“விக்னேஸ்வரனின் கடிதத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள பதிலில், சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்ற கூட்டம் உத்தியோகபூர்வமானதல்ல என்று கூறியிருக்கிறது. அவ்வாறாயின், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் உத்தியோகபூர்வமற்றதா- அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லையா?”
சுதந்திர தினத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு என்ற வாக்குறுதியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ள நகர்வுகளில் ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்த தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது பரபரப்படையத் தொடங்கியிருக்கின்றன.
கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மாநாட்டுக்குப் பின்னர், கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமா அதிபருடன் அந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
அதேவேளை தமிழ்க் கட்சிகளின் தரப்பில் இரா.சம்பந்தனும், எம்,ஏ.சுமந்திரனும் மாத்திரம் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளை பெப்ரவரி 4ஆம் திகதிக்குள் பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கு பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டிருக்கிறது.
இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கும் ஜனாதிபதியினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்களை ஜனவரி 10ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 4 நாட்கள் நடத்துவதற்கும் இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று விடயங்களும் முக்கியமானவை.
ஆனால், இந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட போது, தமிழர் தரப்பில் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் யாரும் இருக்கவில்லை.
முன்னர், தாங்கள் பங்கேற்காத பேச்சுக்களில், இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தால், யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்று குறிப்பிடும் வழக்கத்தை தமிழ்த் தலைவர்கள் பலர் கொண்டிருந்தனர். இப்போது அப்படி யாரும் கூறவில்லை.
கடந்த 21ஆம் திகதி சந்திப்பை ஜனாதிபதி செயலகம் ஒழுங்கு செய்ததா- சுமந்திரன் ஒழுங்கு செய்தாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏனென்றால், சுமந்திரன் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.
தானோ, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தனோ கொழும்பில் இல்லாத நேரம் பார்த்து இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது என்றும் அவர் விசனம் வெளியிட்டிருக்கிறார்.
சுமந்திரன் தொலைபேசியில் தனக்கும், ஏனைய தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார் என்றும், தங்களால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதால், அதனைப் பிற்போடுமாறு அவரிடம் கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் விக்னேஸ்வரன்.
ஆனால் திட்டமிட்டபடி அந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. சில முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
எடுக்கப்பட்ட முடிவுகள் ஒன்றும் பாதகமானவை அல்ல. ஆனால் சி.வி.விக்னேஸ்வரனும், ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் பரபரப்படைந்திருக்கின்றனர்.
தாங்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவு சரிப்பட்டு வந்து விட்டால், அந்தப் பெருமையை சுமந்திரன் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுவாரோ என்ற பதற்றம் அவர்களிடம் தொற்றிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
இங்கு அவர்கள் சம்பந்தனை பிரச்சினையாக கருதவில்லை. அவரால் அவர்களுக்கு இப்போது பிரச்சினையுமில்லை.
ஏனென்றால் சம்பந்தன் இப்போது சுமந்திரனின் முழுமையான நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்ற நிலைக்கு வந்து விட்டார். இதனால் சுமந்திரன் மீது தான் தமிழ்க் கட்சித் தலைவர்கள் கவனமாக இருக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், சட்டமா அதிபர் சகிதம் நடத்திய அந்தச் சந்திப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.
சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுவது போன்று, சுமந்திரன் கேட்டுக் கொண்டதால் ஏற்பாடு செய்யப்பட்ட திடீர் கூட்டமாக இருந்தாலும், ஜனாதிபதி செயலகம், ஏனோ தானோ என்று அதனை ஒழுங்கு செய்யவில்லை.
அதேவேளை, ஜனாதிபதி செயலகம், கூட்டத்துக்கான அழைப்பை, நேரடியாக, கட்சித் தலைவர்களுக்கு விடுத்திருக்க வேண்டும். அது தான் முறை.
சுமந்திரனின் ஊடாக அந்த அழைப்பு விடுக்கப்பட்டதும் கூட, தமிழ்க்கட்சித் தலைவர்கள் அதில் பங்கேற்காமல் தவிர்த்தமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. போதிய காலஅவகாசம் இல்லை என்ற காரணத்தை அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
விக்னேஸ்வரனின் கடிதத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகம் அந்தக் கூட்டம், உத்தியோகபூர்வமானதல்ல என்று கூறியிருக்கிறது.
அவ்வாறாயின், அந்த உத்தியோகபூர்வ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் உத்தியோகபூர்வமற்றதா- அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லையா என்ற கேள்வி உள்ளது.
குறித்த கூட்டத்தில் அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு, காணிகள் விடுவிப்பு போன்றன குறித்து எடுக்கப்பட்ட சாதகமான முடிவுகள் கைவிடப்படுவது அல்லது தாமதமடைவது எந்த வகையிலும், தமிழ் மக்களுக்கு ஆதாயமானதல்ல.
தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள், ஒவ்வொருவரும் தாங்களே வெற்றியாளர் என்பதாக காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க எதையோ ஒன்றை செய்யப் போகிறார் – அது எந்தளவுக்கு காத்திரமானதாக இருக்கும் என்ற கேள்விகள் இருந்தாலும்- அதனை மற்றவர் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடக் கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கின்றனர்.
அதனால் தான், அவர்கள் இந்தச் சந்திப்பை அடுத்து பரபரப்படைந்திருக்கின்றனர். சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் அதனை தெளிவாகப் பிரதிபலித்திருக்கிறது.
ஜனாதிபதி தரப்பும், தமிழர் தரப்புடன் பேச்சுக்களை நடத்த முனையும் போது அனைத்து தரப்பினரையும், ஒன்றிணைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு ஒழுங்கு செய்வதற்கு ஜனாதிபதி தரப்பு ஏன் தவறியது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழர் தரப்பு குழப்பமடையும், அவர்களுக்குள் பிளவு ஏற்படும் என்பது தெரிந்த விடயம் தான்.
பிளவுகளைப் பயன்படுத்தி அரசியல் செய்வதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதேர்ந்தவர். விடுதலைப் புலிகளிடமும் கூட அவர் தன் வித்தையைக் காண்பித்தவர்.
தமிழர் தரப்பு ஒற்றுமையாக சமஷ்டியை வலியுறுத்தும் போது, அதனை எதிர்கொள்வது ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிக்கலானதாக இருக்கும்.
எனவே, தமிழ்க் கட்சிகளை ஒன்றை ஒன்று முரண்பட வைப்பதன் மூலம், தன் மீதான அழுத்தங்களை குறைத்துக் கொள்ள, ஜனாதிபதி முற்படுகிறாரா என்ற கேள்வியும் உள்ளது.
அதேவேளை, தமிழ்க் கட்சிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற போது, நேரம், காலம், ஈகோ போன்றவற்றில் இருந்து வெளியே வர வேண்டும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்த அனுபவத்தை அவர்கள் பாடமாக கொள்ள வேண்டும்.
மாவை சேனாதிராசா பங்கேற்க முடியவில்லை என்பதால், இரா.சம்பந்தனின் உடல் நிலையைக் காரணம் காட்டி பிற்போடப்பட்ட இந்தியப் பிரதமருடனான சந்திப்பு, பல மாதங்களாகியும் இன்னமும் நடக்கவில்லை.
தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகளும் தலைவர்களும், ஒவ்வொரு நிமிடத்தையும் அதற்காக அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும்.
சந்தர்ப்பங்களைத் தவற விட்டு விட்டு, பின்னர் வருந்தக் கூடாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னதாக, தமிழ் மக்களின் நடைமுறைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதனை தாம் முன்னெடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தலைமைகள் தங்களுக்கிடையிலான போட்டி பூசல்களை ஒதுக்கி விட்டு, இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அது தான் அவர்களுக்கு நல்லது. அத்துடன் தமிழர் தரப்பை குழப்பி விட்டு ஏமாற்றி விடலாம் என்று காத்திருக்கும் தரப்புகளுக்கும் அதுவே சரியான பதிலடியாக அமையும்.
-கபில்-