“ஒருவர் பலவந்தமாக – அவரது விருப்புக்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அல்லது, தடுத்து வைக்கப்பட்டிருந்தால், கடத்தப்பட்டிருந்தால், அவரை மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி தாக்கல் செய்வது தான் ஆட்கொணர்வு மனு”“போரின் முடிவில் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என்று இராணுவம் கூறிவந்த நிலையில்- வவுனியா மேல்நீதிமன்றத்தின் உத்தரவு, எழிலன் சரணடைந்தார் என்பதை ஏற்றுக் கொள்வதாக உள்ளது”

போரின் இறுதிக்கட்டத்தில், இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவனான எழிலனை, மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி, அவரது மனைவியான அனந்தி சசிதரன் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கடந்த வாரம் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு அனந்தி சசிதரனும், குறித்த சம்பவத்தில் காணாமல் ஆக்கப்பட்ட, மேலும் நான்கு பேரின் உறவினர்களும், இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற வவுனியா மேல்நீதிமன்றம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், குறித்த மனு தொடர்பான விசாரணை நடத்தி, தம்மிடம் பாரப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்துக்கு கட்டளையிட்டிருந்தது.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, அது தொடர்பான அறிக்கைகள் மேல்நீதிமன்றுக்கு வழங்கப்பட்டு, அதனைப் பரிசீலித்த பின்னர், கடந்த வாரம், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு மனுவை போதிய சாட்சியங்களை முன்வைக்கவில்லை என்று நிராகரித்த வவுனியா மேல்நீதிமன்றம், அனந்தி சசிதரனின் வழக்கில் எழிலனை மார்ச் 22ஆம் திகதி மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று இராணுவத்தினருக்கு கட்டளையிட்டிருக்கிறது.

இல்லையேல் அதற்கான காரணங்களை முன்வைக்குமாறும், உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று மனுக்கள் மீது ஜனவரி மாதம் நடுப்பகுதியில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

இந்த ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னரே, இந்த உத்தரவைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

ஒருவர் பலவந்தமாக – அவரது விருப்புக்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அல்லது, தடுத்து வைக்கப்பட்டிருந்தால், கடத்தப்பட்டிருந்தால், அவரை மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி தாக்கல் செய்வது தான் ஆட்கொணர்வு மனு.

இவ்வாறான மனுக்கள் அவசர அடிப்படையில் விசாரித்து, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும். நபரின் பாதுகாப்புக் கருதி, அது அவசியமானதும் கூட.

எழிலன் உள்ளிட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு, வரும் மே மாதத்துடன் 14 ஆண்டுகளாகின்றன.

2009 மே18 ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த அவர்கள், பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டதை, அனந்தி சசிதரன் மற்றும் பலர் நேரடியாக கண்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் தான் இந்த மனுக்களை அவர்கள் தாக்கல் செய்தனர். ஆனாலும், எழிலனை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு உத்தரவை பெற்றுக் கொள்வதற்கு, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்தை அவர்கள் செலவிட நேர்ந்திருக்கிறது.

இது போர்க்கால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீதியை அடைவதற்கு எதிர்கொள்ளும் பாரிய சவாலை வெளிப்படுத்தியிருக்கிறது.

நீண்ட போராட்டங்கள், அவமானங்கள், செலவுகளைச் சமாளித்தே பாதிக்கப்பட்டவர்களால், இவ்வாறான உத்தரவுகளைப் பெற வேண்டியிருக்கிறது.

இத்தகைய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பதை விட, இத்தகைய உத்தரவுகளைப் பெற்றுக் கொள்வதே கடும் சிரமமானதொன்றாக காணப்படுகிறது.

அனந்தி சசிதரன் அரசியலுக்கு வந்தவர் என்ற அடிப்படையில், அவரது முயற்சிக்கு பக்கபலம் அதிகம் இருந்திருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களைப் பொறுத்தவரையில், நிலைமைகள் அவ்வாறில்லை.

அவர்களில் ஒருவர் தடுக்கி விழுந்தால் கூட தூக்கி விட ஆளில்லாத நிலை இருக்கும் போது, நீதிமன்றப் படிகளில் ஏறி, நியாயம் கேட்கவும், தேவைப்படுகின்ற சான்றுகள், சாட்சிகளை ஒழுங்கமைக்கவும், வாய்ப்புகள் இல்லை.

ஆனால், எழிலன் வழக்கில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவு முக்கியமானது. இது போரின் முடிவில் அவருடன் சரணடைந்த நூற்றுக்கணக்கானவர்களின் நிலை பற்றிய கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது.

ஏனென்றால், சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட எழிலனை மார்ச் 22ஆம் திகதி இராணுவத்தினர் மன்றில் முன்னிறுத்த வேண்டும்.

அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் என்பதை மேல்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இராணுவத்தினர் குறிப்பாக 58ஆவது படைப்பிரிவினரிடம் அவர் சரணடையவில்லை என்று இராணுவத் தரப்பு வாதிட்ட போதும், அதனை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்று, மேல் நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எவ்வாறாக இருக்கும் என்பதற்கு முன்னதாக, போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைவு இடம்பெற்றிருக்கிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது முக்கியமானது.

ஏனென்றால், போரில் இறுதிக்கட்டத்தில் யாரும் தங்களிடம் சரணடையவில்லை என்று இராணுவத்தினர் கூறி வந்திருக்கின்றனர்.

இதே வழக்கின் விசாரணையின் போது, ஒரு கட்டத்தில், 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்த்தன, போரின் முடிவில் சரணடைந்தவர்களின் பட்டியல் தமது படைப்பிரிவின் தலைமையகத்தில் இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார்.

அதனை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இரண்டு மூன்று தவணைகளாக மன்றில் முன்னிலையாகாமல் தவிர்த்திருந்தார்.

பின்னர், அவ்வாறான பட்டியல் எதுவும் இல்லை, புனர்வாழ்வு ஆணையாளரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலே தங்களிடம் உள்ளது என்று இராணுவத்தின் சட்டப்பிரிவின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சமர்ப்பணம் செய்திருந்தார்.

அதுபோன்றே, ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் இறுதிக்கட்டப் போரில் சரணடைந்தவர்கள் தொடர்பான பட்டியலைக் கோரிய போது, அதற்குப் பதிலளிக்க மறுத்து வந்தது இராணுவத் தலைமையகம்.

தகவல் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அளித்த பதிலில், யாரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என்று கூறியிருந்தது.

போரின் முடிவில் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர் அவர்களை அப்படியே ஏற்றிக் கொண்டு போய், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பொறுப்பில் இருந்த இடைத்தங்கல் முகாம்களில் ஒப்படைத்தோம் என்று இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டிருந்தது.

போரின் முடிவில் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என்று இராணுவம் கூறிவந்த நிலையில்- வவுனியா மேல்நீதிமன்றத்தின் உத்தரவு, எழிலன் சரணடைந்தார் என்பதை ஏற்றுக் கொள்வதாக உள்ளது.

இது சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எல்லோருடைய வழக்குகளிலும் முக்கியமானதொரு திருப்பம் ஆகும்.

இவ்வாறான நிலையில், வவுனியா மேல் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, எழிலனை இராணுவம் மன்றில் முன்நிறுத்துமா?

அல்லது சில தவணைகள் இழுத்தடித்து விட்டு, ஏதேனும் விளக்கம் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு தருவதாக கூறுகிறது.

அத்துடன், அண்மையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவதை இராணுவத்தினர் வரவேற்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இராணுவத்தினர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிப்பதற்கு விரும்புகிறார்கள், என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இராணுவத்தினர் மீது நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதை பல சர்வதேச விசாரணைகள், நீதிமன்ற உத்தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

வவுனியா மேல்நீதிமன்ற உத்தரவும் அதனைத் தான் செய்திருக்கிறது. இவ்வாறான நிலையில், தாங்கள் குற்றமிழைக்கவில்லை என்பதை அவர்கள் எவ்வாறு நிரூபிக்கப் போகிறார்கள்?

எழிலன் தங்களிடம் சரணடையவில்லை என்பதை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாமல் போன இராணுவத் தரப்பு, போர்க்காலத்தில் மீறல்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று எவ்வாறு நிரூபிக்க முடியும்?

(கார்வண்ணன்)

Share.
Leave A Reply