன்று அழைக்கப்பட்ட இன்றைய பங்களாதேசத்தின் தற்போதைய வளர்ச்சியினை பற்றி பேசுபவர்கள் அந்த நாடு கடந்து வந்த காரிருள் நிறைந்த காலகட்டம் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், பங்களாதேசத்துக்கு ‘கிழக்கு பாகிஸ்தான்’ என்ற பெயரும் இருந்தது.
உலகில் இடம்பெற்ற பல போர்கள் பெரும்பாலும் நிலப்பரப்புகளின் அடையாளங்களை மாற்றியுள்ளன. அவ்வாறானதொரு போர் தான் இந்தியா – பாகிஸ்தான் போர்.
1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்தது.
‘பங்களாதேசம்’ என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்த இந்தப் போரில், பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான 1971 டிசம்பர் 16ஆம் திகதி ஒவ்வோர் ஆண்டும் வெற்றித்தினமாக கொண்டாடப்படுகிறது.
கிழக்கு பாகிஸ்தானாக அதுவரை காலமும் இருந்த நிலப்பகுதி, இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பின்னர் ‘வங்கதேசம்’ என்ற தனி நாடாக உருவானது.
இன்றைய பாகிஸ்தான் ‘மேற்கு பாகிஸ்தான்’ என்றும், இன்று தனி நாடாக உள்ள பங்களாதேசம் ‘கிழக்கு பாகிஸ்தான்’ என்றும் 1971ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் அழைக்கப்பட்டன.
பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து, தனி நாடாக சுதந்திரம் பெற வேண்டும் என்ற போராட்டம் கிழக்கு பாகிஸ்தானில் தீவிரமடைந்தது.
சுயாட்சிக்கான அங்கீகாரத்துக்காக கிழக்கு பாகிஸ்தான் மக்களின் போராட்டம் பல வழிகளில் விஸ்வரூபமெடுத்த நிலையில், 1971ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி, அதிகாரபூர்வமாக பாகிஸ்தானிடமிருந்து பிரிய வேண்டுமென்ற கோரிக்கையை கிழக்கு பாகிஸ்தான் அறிவித்தது.
வங்காள மொழி பேசிய மக்கள் பாகிஸ்தானில் மோசமாக நடத்தப்பட்டதோடு, தேர்தல் முடிவுகளிலும் குளறுபடிகள் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலைப் போரை தொடங்கினார்கள்.
அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தி, கிழக்கு பாகிஸ்தான் மக்களுடைய விடுதலைப் போருக்கு முழுமையான ஆதரவை வெளிப்படையாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில், அப்போதைய இந்திய இராணுவத் தளபதியான சாம் மேனக்ஷாவிடம் பாகிஸ்தானுடனான போருக்கு தயாராக இருக்குமாறு இந்திரா காந்தி ஆலோசனை வழங்கியிருந்தார்.
1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதியன்று ‘ஒபரேஷன் கெங்கிஸ் கான்’ என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் 11 விமானப் படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தின.
இந்திய நாட்டு மக்களிடம் வானொலி வாயிலாக பேசிய பிரதமர் இந்திரா காந்தி, இந்தத் தாக்குதல் போருக்கான ஓர் அறிவிப்பு என்றும் அதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.
மேலும், முழு வீச்சில் போரை தொடங்குமாறும் இந்திய படைகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் போர் தொடங்கியது.
இராணுவம், கடற்படை, விமானப்படை அனைத்தையும் களமிறக்கி, தரைவழித் தாக்குதல், வான்வழித் தாக்குதல், கடல்வழித் தாக்குதல் என்று கடும் மும்முனைத் தாக்குதல்களை பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்டது.
இந்த போரில் இந்தியாவின் மேற்கு பகுதி ஊடாக பாகிஸ்தான் படைகள் நுழைந்துவிடாமல் தடுப்பதும் கிழக்கே டாக்காவை கைப்பற்றுவதும் இந்திய படைகளின் குறிக்கோளாக இருந்தது.
பாகிஸ்தானின் கடற்படை இந்திய கடற்படையை ஆழ்கடல் போரில் எதிர்க்கும் அளவுக்கோ, தற்காப்புப் போர் புரியும் அளவுக்கோ கூட வலிமையான நிலையில் அப்போது இருந்திருக்கவில்லை என்பது போர் முடிவின்போது பகிரங்கமான விடயமாகும்.
எவ்வாறாயினும், கராச்சி துறைமுகத்தை டிசெம்பர் 4, 5 மற்றும் 8, 9 ஆகிய திகதிகளில் இந்திய கடற்படை தாக்கியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிசம்பர் 9ஆம் திகதியன்று பாகிஸ்தானுடைய ஹெங்கோர் நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் இந்தியாவுக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். குக்ரி என்ற போர்க்கப்பல் மூழ்கியது.
டிசம்பர் 3ஆம் திகதியன்று பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்த பிறகு, பாகிஸ்தான் விமானப்படை தற்காப்புத் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியது.
மேற்கு பாகிஸ்தானில் டிசம்பர் 8ஆம் திகதியன்று இந்தியா வெற்றிகரமான வான்வழித் தாக்குதலை விமானப்படை தளமொன்றை இலக்கு வைத்து நடத்தியது.
இந்த வான்வழித் தாக்குதல்களில் பாகிஸ்தான் விமானப்படை சுமார் 60 சதவீத விமானங்களை இழக்க நேர்ந்தது.
தரைவழித் தாக்குதலில் பாகிஸ்தான் படைகளில் 8,000 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 25,000 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டது.
இந்தியப் படைகளில் 3,000 பேர் உயிரிழந்து, 12,000 பேர் காயமடைந்தனர். ஆயுதம் தாங்கிய வாகனங்களின் இழப்பும் பாகிஸ்தான் தரப்பிலேயே அதிகமாக இருந்தது.
13 நாட்களாக தொடர்ந்த இந்தப் போர், டிசம்பர் 15ஆம் திகதியன்று இறுதிக்கட்டத்தை எட்டியது.
அடுத்த நாளான டிசம்பர் 16ஆம் திகதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, 93,000 படைவீரர்களோடு இந்திய இராணுவத்திடம் சரணடைந்தார்.
இந்தப் போருக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தான் ‘வங்கதேச’மாகவும், மேற்கு பாகிஸ்தான் இன்றைய பாகிஸ்தானாகவும் பிரிந்தன.
இந்தப் போரில் பிரிந்த பல குடும்பங்கள் இன்று வரை, இணைவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தில், வடக்குப் பகுதியில் வெகு தூரத்தில் டுர்டுக், டியாக்சி, சாலுன்கா, தாங் ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. போரின் பின்னர், இந்திய ஆளுகையின் கீழ் இவை வந்தன.
லடாக்கில் பௌத்த மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், இந்த நான்கு கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டும் பால்ட்டி மொழி பேசும் முஸ்லிம்களாக இருந்ததுடன், 1971ஆம் ஆண்டு வரையில், இந்த நான்கு கிராமங்களுமே பாகிஸ்தானின் பகுதிகளாக இருந்தன.
இந்தியா – பாகிஸ்தான் போர் ஏற்பட்டதையடுத்து அவற்றின் அடையாளங்கள் மாறின.
1971 டிசம்பர் 16ஆம் திகதி பாகிஸ்தான் படைகள் இந்திய இராணுவத்திடம் சரணடைந்த நாளில், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகியது.
அன்றிலிருந்து ‘வங்கதேசம்’ சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டு, ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான புது அரசாங்கத்தை இந்தியா அங்கீகரித்தது.
அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் வங்கதேசம், டிசம்பர் 16ஆம் திகதியை வெற்றித்தினமாக கொண்டாடுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த வீரர்களை போற்றும் வகையில் அந்த நாள், ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் ‘வெற்றித்தினமாக’ அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(லியோ நிரோஷ தர்ஷன்)