கோவை: கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்து இருக்கும் நிலையில், நிலையில், ஈசா யோகா மையத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல் முறையல்ல என்றும், பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 40). தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுபஸ்ரீ (வயது 34) திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சுபஸ்ரீ கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சி பெற்று உள்ளார்.
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம்
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி காலை முன்பாக மீண்டும் யோகா பயிற்சியில் கலந்து கொள்ள ஈஷா யோகா மையத்துக்கு சென்று உள்ளார் சுபஸ்ரீ.
அதன் பின்னர் அங்கு நடைபெற்ற யோகா பயிற்சி வகுப்பில் அவர் கலந்து கொண்டு உள்ளார். பின்னர் அவரை அழைத்துச் செல்ல கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையம் வந்து இருக்கிறார்.
சுபஸ்ரீ எங்கே போனார்?
பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிடவே தனது மனைவி வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த கணவர் வரவேற்பு அறையில் உள்ளவரிடம் தனது மனைவி குறித்து கூறியுள்ளார்.
உடனடியாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது அவர் நேற்று காலை 9:30 மணிக்கு கால் டாக்ஸியில் ஏறி சென்றது தெரியவந்து உள்ளது.
போலீசில் புகார்
சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநரை விசாரணை செய்த போது அவர் சுபஸ்ரீயை இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டு சென்றது தெரியவந்து உள்ளது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் ஒரு பெண் ஓடிச் செல்வதை போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இது குறித்து பழனிக்குமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கிணற்றில் மிதந்த சடலம்
இதனை அடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சுபஸ்ரீயை தேடி வந்தனர். இந்த நிலையில் செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உயிரிழந்த சுபஸ்ரீ
இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டெடுத்தனர்.
அப்போது அது சுபஸ்ரீயாக இருக்க கூடும் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. உடனே பழனிகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த பழனிக்குமார் இறந்தது சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்தார்.
போலீசார் தொடர் விசாரணை
இதனையடுத்து சுபஸ்ரீயின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. ஈஷா யோகா மையத்திலிருந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கபட்டு உள்ள நிலையில் போலீசார் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது