“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் அரசுக் கட்சிக்கும், ரெலோவுக்கும் இடையில் உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது”
“சிங்களப் பேரினவாதச் சிந்தனைக் கட்சிகள் மற்றும் அவற்றுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ள கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழரசுக்கட்சி தனித்து பயணிக்க முயல்வது தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆபத்தை விளைவிக்கும்”
வவுனியாவில் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்குப் பின்னர், அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெடி ஒன்றைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவது குறித்து, தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறியிருக்கிறார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சுமந்திரனின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால், தமிழ்த் தேசிய அரசியலைப் பலமான சக்தியாக முன்னெடுப்பதற்காகவே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தேர்தல் உத்திகளைக் கடந்த ஒரு செயற்திட்டம் இது. இவ்வாறான ஒரு கூட்டை, அரசியல் இலாபங்களுக்காக – தேர்தலுக்காக உடைக்கலாமா என்பது ஒரு வாதம்.
இன்னொரு பக்கத்தில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால், அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும், பங்காளிகள் தனித்தனியான பாதையில் செல்வதற்கு அடித்தளம் அமைத்து விடும் என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.
ஏற்கனவே கூட்டமைப்புக்குள் ஒருமித்த செயற்திட்டம் இல்லாத நிலையில், இது பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான விரிசலை அதிகப்படுத்தி விடும் என்ற கருத்தும் உள்ளது.
ஆனால், உள்ளூராட்சித் தேர்தலை கூட்டமைப்பாக எதிர்கொள்வதை விட, தனித்தனியாக எதிர்கொண்டு விட்டு கூட்டமைப்பாக செயற்படுவது – அதாவது தேர்தலுக்குப் பிந்திய கூட்டு- அதிகம் பயனுடையதாக இருக்கும் என்ற கருத்து, இப்போது தான் முதல்முறையாக வெளியானதொன்று அல்ல.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், தமிழ் அரசுக் கட்சி இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தது. அதற்கு முக்கியமான காரணம், புதிய உள்ளூராட்சித் தேர்தல் முறையும், அது கற்றுக் கொடுத்த பாடமும் தான்.
கடந்தமுறை உள்ளூராட்சித் தேர்தல் புதிய முறைப்படி அதாவது வட்டார மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் இடம்பெற்றது.
60 சதவீத உறுப்பினர்கள் வட்டார அடிப்படையிலும், 40 சதவீத உறுப்பினர்கள், விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுகின்றனர். அவர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம், கட்டாயமாக 25 சதவீதம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
இந்த முறைகளால், கூட்டணிகளை அமைத்துப் போட்டியிட்ட பெரிய கட்சிகள் அதிகம் அடி வாங்கும் நிலை ஏற்பட்டது. தெற்கில் பெரும் வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனவுக்கே இது பெரும் சவாலாக இருந்தது.
கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் பெரும்பாலான சபைகளில் கூடுதல் வாக்குகளைப் பெற்றது, வட்டார ரீதியாகவும் அதிகளவு இடங்களில் வெற்றிபெற்றது.
ஆனால், விகிதாசார முறையில் அதற்கு உரிய ஆசனங்கள் கிடைக்கவில்லை. அதனால் இரண்டு சபைகள் தவிர ஏனையவற்றில் தொங்கு நிலையே காணப்பட்டது.
அதேவேளை வட்டார ரீதியாக ஒரு இடத்தைக் கூட பெறாத கட்சிகள் விகிதாசார ரீதியாக அதிக இடங்களை கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. இது கூட்டமைப்புக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியது.
வட்டாரங்களுக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்வது, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் உரிய பங்கைப் பெற முடியாமல் போனது போன்றவற்றினால் பெரிய கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் சிறிய கட்சிகளுக்கு இது ஆதாயமான முறை.
வட்டாரங்களில் வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களைக் கொண்டிருக்கா விட்டாலும், விகிதாசார முறையில் ஓரிரண்டு ஆசனங்களை அவற்றினால் பெற முடிந்தது. அந்தக் கட்சிகள் சில இடங்களில் பெரிய கட்சிகள் அல்லது கூட்டணிகளின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கின.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் அரசுக் கட்சிக்கும், ரெலோவுக்கும் இடையில் உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு ஒரு பெரும் பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது.
வேட்பாளர்களை நிறுத்துவது தொடக்கம், வெற்றி பெற்ற சபைகளின் தலைவர்களை நியமிப்பது, வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றுவது என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பிரச்சினை நீண்டு வருகிறது. இவ்வாறான நிலையில் தமிழ் அரசுக் கட்சி பெரிய பங்காளியாக இருந்தாலும், ரெலோவின் இழுப்புக்கு ஆட வேண்டிய நிர்ப்பந்தம் பலமுறை காணப்பட்டுள்ளது.
இதனால் தனித்தனியாகப் போட்டியிட்டு, தேவைப்பட்டால் கூட்டணியின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனை கடந்த முறையே ஏற்பட்டு விட்டது.
தேர்தலுக்கு முந்திய கூட்டாக இல்லாமல் தேர்தலுக்குப் பிந்திய கூட்டாக இருக்கும் போது, சந்தர்ப்ப சூழலுக்கேற்ப உடன்பாடுகளை வைத்துக் கொள்ள முடியும் என்பது அந்தக் கட்சியின் நிலைப்பாடாகத் தெரிகிறது. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ரெலோ, புளொட்டைப் பொறுத்தவரையில் தனியாகப் போட்டியிடுவது அதிக ஆதாயத்தை கொடுக்காது. வட்டாரங்களில் செல்வாக்குமிக்க வேட்பாளர்களை நிறுத்துவதில் இந்தக் கட்சிகளுக்கு சிக்கல்கள் உள்ளன.
புளொட் தனித்தனியாகப் போட்டியிட விரும்பவில்லை. கூட்டமைப்பாகவே போட்டியிடுவோம் என்கிறது.
தமிழ் அரசுக் கட்சி தனியாகப் போட்டியிட முடிவு செய்தாலும், நாங்கள் கூட்டமைப்பாகவே எதிர்கொள்வோம் என்று, புளொட் கூறுகிறது.
கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டதொரு கட்சியோ, அதற்கென தனியானதொரு சின்னமோ கிடையாது. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில், அதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.
2004இற்குப் பின்னர் தமிழ் அரசுக் கட்சியின் பெயரில், வீடு சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிட்டால், வீடு சின்னத்தில் கூட்டமைப்பு போட்டியிட முடியாது.
ரெலோவும், புளொட்டும் பொதுச் சின்னத்தைப் பெற வேண்டும். அது சாத்தியமா அல்லது ஏதாவதொரு சின்னத்தில் போட்டியிடுவதா என்று முடிவு செய்ய வேண்டும்.
அதுவும் கிட்டத்தட்ட தனித்தனியாகப் போட்டியிடுவதாகவே அமையும். தற்போதைய உள்ளூராட்சித் தேர்தல் முறை, வட்டார ரீதியான தெரிவு முறையைக் கொண்டிருந்தாலும், அதனைக் கொண்டு சபைகளில் ஆதிக்கம் செலுத்த முடியாது.
வட்டாரங்களில் வெற்றி பெற்றாலும், விகிதாசார முறை அந்த வெற்றியை குறைமதிப்புக்குட்படுத்துவதாக உள்ளது.
வட்டார முறையில், இரண்டாம் இடம்பிடித்த கட்சி அல்லது அதற்கடுத்த நிலைகளில் உள்ள கட்சிகளுக்கு ஆசனங்களைப் பகிருவதில், விகிதாசார முறை அதிக முன்னுரிமை கொடுக்கிறது. இதனால் பெரும்பாலான சபைகள் தொங்கு நிலையில் காணப்பட்டன.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு தேர்தலுக்குப் பின்னர் கூட்டு வைத்துக் கொள்வது, வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தலாம்.
ஆனால், கொள்கை ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைவடையத் தொடங்கும், தனித்துவப் பாணியிலான முடிவுகள் எடுக்கப்படும். ஒற்றுமை குறையும்.
தமிழ்த் தேசிய நலனை நோக்கிய அரசியல் முனைப்புகளிலும், மாகாண சபை, மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடும் முனைப்புகள் தீவிரமடையும்.
ஏற்கனவே, சிங்களப் பேரினவாதச் சிந்தனைக் கட்சிகள் மற்றும் அவற்றுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ள கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான நிலை தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்காளிகளும், எதனை முன்னிறுத்தி உள்ளூராட்சித் தேர்தல் வியூகத்தை வகுக்கப் போகின்றன என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.
(கபில்)